TNPSC Thervupettagam

எல் நினோவால் என்னவாகும் உலகம்

June 6 , 2023 398 days 245 0
  • தென் அமெரிக்கக் கடற்பகுதிக்கும் இந்தியப் பருவமழைக்கும் என்ன நேரடித் தொடர்பு இருந்து விடப் போகிறது என்று தோன்றலாம். மிக ஆழமான தொடர்பு இருக்கிறது என்பதே ‘எல் நினோ விளைவு’ உணர்த்தும் செய்தி.
  • எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation) என்பது கிழக்கு பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பு. இதில் முதன்மையாக இரண்டு நிலைகள் உண்டு: ஒன்று, எல் நினோ (El-Nino) எனப்படும் வெப்பமான காலகட்டம்; மற்றொன்று, லா நினா (La Nina) என்று அழைக்கப்படும் குளிர்ந்த காலகட்டம். இரண்டுக்கும் இடையிலான சமநிலை (Neutral Phase) காலகட்டமும் உண்டு.
  • தெற்கு அலைவு ஓர் இயற்கைச் சுழற்சி. பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்படும் காற்று, கடல்பரப்பு வெப்பநிலை மாற்றங்களால் உந்தப்பட்டு, இந்தத் தெற்கு அலைவு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எல் நினோவாகவும் லா நினாவாகவும் வெளிப்படும். தென் அமெரிக்கக் கடற்பகுதியில் ஏற்படும் இந்த நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள காலநிலையைப் பாதிக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக, உலக நாடுகளின் சராசரி வெப்பநிலை, மழைப் பொழிவு ஆகியவை தெற்கு அலைவைப் பொறுத்தே அமையும்.

நெருங்கிவரும் பாதிப்பு:

  • சில பத்தாண்டுகளாக இந்த இயற்கைச் சுழற்சியின்மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, புவி வெப்பமாதலால் கடலில் தேவைக்கு அதிகமாகச் சேரும் வெப்பம், இந்த அலைவின் இயற்கையான செயல்பாடுகளை மாற்றியமைக்கிறது. 1960 முதல் காலநிலை மாற்றம் எல் நினோ தெற்கு அலைவைப் பாதித்துவருகிறது என்று 2020இல் வெளியான ஓர் ஆஸ்திரேலிய ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. எல் நினோ, லா நினா காலகட்டங்கள் காலநிலை மாற்றத்தால் தீவிரமானவையாக மாறுகின்றன என்று அந்த ஆய்வுக் குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
  • முந்தைய ஓர் ஆய்வில், காலநிலை மாற்றத்தால் தெற்கு அலைவில் நேரடி வேறுபாடுகள் தென்படுவதற்கு 2070 வரை ஆகலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய ஆய்வுகள், 2030லேயே இந்த வேறுபாடுகள் வந்துவிடும் என்று எச்சரிக்கின்றன. நாம் எதிர்பார்த்ததைவிடவும் பல பத்தாண்டுகள் முன்னதாகவே பாதிப்புகள் நேரலாம் என்ற கணிப்பு, காலநிலை வல்லுநர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • 2020 முதல் லா நினா எனப்படும் குளிர் காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். குளிர் காலகட்டம் என்றாலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் சராசரி வெப்பநிலை அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, கோடைக்காலங்களில் பல நாடுகளில் வெப்ப அலை வீசியது. காலநிலை மாற்றம் எந்த அளவுக்குத் தீவிரமடைந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நாம் எதிர்கொண்ட வெப்பத்தைவிட மோசமான நிலை இனிமேல்தான் வரப்போகிறது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது எச்சரிக்கின்றனர். “சொல்லப்போனால், இந்த லா நினா காலகட்டம் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்புக்கு ஒரு சிறிய வேகத்தடை போலச் செயல்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார், உலக வானிலை ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பெட்டெரி தாலஸ்.

