TNPSC Thervupettagam
May 2 , 2021 1363 days 548 0
  • தமிழ் கலை, இலக்கியப் புலத்தின் ரகசிய அற்புதம் என அவரை அறிந்தவர்கள் ஆல்பர்ட்டை அழைப்பார்கள்.
  • ஆங்கிலப் பேராசிரியராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பணியாற்றி, துறைத் தலைவராக 1997-ல் ஓய்வுபெற்றவர் எஸ்.ஆல்பர்ட்.
  • ஒரு பேராசிரியரின் பணி என்பது வகுப்பறைகளில் போதிப்பது, துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வெளியிடுவது என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • நல்லவேளையாக, பேராசிரியர்கள் அனைவருமே அந்தக் குறுகிய வட்டத்தில் இருந்துவிடுவதில்லை. அவர்கள் தாங்கள் கற்றதை, அதனால் விளையும் சிந்தனைகளைப் பொதுமன்றத்துக்கு எடுத்துச்செல்ல முனைகிறார்கள்.
  • இவர்களில் சிலர் பத்திரிகைகளில், நாளேடுகளில் கட்டுரைகள் எழுதுவது, ஊடகங்களில், கூட்டங்களில் உரையாற்றுவது என்ற அளவில் பங்களிப்பார்கள்.
  • ஒருசிலர் பொதுமன்றச் செயல்பாட்டாளர்களாகப் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்று, பல்வேறு கலாச்சாரச் செயல்பாடுகளை முன்னெடுப்பார்கள்.
  • ஆல்பர்ட் ஒரு கலாச்சாரச் செயல்பாட்டாளராகவே வாழ்ந்தார். தான் சாப்பிட்ட கனியின் விதையை எங்கோ தூவி விருட்சமாக்கும் அறியப்படாத பறவையாக இருந்தார்.

ஒரு பேராசிரியரும் பொதுமன்றமும்

  • ஆல்பர்ட் தலைசிறந்த அழகியல்வாதி. மிகவும் கூர்மையாக, விரிவஞ்சாமல், எந்த ஒரு படைப்பின் கலைநுட்பங்களையும் ஆராயும் திறன் கொண்ட வாசகர்.
  • அவர் எழுதியுள்ள சொற்பமான விமர்சனக் கட்டுரைகள் இந்தக் கூற்றுக்குச் சான்று பகரக்கூடியவை. படைப்புச் செயல்பாட்டால் மேன்மையுறும் மனித மனம், சமூக அறத்தைக் கைக்கொண்டு சமூகத்தை மேம்படச் செய்யும் அல்லது செய்ய வேண்டும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கையும் லட்சியமும் கொண்டவர்.
  • அவருடைய திறன்களையும் லட்சியத்தையும் அவர் பொதுமக்கள் உரையாடல் என்ற செயல்பூர்வமாகவே வெளிப்படுத்தினார்.
  • ஒரு படைப்பாளியாகவோ எழுத்தாளராகவோ தன் ஆக்கங்களைப் பிரசுரிப்பதைவிடப் பல்வேறு களங்களில் தொடர்ந்து உரையாற்றுவதை, உரையாடலை மேற்கொள்வதையே தனது பணியாக வரித்துக்கொண்டார்.
  • விமர்சனபூர்வமான பொதுமன்றக் கல்வியாளராக (critical public pedagogue) விளங்கினார். அதனால், இவரது சிறப்பு கலை, இலக்கிய உலகில் பரவலாக அறியப்படவில்லையே, அங்கீகரிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் அவர் நண்பர்களுக்கு உண்டு.
  • ஆனால், சாதனையாளர்களாக அறியப்படும் எழுத்தாளர் இமையம் போன்ற பல படைப்பாளிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் ஆல்பர்ட் உத்வேகமாக இருந்தார்.
  • அவருடைய சமகால எழுத்தாளர்களான நகுலன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் உள்ளிட்ட பலராலும் பெரிதும் மதிக்கப்பட்டவராக இருந்தார்.
  • ஒரு உலக இலக்கிய வாசகராக, உலக சினிமா பார்வையாளராக அவர் இருபதாம் நூற்றாண்டு மானுடம் சந்திக்கும் இருத்தலியல் நெருக்கடி, நம்பிக்கை வறட்சி, அந்நியமாதல், அடையாளச் சிக்கல் ஆகிய பல்வேறு அம்சங்களை ஆழ்ந்து பரிசீலிப்பவராக இருந்தார்.
  • தமிழில் உருவாகும் இத்தகைய சமகால நோக்கு கொண்ட நவீனத்துவ இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
  • ஆழமான உளவியல் பரிமாணங்கள், தீவிர சமூக முரண்கள், அரசியல் முரண்பாடுகள் ஆகியவற்றை உள்வாங்கிப் பிரதிபலிக்கும் படைப்புகளை அவர் ஆழமாகப் பரிசீலித்ததுடன், அத்தகைய பரிசீலனைக்கான ஆற்றலைப் பரவலாக்க விரும்பினார்.
  • கலை நுட்பத்துக்கும், வெகுஜன ரசனைக்குமான இடைவெளியை அவர் கடக்க விரும்பினார்.
  • ஷேக்ஸ்பியர், சார்லி சாப்ளின் ஆகியோரை அவர் இந்த இடைவெளியைக் கடந்த படைப்பாற்றலுக்கான மாதிரிகளாகச் சுட்டிக்காட்டுவார்.
  • அதே சமயம், பரவலான ரசனை மேம்பாடு என்பதையும் மிக அவசியமான ஒரு சமூகப் பணியாகக் கருதினார்.
  • அதன் பொருட்டு கிறிஸ்தவ மதம் சார்ந்த கலாச்சார அமைப்புகளின் துணையுடன் அவர் பல்வேறு பயிலரங்கங்களையும் பட்டைறைகளையும் கருத்தரங்குகளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார். அவற்றில் பல தமிழ் இலக்கியவாதிகளையும் ஈடுபடுத்தினார்.
  • பாரம்பரிய சமூகத்தின், வெகுஜன உளவியலின் தார்மீக அடிப்படைகளையும், நவீன சமூக இயக்கத்தின் முரண்களையும் இணைக்க அவர் மிக முக்கியமான மூலாதாரமாக காந்தியைக் கருதினார் எனலாம்.
  • காந்தியம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை 1985-ல் திருச்சி ‘செயின்ட் பால் செமினரி’யில் அவர் ஒழுங்கமைத்தார்.
  • முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களும், தமிழ் இலக்கியவாதிகளும் அதில் பங்கெடுத்தனர்.
  • மதங்களுக்கிடையிலான உரையாடல், ‘இன்டர்ஃபெயித் டயலாக்’ என்பதிலும் ஆல்பர்ட் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
  • மானுட மேன்மைக்கான ஓயாத தேடலில் ஈடுபட்டதுடன், அந்தத் தேடலில் பலரையும் ஈடுபடுத்தும் ஆற்றலையும் பெற்றிருந்த ஆல்பர்ட் தூவிய கலாச்சார விதைகள் நெடுங்காலம் தமிழ் நிலத்தை வளப்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்