TNPSC Thervupettagam

எழுத்தறிவித்த இறைவர்கள்!

September 5 , 2024 83 days 100 0

எழுத்தறிவித்த இறைவர்கள்!

  • ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்​றங்​களுக்கு ஆசிரியர்கள் ஏற்படுத்​தித்​தரும் அடித்தளம் மிகமிக முக்கிய​மானது. வருமானம் தரும் பணி என்பதைத் தாண்டி, எதிர்​காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில் அர்ப்​பணிப்புடன் உழைத்த ஆசிரியர்கள் நன்றிக்​குரிய​வர்கள். நானும் அப்படிப் பல ஆசிரியர்​களால் உருவாக்​கப்​பட்​ட​வன்​தான்​.

​முதல் ஆசிரியர்கள்:

  • வகுப்​பறையின் வாசம் அறியாது வளரிளம் பருவத்​திலேயே காங்கிரஸ், கம்யூனிச இயக்கங்​களில் இணைந்து சிறைவாசத்தில் கற்றறிந்த என் அப்பா​வும், தாயை இழந்ததால் மூன்றாம் வகுப்​பிலேயே இடைநின்ற என் அம்மாவும் கல்விதான் முன்னேற்றும் என்பதை நன்குணர்ந்து, எங்களைப் பள்ளியில் சேர்த்​தனர்.
  • தலைக்கு மேல்வழியாக வலக்கையால் இடக்காதைத் தொடும் குழந்தை​களுக்கு ஆறு வயதெனக் கணக்கிட்டுப் பள்ளியில் சேர்த்த அக்கால வழக்கத்தில் 5 வயதான நான் தோல்வியடைந்​தாலும் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்​குளம் வட்டம் தேரிப்​பனையில் உள்ள தென்னிந்​தியத் திருச்​சபையின் நடுநிலைப் பள்ளிப் பதிவேட்டில் பெயரெழு​தாமல் ஒன்றாம் வகுப்பில் அனுமதித்​தனர்.
  • அவ்வகுப்பில் இரண்டு முறை படித்​தேன். டிகேசி நகரில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து அப்பள்​ளிக்கு மூன்று கிலோமீட்டர், நடந்தே சென்று​வந்​தேன். பிள்ளைவிளை கோயில்மணி ஒன்றாம் வகுப்பில் உயிர்​மெய்​களையும் வாய்ப்​பாடு​களையும் கற்பித்​தார். அவர் கண்டிப்​பானவர். ஆசிரியர்கள் மிதிவண்​டியில் வேட்டியும் சட்டை​யுமாய் வந்தனர். வகுப்புத் தரவரிசையில் தொடர்ந்து முதலாமிடத்தைப் பிடித்​ததால் ஆசிரியர்​களின் பேரன்பு கிடைத்தது. ஆண்டு விழாவில் நடிக்க வைத்ததோடு, பள்ளி​களுக்கு இடையேயான போட்டித் தேர்வு​களுக்காக வெளியூர்​களுக்கு அற்புதராஜ் அழைத்துச் சென்றார்.

மரமாகிக் கிளையு​மானது:

  • நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்​கப்​பட்​டேன். 10 கிலோமீட்டர் மிதிவண்​டியில் சென்று​வந்​தேன். படித்​தவர்​களின் வாரிசுகளுடன் போட்டி​யிடத் திணறினேன். மேல்நிலையின் விலங்​கியலை நித்தி​யானந்தன் கற்பித்​தார். பெயருக்கு ஏற்றாற்போல் நித்தி​யானந்​தனின் முகத்தில் எப்போதும் புன்னகை தவழும். ஃபிரடெரிக் ‘முனைவர்’ பட்டம் குறித்து, அவ்வப்போது பேசியது விலங்​கியலில் ஆராய்ச்சி செய்யும் எண்ணத்தை எனக்குள் விதைத்தது.
  • விலங்​கியலில் பள்ளியளவில் இரண்டா​மிடத்தைப் பிடித்த​போதும் நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் அத்துறை சார்ந்த படிப்பு மறுக்​கப்​பட்​ட​தால், விருப்​பமற்று வரலாற்றுப் படிப்பில் சேர்ந்​தேன். உடற்கல்வி ஆசிரியர் பாகுபாட்டுடன் நடத்தி​யதால் கால்பந்​தாட்டக் குழுவிலிருந்து வெளியேறி, தட்டச்சும் சுருக்​கெழுத்தும் பயின்​றேன்.
  • எதிர்​பாலினத்​தவருடன் உரையாடத் தடை விதித்​திருந்த அக்கல்​லூரி​யில், என் வகுப்பில் 21 மாணவி​களும் 7 மாணவர்​களும் பயின்​றோம். கண்டிப்​பானவர்களான கிறிஸ்​டோபரிடமும் ஜாஸ்மினுடனும் பேசுவதற்​குக்கூட மாணவர்கள் அஞ்சினாலும், நான் அவர்களிடம் வாதிட்​டேன். பருவத் தேர்வு​களில் அனைத்துப் பாடங்​களிலும் தேர்ச்சி பெற்றதால் இதை அனுமதித்​தனர். அன்பு காட்டிய பீட்டரிடம் தனிப்பட்ட பிரச்​சினை​களையும் பகிர்ந்​து​கொள்​வோம். கற்பித்தல், குறிப்புகள் கொடுத்தல் என ஆசிரியர்கள் கறாராகச் செயல்​பட்​ட​தால், வகுப்பில் முதலிடத்தைப் பிடித்துப் பட்டத்தைப் பெற்றேன்.

