- நம் நாட்டில் தலைவர்கள் பலர் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து மறைந்துள்ளனர்; அதில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர். சுவாமி விவேகானந்தரின் படைப்புகளை மகாத்மா காந்தி முழுவதும் கருத்தூன்றிப் படித்திருக்கிறார். அவற்றைப் படித்த பிறகு, இந்தியாவின் மீது அவருக்கிருந்த அன்பு ஆயிரம் மடங்காகப் பெருகியது என்று நன்றியுடன் கூறினார்.
- உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது மதம், இனம்தான் உயர்ந்தது என்ற கோட்பாட்டில் மூழ்கி இருந்தபோது இந்தியாவைச் சேர்ந்த இளம் துறவியான சுவாமி விவேகானந்தர், 1893-ஆம் ஆண்டு சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் பங்கேற்று, மத சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம் குறித்துப் பேசி பாராட்டைப் பெற்றார்.
காந்தி
- ஓர் இளம் வழக்குரைஞராக தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட மகாத்மா காந்தி, அங்கு முதல் முறையாக தனது சிந்தனைகளாக விளங்கிய உண்மை, சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்த்த பின்னர், அவை உலகின் அமைதி, நல்லிணக்கத்துக்கான வெல்ல முடியாத ஆயுதமாக மாறிவிட்டன. மனிதகுலத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றை, வெளிநாட்டுக்குச் சென்று உலகுக்கு உணர்த்தியவர் மகாத்மா காந்தி.
- இந்தியச் சிந்தனைகள், மதிப்புகளை உலகம் முழுவதுக்கும் சென்று பரப்பும் பாரம்பரியம் 2-ஆம்நூற்றாண்டில் தொடங்கியது. மெளரியப் பேரரசாகத் திகழ்ந்த அசோகரின் இளைய மகன், மகள் ஆகியோர் இலங்கைக்குச் சென்று அங்கு முதன்முறையாக தெற்காசியாவில் புத்த மதத்தைத் தோற்றுவித்தனர்.
- இத்தகைய உணர்வு கொண்ட லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருந்தார்கள்; இப்போதும் இருந்து வருகிறார்கள். இந்திய மாநிலங்களுக்கு இடையே மக்கள்தொகை வயது நிலைமை மிகவும் மாறுபட்டுள்ளது. மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுக்கும் மத்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகாருக்கும் இடையே பெரிய மாற்றங்கள் உள்ளன.
இளைஞர்களின் திறன்கள்
- முன் கூறப்பட்டவை வளர்ந்த நாடுகளைப் போலவும், இரண்டாவது கூறப்பட்ட மாநிலங்களின் பணியாளர்களின் சராசரி வயது குறைந்தும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. எனவே, இந்த மக்கள்தொகை வயது குறைவுத்தன்மை சார்ந்த பணியாளர்களைச் சாதகமாகப் பயன்படுத்த அவர்கள் வேலை செய்வதற்குத் தகுந்த திறன்களை அளித்ததால்தான் உற்பத்தித் திறனும், பொருளாதாரத்தின் போட்டித் தன்மையும் வளரும்.
- 2022-ஆம் ஆண்டில் முக்கிய பொருளாதாரத் துறைகளில் தேவைப்படும் மனிதவள கூடுதல் எண்ணிக்கை 1,097 கோடியாக இருக்கும். எனவே, வேலைவாய்ப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையான மனித வளங்களை உருவாக்கினால்தான் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
- உலக மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையில், இந்தியாவில் 5-இல் ஒரு பங்கு என்ற விகிதத்தில் மிக அதிக அளவிலான இளைஞர்கள் உள்ளனர். அவர்களை தொழிற்சந்தையில் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், உயர் அளவு பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய முடியும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்திய மக்கள்தொகையில் 60.3 சதவீத அளவுக்கு 15-59 வயது தொகுப்பில் உள்ளனர்; 27.5 சதவீதம் பேர் 15 முதல்25 வயது கொண்ட இளைஞர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்
- இளைஞர்கள் அதிகமாக இருந்தும் குறைந்த அளவில்தான் சாதனை செய்கிறார்கள் என்றால், அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில், குறிப்பாக அறிவியலில் மனிதன் எட்டிப்பிடித்த வளர்ச்சியின் மேன்மையை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட செல்லிடப்பேசியை இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்களில் பெரும்பாலோர் சீரழிவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது வேதனையானது.
- எந்த நேரமும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோர் படிப்பில் கோட்டை விடுவதற்கும், உறவில் கேட்டைத் தேடுவதற்கும், வக்கிர செயல்களுக்கு வழியமைத்துக் கொடுப்பதற்கும், குற்றச் செயல்கள் புரிவதற்கும், எதிர்காலம் குறித்த சிந்தனைகளை இருட்டடிப்புச் செய்வதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
- இளைஞர்களையும் இளம் பெண்களையும் எளிதாக தவறான வழிக்கு இட்டுச் செல்லும் வகையில் சமூக வலைதளங்கள் இருப்பதால், பெரும்பாலோரின் சாதனைகளுக்குத் தடைக்கல்லாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
- இந்தியா குறித்து சுவாமி விவேகானந்தர் கண்ட லட்சியக் கனவுகளை இப்போது நம் இளைஞர்கள் சிலர் தவற விடுகிறார்கள். விவேகானந்தர் நூல்களைத் தவறாமல் படிப்பதோடு மட்டுமல்லாமல், அதை மனதில் உள்வாங்கி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இந்தியாவின் கலாச்சாரம்
- வாழ்வில் எந்தச் சூழ்நிலையிலும் வெறுப்புக்கு இடம் தராமல் பாதுகாத்துக் கொள்வது நம்முடைய மனிதப் பிறவியின் மிகவும் முக்கியமான செயலாகும்.
- இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும், கலாசார மரபுகளை மங்காமல் முன்னெடுத்துச் செல்வதிலும், வளர்ச்சிக்கான வழித்தடங்களை வடிவமைப்பதிலும் இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியம்;
- "சுயநலம் என்பது மரணத்துக்குச் சமம்' என்றார் சுவாமி விவேகானந்தர். "அராஜகம்' என்ற சுயநலத்தை விட்டு, "அன்பு' என்ற பொது நலத்துக்குள் புகுந்து ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதற்கு இளைய சமுதாயம் முன்வர வேண்டும்.
நன்றி: தினமணி (11-01-2020)