தீவிர எல் நினோ:

  • 2023 இன் இறுதிக்குள் லா நினா காலகட்டம் முடிவடைந்து, எல் நினோ காலகட்டம் தொடங்கி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ‘சூப்பர் எல் நினோ’ எனப்படும் தீவிர எல் நினோவாக இருக்கலாம் என்கிற அச்சமும் பெருவாரியாக எழுந்திருக்கிறது. உலக அளவிலான ஏழு காலநிலை மாதிரிகள் அடிப்படையில் ஆராய்ந்ததில், தீவிர எல் நினோ வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
  • தீவிர எல் நினோ காலகட்டத்தில் தீவிர வானிலை நிகழ்வுகள், வெள்ளப்பெருக்குகள், காலநிலைப் பேரிடர்கள் ஆகியவை அதிகமாக ஏற்படும் என்று அறிவியல் சொல்கிறது. பசிபிக் கடலின் சராசரி வெப்பநிலையானது வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, இதுபோன்ற தீவிர எல் நினோ நிகழ்வுகள் ஏற்படும். ஒவ்வோர் ஆண்டும் கடற்பரப்பின் வெப்பநிலை (Sea Surface Temperature) அதிகரித்துக்கொண்டே செல்வதால், இது நிகழ்வதற்கான சாத்தியம் அதிகமே.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

  • இந்தியாவின் பருவமழையை நெறிப்படுத்துவதில் எல் நினோ தெற்கு அலைவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியப் பெருங்கடலின் நீரோட்டங்களை மாற்றியமைத்து, வளிமண்டல அடுக்குகளில் சலனத்தை ஏற்படுத்துவதன்மூலம், இந்தியப் பருவமழைப் பொழிவைத் தெற்கு அலைவு பாதிக்கிறது. இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) என்கிற ஒருவகை அலைவு, அட்லான்டிக் கடற்பகுதியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் போன்ற பிற காரணிகளுக்கும் இதில் பங்கு உண்டு. ஆனாலும், ஓர் ஆண்டில் பருவமழை எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் சுமார் 30% பங்களிப்பு தெற்கு அலைவுக்கே உரியது.
  • குறிப்பாக, எல் நினோ காலகட்டத்தில் பருவமழை குறைவாக இருக்கும் என்பதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்தியக் காலநிலையின் 132 ஆண்டு ஆவணங்களை ஆராய்ந்ததில், எல் நினோ காலகட்டங்களில் எல்லாம் இந்தியாவில் வறட்சியோ பஞ்சமோ ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
  • வெப்பநிலை அதிகரிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது, நோய்கள் அதிகரிப்பது, பருவமழை குறைவது, கடல்-நீர்நிலைகளில் மீன்வரத்து குறைவது, தீவனத் தட்டுப்பாட்டால் கால்நடை-கோழி வளர்ப்பில் வரும் சிக்கல்கள், உணவுப் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல் எனத் தீவிர எல் நினோ காலகட்டத்தில் பலதரப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
  • வரப்போகும் எல் நினோ ஆண்டுகளில் இந்தப் பாதிப்புகளில் எவையெல்லாம் நிகழும், பாதிப்புகள் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பது இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை. இந்தியப் பருவமழையைப் பாதிக்கும் பிற காரணிகளைப் பொறுத்து, சில அம்சங்கள் மாறுபடலாம். ஒருவேளை, தீவிர எல் நினோ வராவிட்டாலும்கூட, ஏற்கெனவே வெப்ப அலைகளை நாம் எதிர்கொண்டிருக்கும் சூழலில், வெப்பம் நிறைந்த எல் நினோவின் வருகையே கடினமான காலமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பொருளாதாரப் பாதிப்பு:

  • சில நாள்களுக்கு முன்பு ‘சயின்ஸ்’ இதழில் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரையில், வரப்போகும் எல் நினோ நிகழ்வால் உலக அளவில் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் நினோ நிகழ்வால் 2029க்குள் 3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம் என்று ஆய்வுக் குழுவினர் கணித்திருக்கிறார்கள்.
  • காலநிலையைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் உலக நாடுகள் சுணக்கம் காட்டிவரும் நிலையில், இதுபோன்ற ஆய்வுகள் முக்கியமாகின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றிய தரவுகள், உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அதை மட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கான உந்துசக்தியாகவும் இந்தக் கணக்குகள் அமையலாம்.
  • காலநிலையின் வீச்சு எல்லாவிதமான இயற்கை நிகழ்வுகளின்மீதும் படரத் தொடங்கிவிட்டது. பேரிடர்களுக்கான தயார்நிலை, பாதிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான திட்டங்களோடு காலநிலையைக் கட்டுப்படுத்துவதிலும் உலக நாடுகள் முனைப்புக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், மிகப்பெரிய பின்விளைவுகளை நாம் ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நன்றி: தி இந்து (06 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்