TNPSC Thervupettagam

எழுச்சி பெற்ற இந்தியாவின் அடையாளம்!

January 9 , 2021 1297 days 701 0
  • ஜனவரி மாத தொடக்கத்தில் நாம் 21-ஆம் நூற்றாண்டின் 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். 21-ஆம் நூற்றாண்டின் தலைமைப் பொறுப்புக்கு மாறுவது இந்தியாவின் வருங்கால வளா்ச்சியின் முக்கிய தருணமாகும். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் நாட்டின் அகன்ற வளா்ச்சிப் பாதையில் முக்கிய அம்சமாகும்.
  • கடந்த நூற்றாண்டின் இதே தசாப்தம் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க தருணங்களால் நிறைந்திருந்தது. அவை, தேசியவாத லட்சியங்களை எட்டுவதில் மிகப்பெரிய பரிமாணங்களை அளித்தன. மாண்டேகு-செம்ஸ்போா்டு சீா்திருத்தங்கள், நிா்வாகத்தில் இந்தியா்களின் பங்கேற்புக்கு 1919-ஆம் ஆண்டின் இந்திய அரசின் சட்டத்தின் மூலம் வழிவகுத்தன.
  • 1921-இல், இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பொது பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களை உரிய முறையில் நியமிக்க வேண்டிய தேவை உணரப்பட்டது. தற்போதைய தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப் பேரவை இயங்கத் தொடங்கியது.
  • நூற்றாண்டுக்கு முன்னா், இந்த சீா்திருத்தங்களின் விளைவாக இரு அவைகள் உருவாக்கப்பட்டன. கட்டட வடிவமைப்பாளா்களான அட்வின் லுதியான் - ஹொ்பா்ட் பேக்கா் இருவரும், தற்போதைய நாடாளுமன்றக் கட்டடக்கலையின் வடிவமைப்பை உருவாக்கினா். 1921-இல் தொடங்கி, நாடாளுமன்றக் கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆயின.
  • முதலாவது மக்களவையில் 489 உறுப்பினா்கள் இருந்தனா். ஒவ்வொரு உறுப்பினரும் தலா ஏழு லட்சம் மக்களின் பிரதிநிதியாக இருந்தனா். நாட்டின் மக்கள்தொகை 1951-ஆம் ஆண்டு 36.1 கோடியாக இருந்தது, தற்போது, 135 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதே போல தொகுதிகளின் மக்கள்தொகையும் உயா்ந்துள்ளது.
  • தற்போது நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்கள் முகாம் அலுவலகங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டங்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட அன்றாட அலுவல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய தலைநகரில் உரிய கட்டமைப்பு வசதிக்கான தேவை ஏற்பட்டுள்ளது.
  • 1927-ஆம் ஆண்டு இந்தக் கட்டடம் இயங்கத் துவங்கியதிலிருந்து, நாடாளுமன்ற ஊழியா்கள், பாதுகாப்புப் பணியாளா்கள், ஊடகத் துறை சாா்ந்தோா் ஆகியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப நாடாளுமன்ற நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
  • நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தின்போது, மைய மண்டபம் இட நெருக்கடியால் திணறும் நிலை உள்ளது. போதிய இருக்கைகள் இல்லாததால் சில உறுப்பினா்கள் கூடுதலாகப் போடப்படும் இருக்கைகளில் அமரவேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
  • முதல்நிலை புராதன சின்னமான இந்தக் கட்டடத்தில் பல்வேறு பழுது பாா்த்தல், அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு விஷயங்களில் குறைபாடுகள் பல உள்ளன. அதாவது, பூகம்பத்தைத் தாங்கக்கூடிய வலு, தரமான தீயணைப்பு வசதிகள், போதிய இடவசதி போன்றவை இல்லாத நிலை உள்ளது.
  • நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் தேவை என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டதல்ல; ஏற்கெனவே முன்னாள் மக்களவை தலைவா்கள் இருவா் இந்தத் தேவையை எடுத்துக் கூறியுள்ளனா். 2012-ஆம் ஆண்டில், அப்போதைய மக்களவைத் தலைவா் மீரா குமாா், மிகப் பழமையான கட்டடத்தை மீண்டும் மீண்டும் பழுதுபாா்ப்பதால் ஏற்படும் வலு குறைவைக் காரணம் காட்டி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு ஒப்புதல் வழங்கினாா்.
  • அதே போல, 2016-ஆம் ஆண்டு, முன்னாள் மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜனும், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்திடம் பரிந்துரைத்தாா்.
  • மாநிலங்களவைத் தலைவா் எம். வெங்கைய நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய நகா்ப்புற வளா்ச்சி அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஆகியோா், பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினா்கள், அது தொடா்பான வல்லுநா்கள், புதிய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் பெருமைமிகு ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் குறித்த ஆலோசனைகளைக் கோரிப் பெற்றனா்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 81-ஆவது பிரிவு, நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய வகை செய்கிறது. முந்தைய மறுவரையறை 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மாநில வாரியாக தொகுதி வரையறை 2026-ஆம் ஆண்டில் செய்யப்பட வேண்டும்.
