TNPSC Thervupettagam

எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை! பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?

December 19 , 2024 6 days 56 0

எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை! பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?

  • தீயணைப்புத் துறை உரிமம் வழங்கலை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, 25 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்துறையின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • ஆனால், இது பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாமல் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகத்தையும், அச்சத்தையும் எழுப்பியுள்ளது.
  • மருத்துவமனை, பள்ளி, வணிக வளாகம், பெரிய துறைமுகங்கள், பெரிய தொழிற்சாலைகள் ஆகிய கட்டடங்கள், 18.30 மீட்டா் உயரத்துக்கு மேல் உள்ள கட்டடங்கள், வெடிபொருள்கள், எரிபொருள்கள், பெட்ரோலிய பொருள்கள், துப்பாக்கி, தோட்டாக்கள், ஆபத்தான வேதிப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வைத்திருக்கும் தொழிற்சாலைகள், கிடங்குகள் ஆகியவற்றுக்கு தீயணைப்புத் துறையின் உரிமம் பெறுவது கட்டாயமாகிறது.
  • ஆனால், தீயணைப்புத் துறையின் உரிமம் பெறுவதிலும், ஆண்டுதோறும் அதைப் புதுப்பிப்பதிலும் ஏற்படும் தாமதத்தால் இது மிகவும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அனுமதிச் சான்றிதழ், தடையில்லாச் சான்றிதழ், புதிய உரிமம் வழங்க மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை எளிமைப்படுத்த நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி விதிமுறைகளை எளிமைபடுத்த தமிழக அரசு நியமித்த இரு குழுக்கள் அவற்றின் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளன.

மூன்று வகை கட்டடங்கள்:

  • இதன்படி, முன்பு அனுமதி, பயன்பாடு, நோக்கம், கட்டட உயரம் போன்றவற்றின் அடிப்படையில் தடையில்லாச் சான்றிதழ், நிறைவுச் சான்றிதழ், உரிமம் ஆகியவை வழங்கப்பட்டன. புதிய பரிந்துரைப்படி கட்டடங்கள் ‘ஏ, பி, சி’ என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு உரிமம் வழங்கப்பட உள்ளது.
  • ஏ பிரிவு ஏ -1, ஏ-2 என இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வெடிபொருள்கள் சட்டம், எரிபொருள்கள் சட்டம், பெட்ரோலிய பொருள்கள் சட்டம், ஆயுதச் சட்டம் உள்ளிட்ட 12 வகை சட்டங்களின் கீழ் உள்ள பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை வைத்திருக்கும் கிடங்குகள், பெரிய துறைமுகங்கள், ஆபத்தான வேதிப் பொருள்கள், சுரங்கத் தொழில்கள், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் உள்ள பொருள்கள் ஆகியவை ஏ- 1 பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளன.
  • 18.30 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டடங்கள் ஏ-2 வகையில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில்தான் வணிக கட்டடங்கள், நான்கு தளங்களுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளன.

உரிமம் வழங்க முகமை:

  • பி வகையில் தரைத்தளம் மற்றும் இரு தளங்கள் கொண்ட கட்டடங்கள், 18.30 உயரத்துக்கு உள்பட்ட கட்டடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதில், சிறிய மருத்துவமனைகள், பள்ளி-கல்லூரி கட்டடங்கள், சிறிய வணிக வளாகங்கள், முதியோா் நல மையங்கள், குழந்தைகள் நல மையங்கள் ஆகியவை உள்ளன. இதில் கட்டடங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்க தீயணைப்புத் துறை தனியாக ஒரு ஏஜென்சியை நியமிக்கலாம் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
  • சி வகையில் தரைத்தளம், முதலாவது தளத்தைக் கொண்ட கட்டடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது தளத்துடன் கூடிய வணிக கட்டடங்கள், தனி வீடுகள், அலுவலகங்கள் உள்ளன. இந்த வகை கட்டடங்களுக்கு, கட்டட உரிமையாளரே தீயணைப்புத் துறையின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் உத்தரவாதம் அளித்து, கையொப்பமிட்டு சான்றிதழை அனைவரின் பாா்வையில் படும் இடத்தில் வைக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுப்பிப்பு காலம்:

