TNPSC Thervupettagam

எல்லைப்புறத்திலே ஓர் எரிகொள்ளி

January 9 , 2020 1831 days 919 0
  • உலக மக்கள்தொகையில் அதிகமாக இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள்; நாடுகளில் எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கின்ற நாடுகள் இஸ்லாமிய நாடுகள்.  ஆனால், எந்த இஸ்லாமிய நாட்டிலும் நிலவரம் எப்படி என்றால், எப்போதும் கலவர பூமிதான். 
  • பெருமானார் நபிகள் நாயகம் அரியதொரு அறவாழ்வை வாழ்ந்து  காட்டினார்.  அவர் நடந்து காட்டிய வழியில் நடப்பது கடினமா?  எத்தகைய அறநூலை ஆண்டவனிடமிருந்து இறக்குமதி செய்து கொடுத்தார். அந்தப் புனித நூலைப் போற்றி நடக்க வேண்டாமா? 
  • பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணகர்த்தாவாகிய ஜின்னா சொன்னார், "நான் சாவதற்கு முன் ஒரு நாள் பாகிஸ்தான் பிரிவினைக்காக, மெத்த வருத்தப்படுவேன்என்று. அவர் உண்மையில் வருத்தப்பட்டாரோ என்னவோ, ஆனால் இன்று அடுத்திருக்கும் நாடுகள் அனைத்தும் மொத்தமாக வருத்தப்படுகின்றன. 

பரிசுத்த பூமி

  • பாகிஸ்தான் என்ற சொல்லுக்குப் பரிசுத்த பூமி என்று பொருள்.  ஆனால், இன்று அங்கே நகரங்கள், நரகங்களாக இருக்கின்றன.  கொலை, திருட்டு முதலானவை அந்த நாட்டின் தேசிய கலாசாரங்கள் ஆகிவிட்டன. கான் அப்துல் கஃபார் கான் எனும் தியாகி, தம் கண்ணியத்தால் காத்த பூமி, இன்று துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்படுகிறது. 
  • அந்த நாட்டைச் சில ஆண்டுகள் ஆண்ட ஜுல்ஃபிகர் அலி புட்டோவை அந்த நாடே தூக்கிலிடப் போகும்போது, உலக நாடுகள் அனைத்தும் கருணை மனுக்கள் போட்டன. என்றாலும், அவை அந்த நாட்டின் இரும்புச் செவிகளில் விழவில்லை. இந்தியர்களை நாய்கள் என ஐ.நா. சபையிலேயே ஏசியவர் புட்டோ! என்றாலும், அவருக்கு தூக்குத் தண்டனை தரக்கூடாது என இந்தியா வேண்டியது.  அதுவும் எதேச்சதிகாரத்தின்முன் எடுபடவில்லை. 
  • அடுத்து, அந்த நாட்டிலேயே பிரதமராக இருந்த புட்டோவின் மகளாகிய பேநசீர்  புட்டோவைச் சுட்டுக் கொன்றது அந்தப் புண்ணிய பூமி. அந்த நாட்டின் ராணுவத் தளபதியாகவும், அதிபராகவும் திகழ்ந்த முஷாரஃபின் கழுத்துக்கு தூக்குக் கயிற்றை இப்போது தயாரித்து வைத்திருக்கிறது.   
  • 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானின்  அதிபராக யாஹ்யா கான்  இருந்தபோது, கிழக்குப் பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்கதேசம்) எதிராக நடத்திய பயங்கரப் போரில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்; அறிவுஜீவிகளின் தலைகள் துண்டாடப்பட்டன.  வங்கதேச மங்கையரை பாகிஸ்தான் ராணுவத்தினர்  பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, காலம் எல்லாம் கண்ணீர் வடிக்கச் செய்தனர். 
  • வங்கதேசம் பிரிந்த பிறகு, அந்த விடுதலைப் போரின் கதாநாயகராகத் திகழ்ந்த முஜிபுர் ரஹ்மானைக் கொல்வதற்கு முன்பேயே, புதைப்பதற்குரிய குழியை வெட்டி வைத்தார்கள் அந்தப் பாதகர்கள்.
  • அந்தக் கொடுமைகளைக் கேட்டுக் கொந்தளித்த கவியரசர் கண்ணதாசன், "பாஞ்சாலிப் பூந்துகிலைப் பற்றி இழுக்கையிலே ஆண்சாதி நானென்று ஆங்குவந்த கோபாலன், மான்சாதி வங்கதேச மங்கையரின் கண்ணீரை ஏன் காணவில்லை? எனக்கெதுவும் புரியவில்லை.  அர்ச்சுனருக்குப் போதித்த அண்ணல் பரந்தாமன், நிக்சனுக்குப் போதிக்க நேரம் கிடைக்கவில்லையா? எனவும், "காட்டுமிருகமதைக் கலந்து பெற்ற மகன் யாஹ்யா கான்' எனவும் வெகுண்டு பாடினார்.