அரும்பு மொட்டு​மானது:

  • பருவத் தேர்வு முடிவு​களைத் திருநெல்​வேலியில் மனோன்​மணியம் சுந்தரனார் பல்கலைக்​கழகத்​துக்குச் சென்று பார்த்​த​தால், அங்கு வரலாறு முதுகலை கற்பிக்​கப்​படுவதை அறிந்​தேன். நுழைவுத் தேர்வில் வென்ற 14 மாணவர்கள் வரலாற்றுப் படிப்பில் சேர்ந்​தோம். கா.அ.மணிக்​கு​மார், ஆ.இரா.வேங்​கடாசலபதி, சதாசிவன், டிசையர், ஞான.அலாய்​சியஸ், மரியஜான், சேர்மக்கனி ஆகியோர் பேராசிரியர்கள்.
  • ஆ.இரா.வேங்​கடாசலபதி வாசிப்புப் பழக்கத்​துக்கு விதையிட்டு நூல்களையும் பரிந்​துரைத்​த​தால், முதன்​முறை​யாகத் தேர்வுக்கு அப்பாற்​பட்டு ‘வால்​கா​விலிருந்து கங்கை வரை’ நூலை வாசித்தேன். வகுப்​பறை​யிலும், தொடர்​பியல் துறையில் சாப்ளின் படங்களைக் காண்பித்தும் வரலாற்றைக் கற்பித்​தார். அவர் நடத்திய சூழலியல் வரலாற்றுப் பாடத்தை எடுத்​த​தால், அவருடைய இல்லத்தில் தீனியும் தேநீரும் கொடுத்துக் கற்பித்​தார். ஞான.அலாய்​சியஸ், கார்த்திகேசு சிவத்​தம்பி போன்றோரை உரையாற்​ற​வைத்​தார்.
  • ஒரு முறை பேருந்​துக்​காகக் காத்திருந்த ஞான.அலாய்​சி​யஸிடம் சாதியியலைப் பற்றிக் கேட்டறிந்​தேன். அப்போதைய துணைவேந்தர் வசந்திதேவி விருப்பப் பாடங்​களைப் பிற துறைகளில் தேர்ந்​தெடுக்கும் முறையைச் செயல்​படுத்​தி​யதால் வேதியியல், தமிழ், சமூகவியல், தொடர்​பியல் துறைகளைத் தேர்ந்​தெடுத்​தேன்.
  • வேதியியலில் சுப்பிரமணியன், தமிழியலில் அ.ராமசாமி, சமூகவியலில் கண்ணப்பன், தொடர்​பியலில் அருள்​செல்வன் ஆகியோர் கற்பித்​தனர். மாணவர்​களின் இயக்கங்​களுக்கும் ஆசிரியர்கள் ஆதரவளித்​தனர். ஒரு மாணவர் சங்கத்தின் பல்கலைக்​கழகக் கிளைச் செயலாளரான எனக்குப் பேராசிரியர்​களுடன் சுமுக உறவு மலர்ந்தது.

காயும் கனியு​மானது:

  • கா.அ.மணிக்​கு​மாரின் நெறியாளுகையில் முனைவர் பட்டத்​துக்கான ஆராய்ச்சியை முன்னெடுத்த​போது, முதலில் ‘Bonds Lost’ நூலை வாசிக்க அறிவுறுத்​தினார். இதுதான் நான் ஆங்கிலத்தில் முழுமையாக வாசித்த முதல் நூல். முன்னாய்​வு​களைச் சேகரிக்க திருவனந்​த​புரம் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் (சிடிஎஸ்), சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஐடிஎஸ்) ஆகியவற்றை அறிமுகப்​படுத்​தினார்.
  • ஆவணக் காப்பகத்தில் ஆவணங்​களைக் கண்டெடுக்கும் முறையியலையும் கள ஆய்வு​களையும் கற்பித்​தார். ஆராய்ச்சி தொடர்பாக உரையாட முன்கூட்டியே நேரம் ஒதுக்கிப் பல்கலைக்​கழகத்​திலும் அவருடைய இல்லத்​திலும் வழிகாட்​டி​னார். அவருடைய நெறியாளுகையில் ஐந்தரை ஆண்டுகள் சுதந்​திர​மாகவும் கட்டுக்​கோப்​பாகவும் ஆராய்ந்​தேன். கிணற்றுத் தவளையாக அல்லாமல் ஆராய்ச்சி உலகில் ஊரூராகப் பறவையாய் என்னை மணிக்​குமார் பறக்க​வைத்​த​தால், வகுப்​பறைக்கு வெளியே வண்ண வண்ண உலகைக் காண்கிறேன்.
  • பல்கலைக்கழக உணவு விடுதியில் தீனியும் தேநீரும் வாங்கிக் கொடுத்து தமிழ்த் துறை தொ.பரமசிவன், அ.ராமசாமி, ஞா.ஸ்​டீபன், சமூகவியல் சாம்ஆசீர், ஆங்கிலத் துறை பாலு, எஸ்.பிர​பாகர் ஆகியோர் என் ஆராய்ச்​சியின் பன்மைப்பு​லத்தைப் பலப்படுத்​தினர். ஆராய்ச்​சியின் தொடக்​கத்தில் ஆதிமருத்​துவரை ஆராய்ந்த​போது, சென்னை மாநிலக் கல்லூரியின் இயற்பியல் துறை அ.மார்க்ஸ், தேவிபிரசாத்தின் நூல்களை வாசிக்கத் தூண்டினர்.
  • மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக ந.முத்​து​மோகன் தத்து​வங்​களை​யும், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி ஆ.சிவசுப்​பிரமணியன், பாளையங்​கோட்டை தூயசே​வியர் கல்லூரி ஆ.தனஞ்​செயன், செல்லப்​பெரு​மாள், டி.தரு​ம​ராஜ், ராமச்​சந்​திரன் நாட்டாரியலையும் மானுட​வியலையும் விளக்​கினர். ஒரு கருத்​தரங்கில் கருத்​தியல் மோதலில் அறிமுகமான எம்ஐடிஎஸ் சி.லட்​சுமணனுடைய இல்லத்தில் தங்கி​யிருந்து ஆவணக் காப்பகத்தில் தரவுகளைச் சேகரித்​திருக்​கிறேன்.

வேர் விழுதானது:

  • கற்றலானது முதலாம் நிலையில் வகுப்​பறைக்குள் தொடங்கி முனைவர் பட்டத்தில் பொதுவெளிக்கு நகர்ந்தது. கோயில்மணி கற்பித்த உயிரெழுத்துகள் கா.அ.மணிக்​கு​மாரால் உயிரோட்​ட​மாகின; இதில் பிற பேராசிரியர்கள் உரமிட்​டனர். என் கிராமத்​திலிருந்து மெய்ஞ்​ஞானபுரம் வழியாகச் செல்லுகிற​போதெல்லாம் கோயில்​ மணியின் இல்லத்தைக் காண்பேன். ஒரு தேவால​யத்தின் எதிர்ப்​புறம் ஓடுவேய்ந்த வேப்பமரம் உள்ள வீட்டில் இப்போது அவர் உயிருடன் இல்லை​தான்.
  • இருப்​பினும் கோயில்​மணியின் குரலும், கைகளை இறுகப் பற்றி உயிரெழுத்து​களைக் கற்பித்​ததும், தவறாக எழுதினால் தன் வழுக்கைத் தலையைத் தடவி அடித்துத் திருத்திய அவரின் முகமும் கரும்​பல​கையில் வரைந்த சித்திரம்போல் என் நினைவில் நிற்கின்றன.
  • என் பெற்றோர் கல்வி​யிலும் ஆசிரியர்​களிடத்தும் கொண்டிருந்த நம்பிக்கை வென்றது. தமிழ்​நாட்டுப் புவிப்​பரப்பின் வாலான தென்கோடியின் குக்கிராமத்​தில் பிறந்​து​வளர்ந்து, ‘தலை’நகருக்கு நகர்ந்த என் பயணத்​தில் - சாதி, மத, பாலின, வர்க்க, மொழி பேதமற்று - என்னைச் செதுக்கிய ஆசிரியர்​களுக்​கும் பேராசிரியர்​களுக்​கும் ​போற்று​தலுக்​குரிய பெரும் பங்​குண்டு. ஆசிரியர்கள்​ ​விதைத்​த​தால் நான் ​விளைகிறேன்... என்​னைப் ​போல் பலரும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்