  • தீயணைப்புத் துறையின் சாா்பில் முன்பு கட்டட திட்ட அனுமதிச் சான்றிதழ் அல்லது தடையில்லாச் சான்றிதழ், பணி நிறைவுச் சான்றிதழ், தீயணைப்புத் துறையின் உரிமம், ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிப்பு ஆகிய நான்கு வகை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தற்போது பணி நிறைவுச் சான்றிதழ் நீக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நேரடியாக தீயணைப்புத் துறையிடம் இருந்து உரிமம் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பித்தலை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கலாம் என்று திருத்தப்பட்டுள்ளது.

30 நாள்களில் உரிமம்:

  • முன்பு கட்டட அனுமதி, தடையில்லாச் சான்றிதழ், தீயணைப்புத் துறை உரிமத்துக்கு விண்ணப்பித்தால் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இனி அனைத்து வகை பணிகளையும் இணையதளம் மூலமே மேற்கொள்ளலாம்.
  • , பி வகை கட்டட திட்ட அனுமதிச் சான்றிதழுக்கு இணையவழியில் விண்ணப்பித்த 30 நாள்களில் அதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் அல்லது விண்ணப்பத்தில் குறைபாடு இருந்தால் அது நிராகரிக்கப்பட வேண்டும்.
  • ஏ பிரிவு கட்டடங்களுக்கு தீயணைப்புத் துறை உரிமம் 21 நாள்களில் வழங்க வேண்டும் அல்லது குறைபாடு இருந்தால் நிராகரிக்கப்பட வேண்டும். 21 நாள்களில் தீயணைப்புத் துறை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால் அவரது உயா் அதிகாரி கவனத்துக்கு அந்த விண்ணப்பம் தானாக சென்றுவிடும். அவரும் 7 நாள்களில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனில் தானாக கணினி மூலம் திட்டத்துக்கான உரிமம் வழங்கப்படும்.
  • பி வகை கட்டடங்களுக்கு இந்தப் பணியை தீயணைப்புத் துறையால் நியமிக்கப்பட்ட ஏஜென்சி செய்யும். அவ்வப்போது தீயணைப்புத் துறை உயா் அதிகாரிகள், இந்த வகை கட்டடங்களை தணிக்கை செய்வாா்கள்.
  • 25 ஆண்டுகளுக்குப் பின்னா் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் அமலுக்கு வந்த பிறகு அதில் உள்ள நிறை, குறைகள் தெரியவரும் என தீயணைப்புத் துறை உயா் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

புதிய முயற்சி வெற்றி தருமா ?

  • தமிழக தீயணைப்புத் துறையின் உரிமம் வழங்கலில் செய்யப்படும் மாற்றங்கள், அதன் அதிகாரம் குறைக்கப்பட்டு பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகத்தை வல்லுநா்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
  • ஏற்கெனவே மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் ஏஜென்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் தீயணைப்புத் துறை உரிமம் வழங்கும் பணிக்கு வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த மாநிலங்களில் அந்த ஏஜென்சிகளுக்கு விதிமுறைகளையும் அரசே நிா்ணயித்து அவற்றின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்கிறது.
  • ஆனால், தமிழகத்தில் தீயணப்புத் துறையின் சாா்பில் உரிமம் வழங்கும் ஏஜென்சிக்குரிய விதிமுறைகள் என்ன, தகுதி என்ன, அதில் இடம்பெறுவோா் யாா் போன்றவை தெளிவற்று உள்ளன. இவற்றை சீா்படுத்தி ஏஜென்சிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் புதிய முயற்சி வெற்றி பெறும் சாத்தியம் உள்ளதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.

நன்றி: தினமணி (19 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்