பயங்கரவாதம்

  • கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதியன்று, அனைத்து இந்தியர்களின் கண்களிலும் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது பாகிஸ்தானியரின் பயங்கரவாதம்.  காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில்  40 துணை ராணுவத்தினர் பலியாயினர்.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், சிவச்சந்திரன் ஆகிய  இரண்டு மாவீரர்களும் உண்டு.
  • இதே போன்று கடந்த ஆண்டு மே 31-ஆம் தேதி சரண்ஜித் சிங் என்ற சீக்கிய குரு, பெஷாவரின் தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒரு சீக்கிய மருத்துவர் சோரன் சிங் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • புல்வாமா படுகொலைகளுக்கு மூளையாகச்  செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசாருக்குத் தடை விதிக்க ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்கா நேரடியாக வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.  எனினும், அந்தப் புல்லாங்குழல் நாதம், அந்த வெறியர்களின் காதில் விழவில்லை. 
  • எனவே, புல்வாமா பயங்கரவாதத்துக்குச் சூத்திரதாரியான ஜெய்ஷ் ஏ முகமது இயக்கத் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது.  இப்போது மேலும், அந்தத் தேசம் தவறுக்கு மேல் தவறு புரிந்துகொண்டு தறிகெட்டு நிற்கிறது. 
  • "மதம் மக்களுக்கு ஓர் அபின்' எனக் கூறிய காரல் மார்க்சின் கருத்து, மற்ற நாடுகளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, பாகிஸ்தானுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்துகிறது.    பிளேக்  நோய்போல், காலராவைப்போல், பன்றிக் காய்ச்சலைப்போல் பாகிஸ்தானில் அண்மைக்  காலங்களில் ஒரு நோய் பரவி வருகிறது.  அதாவது  ஹிந்து, சீக்கியப் பெண்களைக் கடத்திக் கொண்டுபோய், இஸ்லாமிய இளைஞர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் நோய் என்பதே அது. 