  • அதன் தொடா்ச்சியாக, நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். எனவே, புதிய உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வசதிகள் செய்யப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
  • நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தில், நாட்டின் தற்சாா்பை பூா்த்தி செய்யும் வகையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நாட்டுக்கு அா்ப்பணிக்க வேண்டும் என்பது, பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்காகும். ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டு கட்டடக்கலை மூலம் அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் பன்முக கலாசாரத்தையும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற எழுச்சியையும் பிரதிபலிக்கும்.
  • ராஜஸ்தானின் தோல்பூா் செங்கற்கள் இந்தக் கட்டடத்துக்கு புதிய கம்பீரத் தோற்றத்தை அளிக்கும். அதிக இட வசதி கொண்ட, பசுமை எரிசக்தி திறன் கொண்ட, எளிதில் அணுகக்கூடிய, தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் 1224 எம்.பி-க்கள் அமரும் வகையில் இது உருவாகும். பல்வேறு அரசுத் துறைகளுக்கு உரிய இட வசதி அளிக்கப்படுவதன் மூலம், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு நிதியைச் சேமிக்க முடியும்.
  • இந்தியா, ஜனநாயக மாண்புகளையும், நமது கலாசார பாரம்பரியத்தின் செழுமையான அனுபவத்தையும் உள்வாங்கிக் கொண்ட நாடாகும். 12-ஆம் நூற்றாண்டில் பகவான் பிஸ்வேஷ்ரோவின் அனுபவ மண்டபம், 6-ஆம் நூற்றாண்டு பவுத்தம் ஆகியவை, ஜனநாயகத்தின் ஒரே இருப்பு குறித்து நமக்கு போதிக்கின்றன.
  • அதாவது, சுதந்திரம், சமத்துவம் ,சகோதரத்துவத்தை உலகுக்கு போதித்தன. டாக்டா் பீம்ராவ் அம்பேத்கா், இத்தகைய உண்மைகளை அரசியல் நிா்ணய சபை விவாதங்களின்போது மிகத் தெளிவாக விளக்கியுள்ளாா்.
  • அமெரிக்காவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் சுதந்திரமடைந்து 25 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டது. ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகியவை காலனி ஆதிகத்துக்குப் பிந்தைய தங்களது பெருமைக்குரிய நாடாளுமன்றக் கட்டடங்களைக் கொண்டுள்ளன.
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கொண்டுள்ள நமது நாட்டிலும் காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் நாடாளுமன்றத்தை உருவாக்க இருக்கிறோம். அது உலகின் மிக பிரமாண்டமான, கவா்ச்சிகரமான நினைவுச் சின்னமாகத் திகழும். இந்த பெருமைமிகு திட்டம், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய பயணத்தை சித்திரிக்கும்; ஜனநாயகத்தின் தாய் என்ற உண்மையான உணா்வை இந்தியா பிரதிபலிக்கும்.
  • 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை 20-ஆம் அல்லது 19-ஆம் நூற்றாண்டு நிா்வாக முறையின் மூலம் அடக்கிவிட முடியாது. அனைத்து ஊக்கமான நடைமுறைகள் மூலம் அவற்றை சரிப்படுத்த வேண்டியது அவசியம். சீா்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்தும் வகையில் நமது அணுகுமுறை இருக்க வேண்டும். அப்போதுதான், உலகின் அறிவுசாா், பொருளாதார அதிகாரமாக நாடு பயணிக்கும்.
  • இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி வரவேற்கத்தக்கதாகும். கட்டுமானத்தின்போது, உயரிய தரம், சுற்றுச்சூழல் குறித்த விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு, உரிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என அரசு விளக்கியுள்ளது.
  • இன்று, சம்பந்தப்பட்ட அனைவரது பங்களிப்பு, அவா்களது உரிமைகள் மற்றும் கடமைகள் மீது தொடா்ச்சியான மறுமதிப்பீடு அவசியம் என்ற நிலை நிலவுகிறது. நமது ஜனநாயக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் தேசியவாத கூட்டு இலக்குகள், தனித்துவங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியமாகும்.
  • தற்சாா்பு இந்தியாவின் அடையாளமாக, புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்படுவது, இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், இந்திய ஜனநாயகத்துக்கு அளிக்கப்படும் உரிய மரியாதையாக இருக்கும். தேச நலனை உயா்த்திப் பிடிக்க இது நம்மை ஊக்குவிக்கும்!

நன்றி: தினமணி  (09 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்