TNPSC Thervupettagam

எழுத்தாளர்களுக்கென கிராமங்களை உருவாக்குவோம்!

June 7 , 2021 1331 days 559 0
  • நெல்லையில் 2020-ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற திருநெல்வேலி எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மரியாதை செய்யப்பட்டது.
  • உயிருடன் இல்லாத எழுத்தாளர் என்றாலும், அவரது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளர்களைப் பற்றிய காணொளிக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மேடைக்கு வந்து புத்தாடை அளித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
  • இதோடு வாசிப்பு, ரசனை, நூல்நயம், இலக்கிய விசாரணை எனச் செயல்படும் பலரும் மேடையேற்றப்பட்டார்கள். அந்த வகையில், நெல்லை புத்தகத் திருவிழாவானது இலக்கியர்களின் கொண்டாட்டமாக மாறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
  • பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் என்ற வகையில் அப்போது நானும் மேடையேறினேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் நிரம்பிய இந்த மாவட்டத்தில் ‘எழுத்தாளர் கிராமம்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.
  • நெல்லை புத்தகத் திருவிழா நடந்த விதம் பற்றிப் பாராட்டித் தலையங்கம் எழுதிய ‘இந்து தமிழ்’ நாளிதழ், அதில் எனது கோரிக்கையையும் குறிப்பிட்டு அப்போதைய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

‘எழுத்தாளர் கிராமம்’

  • நமது அரசுகள் விளையாட்டு வீரர்களை உருவாக்கத் தேவையான அடிப்படை வசதிகளோடு விடுதிகளை நடத்துகின்றன; மைதானங்களை உருவாக்குகின்றன.
  • இதுபோல, எழுத்தாளர்களை உருவாக்கும் ஆதரிக்கும் வளர்த்தெடுக்கும் அமைப்பாக ‘எழுத்தாளர் கிராமம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அங்கே தங்கி எழுதவரும் எழுத்தாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் அமைதியான சூழலும் இருக்க வேண்டும்.
  • எழுத்தாளர்களைச் சந்திக்க விரும்பும் வாசகர்களுடன் உரையாடுவதற்கும் இடவசதியை உருவாக்கித் தரலாம். இதெல்லாம் பல நாடுகளில் ஏற்கெனவே உள்ள வழக்கம்தான்.
  • தமிழ் எழுத்தாளர்களில் ஒருசிலர் உலக அளவில் ‘எழுத்தாளர் முகாம்க’ளுக்குச் சென்று, தங்களின் எழுத்தாற்றலை மேம்படுத்திவருகிறார்கள். அப்படியொரு ‘எழுத்தாளர் முகாம்’ நடத்தக்கூடிய இடமாக ‘எழுத்தாளர் கிராமம்’ அமைய வேண்டும்.
  • அப்படி ஓரிடத்தைத் தாமிரபரணிக் கரையில் உருவாக்க முடியும். அந்தக் கிராமத்தில் இலக்கியத் திருவிழாவை (Literary Festival ) நடத்தலாம். போபாலில் இப்படியொரு இடம் இருக்கிறது.
  • உலக அளவிலான இலக்கிய விழாவை கேரளம் நடத்துகிறது. சாந்திநிகேதனிலும் இப்படியொரு சூழல் இருந்ததாக வாசித்திருக்கிறேன்.
  • மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துத் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கினால், ‘சாகித்ய அகாடமி’ போன்ற பண்பாட்டு அமைப்புகள் உதவக்கூடும். பண்பாட்டு நடவடிக்கைகள் மீது அக்கறை காட்டும் தனியார் நிறுவனங்களும் நிதியுதவி வழங்குவார்கள்.

பாரதி வேண்டிய காணிநிலம்

  • இப்படியொரு தேவையைத்தானே பாரதி தனது ‘காணிநிலம்’ கவிதையில் வேண்டினான்? ‘காணிநிலம்’ என்ற பெயரிலேயேகூட அந்தக் கிராமம் அமையலாம்.
  • ஓவியர்களுக்கான சோழமண்டல கிராமம் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இவ்வாறு அமைக்கப் பட்டதுதான்!
  • இந்தப் பொருண்மையில், மு.கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி, “இயல், இசை, நாடகம் சார்ந்து மூன்று மூன்று பேருக்கு ஐந்து லட்சம் விருதுத் தொகையுடன் கூடிய ‘இலக்கிய மாமணி’ விருதுகள் வழங்கப்படும்.
  • நாட்டளவிலும் உலகளவிலும் விருதுகள் பெறும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்திலேயே வீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வரவேற்கத்தக்க, பாராட்டுதலுக்குரிய அறிவிப்பு இது.
  • இந்த அறிவிப்பானது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதே நேரத்தில், ‘தங்களின் ஆட்சியையும் கருத்தையும் ஆதரித்து எழுதும் எழுத்தாளர்களுக்கு விருதுகளையும் வீடுகளையும் தரும் திட்டம் இது’ என்பன போன்ற விமர்சனங்களும் எழத் தொடங்கி விட்டன.
  • அப்படியான பேச்சுகளுக்குத் தடைபோட முடியாது. ஆனால், முன்னெடுப்புகள் மூலமாகவும் செயல்பாடுகள் மூலமாகவும் இத்தகைய விமர்சனங்களைப் பொய்யாக்க முடியும்.