மதவழிபாட்டுத் தளங்கள்

  • மேலும், சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலங்களைச் சின்னாபின்னப்படுத்துவதும், அவர்களின் உயிருக்கு உலை வைப்பதுவும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது அந்த மண்ணில்! அண்மையில் ஜகஜித் கெளர் எனும் சீக்கியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பஞ்சாபைப் பதற வைத்தது. பயங்கரவாதிகளால் ஜகஜித் கெளர் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். 
  • பாகிஸ்தானில் மதவெறி முற்றி, இஸ்லாமிய மதத்தினரின் இருவேறு பிரிவினருக்கிடையே (ஷியா முஸ்லிம் - சன்னி முஸ்லிம்) மதபோதை தலைக்கேறி விட்டது. அதனால், பஷ்தூன் மக்களின் மசூதிகள் தகர்த்தெறியப்பட்டன. முகம்மது கலீல் என்பவர் என்கவுன்ட்டரில் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். 
  • மண்ணில் நிற்கும்போது மண்ணைக் கூறுபோடுகின்ற மமதைக்காரர்கள், விண்ணையும் பங்கு போடத் தயங்குவதில்லை. கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்லத் திட்டமிட்ட இந்திய  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வான் எல்லையைக் கடப்பதற்குப் பாகிஸ்தான் அரசிடம்  அனுமதி கேட்டார். ஆனால், அடிப்படை நாகரிகம்கூடத் தெரியாத அந்த அரசு அனுமதி மறுத்துவிட்டது. 
  • அண்மையில் லாகூரில் நிகழ்ந்த வன்முறை, 1947-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின்போது நேர்ந்த படுகொலைகளை நினைவுபடுத்தியது. இடையில் ஏற்பட்ட சர்ச்சையில், லாகூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.  
  • பாகிஸ்தான் பெஷாவரில் அண்மையில் நடந்த படுகொலை (4.1.2020), இந்தியா உள்பட உலகையே நடுங்க வைக்கக்கூடியது.  பாகிஸ்தானில் ஷாங்க்லா மாவட்டத்தில் "கைபர்பக்தூன்குவா' என்னுமிடத்தில் பிறந்தவர் ரவீந்தர்சிங். மலேசியாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அந்த இளைஞர் சென்ற மாதம் தம்முடைய திருமணத்தை முன்னிட்டு, பிறந்த மண்ணுக்கு வந்தார்.  ஜாகிர் கெளர் என்ற பெண்ணுக்கும் 25 வயதுடைய ரவீந்தர் சிங்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  சொந்த ஊரிலிருந்து திருமணத்துக்கான பொருள்களை வாங்குவதற்காகபெஷாவருக்கு வந்தார் ரவீந்தர் சிங்.  ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள், அந்த இளைஞனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.  
  • ரவீந்தர் சிங்கின் உயிர் போனது மட்டுமின்றி,  மணப் பெண்ணாகிய ஜாகிர் கெளருக்கு வாழ்க்கையே போயிற்று. அம்ருதா ப்ரீதம் எனும் பஞ்சாப்பின் பாட்டுக்குயில் மகிழ்ந்து - சிலிர்த்து - புகழ்ந்து பாடிய எழில்மிகு லாகூரின் செழிப்பும் வனப்பும், இன்று துப்பாக்கித் தோட்டாக்களால் சீரழிகின்றன. 

காயிதே மில்லத்

  • மத வெறியர்களின் நிழல்கூடத் தம் மீது படக்கூடாது என வாழ்ந்தவர் கண்ணியம் மிக்க காயிதே மில்லத். இந்தியாவின் பொது மொழியாகத் தமிழ்தான் இருக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் முழங்கியவர். அந்தப் பெருந்தகை ஹஜ் யாத்திரை சென்றபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.  தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் ஓடிப்போய் தொழுது கொண்டிருந்த மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தனர்.
  • அந்த மருத்துவர் அருகில் வந்ததும், "அந்த மருத்துவர் யார்?' என பெருந்தகை காயிதே மில்லத் கேட்டார்.  அவர் பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கும் மருத்துவர் என அருகில் இருந்தவர்கள் கூறினர்.  "அந்த மருத்துவரைப் போகச் சொல்லுங்கள், யாராவது இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒரு மருத்துவரை அழைத்து வாருங்கள்! என் உயிர் போவதாக இருந்தாலும், ஓர் இந்தியரின் மடியில்தான் போக வேண்டும்' எனச் சொன்னார் பெருந்தகை காயிதே மில்லத்.  அத்தகைய சமரசவாதியின் வாசகம் ஒலித்தாவது, பாகிஸ்தானின் பயங்கரவாதம் துடைத்தெறியப்படட்டும். 
  • ஒரு காலத்தில் கிழக்கு வங்கதேசத்தைப் பற்றிய பயங்கரவாதம், அடுத்து அந்த நாட்டிலுள்ள 15 சதவீத பஷ்தூன் பழங்குடிமக்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கும் பயங்கரவாதம், இப்போது பாகிஸ்தான் சிறுபான்மையினரின் மீதும் பாயத் தொடங்கியிருக்கிறது. எல்லைப்புறத்திலிருக்கும் கொள்ளியின் மீது ஒரு கண்ணாக இருப்பது நல்லது. 

நன்றி: தினமணி (09-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்