எப்படி அது சாத்தியம்?

  • தமிழ்நாட்டளவில் கலை, இலக்கியர்களுக்கு வழங்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதுகள் எந்த விதத் தேர்வு அடிப்படைகளும் இல்லாமல் வழங்கப்பட்டன எனும் விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை.
  • இயல் இசை நாடகமன்றப் பொறுப்பாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே அந்தப் பட்டியல்கள் இருந்தன என்றும் பேசப்பட்டது. இந்தப் போக்கை மாற்ற வேண்டும்.
  • வழங்கப்படும் விருதுக்கான தரமானது பெறும் நபரைப் பொறுத்தே உறுதியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளிப்படைத்தன்மை மட்டுமே இதைச் சாதிப்பதற்கான ஒரே வழி.
  • எனவே, ‘இலக்கிய மாமணி’ விருதுகளுக்கான தேர்வு முறையை முன்னரே அறிவிக்க வேண்டும். ‘சாகித்ய அகாடமி’ பின்பற்றும் நடைமுறையைவிடச் சிறப்பானதும் வெளிப்படையானதுமான முறையைப் பின்பற்ற வழிவகுக்க வேண்டும்.
  • முதல் சுற்றில் இடம்பெறும் எழுத்தாளர்களிலிருந்து குறும் பட்டியல் எவ்வாறு உருவாக்கப் பட்டது என்பதையும், அதிலிருந்து கடைசி மூன்று எழுத்தாளர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதையும் மறைக்க வேண்டியதில்லை.
  • தேர்வுக் குழுவினரின் பெயர்களை ரகசியமாக வைக்காமல், அவர்களைப் பொறுப்பாக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் குறித்து விரிவான அறிக்கையைத் தேர்வுக் குழுவினரிடமிருந்து பெற்று வெளியிடலாம்.
  • இந்த நடைமுறையைச் செய்யும்போது ‘அரசின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்ற பேச்சு காணாமல் போய் விடும்.

சில கோரிக்கைகள்

  • ‘சாகித்ய அகாடமி’, ‘ஞானபீடம்’ விருதுபெற்ற இலக்கியவாதிகளுக்கான ‘கனவு வீடு’ வரவேற்க வேண்டிய நல்ல திட்டம். அந்தத் திட்டத்துக்குள் மாநில அரசு வழங்கப்போகும் ‘இலக்கிய மாமணி’ விருதுகளையும் உள்ளடக்க வேண்டும்.
  • எழுத்தாளர்கள் விரும்பும் மாவட்டத்தில் வீடு கட்டித் தரும் திட்டத்தோடு எழுத்தாளர்களுக்கான கிராமம் அமைப்பது குறித்தும் அரசு திட்டமிட வேண்டும்.
  • எழுத்தாளர் கிராமத்தில் தங்குபவர்களுக்கு இலவச மருத்துவ வசதியையும், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்குச் சென்றுவர சலுகையுடன் கூடிய பயணத் திட்டத்தையும் உருவாக்கலாம்.
  • விருதாளரின் மனைவி அல்லது கணவருக்கு வாழ்நாள் வரை ஓய்வூதியம் வழங்கலாம்.
  • ஒரே நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் ‘எழுத்தாளர் கிராமங்கள்’ உருவாக்கப்படுவது இயலாத ஒன்று. எனவே, ஆண்டுக்கு ஒன்று எனத் திட்டமிட்டால் முதல் ஐந்து ஆண்டுகளில் ஐந்து எழுத்தாளர் கிராமங்கள் உருவாகிவிடும்.
  • இவையெல்லாம் செய்யப்பட்டால் ‘கனவு வீடு’ என்ற திட்டம் எழுத்தாளர்களுக்கான ‘கனவுக் கிராம’த்துக்கான உருவாக்கமாக அமையும்!

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்