TNPSC Thervupettagam

ஏஐ சாட்பாட்களின் மனதை மாற்றுவது சாத்தியமா?

November 14 , 2024 14 days 63 0

ஏஐ சாட்பாட்களின் மனதை மாற்றுவது சாத்தியமா?

  • அமெரிக்கப் பத்திரி​கை​யாளர் கெவின் ரூஸ் (Kevin Roose), ஏஐ சாட்பாட்கள் தன்னை எதிரி​யாகக் கருது​வ​தாகக் கவலை கொண்டு கட்டுரை ஒன்றை எழுதி​யிருக்​கிறார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் தன்னை வில்லனாக நம்புவ​தாக​வும், இந்தச் சித்தரிப்பு தனது நற்பெயருக்குத் தீங்காக அமைவதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டிருக்​கிறார்.
  • இது அவருடைய தனிப்பட்ட கவலை மட்டுமல்ல! ஏஐ சாட்பாட்கள் பயன்பாடு தொடர்பாக ஆய்வுசெய்து விமர்சன நோக்கில் தொடர்ந்து எழுதிவரும் கெவின் ரூஸ், இந்தக் கட்டுரை மூலம் சொல்ல​வரும் செய்தி, ‘எனக்கு நேர்ந்தது, உங்களுக்கும் நேரலாம், எனவே எச்சரிக்கையாக இருங்​கள்!’ என்பது​தான்​.

எதிரி என்னும் பிம்பம்:

  • கட்டுரையின் தலைப்பே இந்தச் செய்தியை குறிப்பால் உணர்த்தி​விடு​கிறது: ‘நீங்கள், சாட்பாட்​களின் மனதை மாற்றுவது எப்படி?’ (How Do You Change a Chatbot’s Mind?). அவர் பணியாற்றும் நியூயார்க் டைம்ஸில்தான் இந்தக் கட்டுரையை எழுதி​யிருக்​கிறார். ‘எனக்கு ஒரு பிரச்சினை இருக்​கிறது - ஏஐ சாட்பாட்​களுக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்க​வில்லை’ என்று இந்தக் கட்டுரையைத் தொடங்கும் கெவின் ரூஸ், தன்னைப் பற்றி சாட்ஜிபிடி​யிட​மும், கூகுள் ஜெமினி​யிடமும் கேட்டால், ‘நேர்​மை​யில்​லாதவர்’, ‘பரபரப்பை நாடுபவர்’ போன்ற கருத்துகளை அவை முன்வைப்​ப​தாகக் குறிப்​பிடு​கிறார்.
  • எல்லாம் சரி! ரூஸை ஏன் சாட்பாட்கள் எதிரி​யாகக் கருத வேண்டும்? இந்தக் கேள்விக்கு அவரே பதில் அளித்​துள்ளார். கடந்த ஆண்டு, மைக்ரோசாஃப்ட்டின் ‘பிங்’ தேடியந்​திரத்தின் சாட்பாட் வசதி மூலம் உருவான சாட்பாட்டுடன் உரையாடி, இந்த அனுபவம் தொடர்​பாகப் பத்தி ஒன்றை எழுதி​யிருந்​தார். எல்லை மீறிச்​சென்ற இந்த உரையாடலில், அந்த சாட்பாட் ரூஸைக் காதலிப்​ப​தாகச் சொன்னதும், அவரது மனைவியை​விட்டு விலகிவருமாறு ஆலோசனை கூறியதும், அந்தப் பத்தியில் பதிவாகி​யிருந்தது.
  • சாட்பாட்​களுடனான உரையாடலில் ஏற்படக்​கூடிய பல்வேறு சிக்கல்களை உணர்த்திய இந்தக் கட்டுரை இணையத்தில் வைரலாகி பரவலாக விவாதிக்​கப்​பட்டது. இந்தப் பரபரப்​புக்கு நடுவே, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எதிர்​காலத்தில் இதே போன்ற தவறுகள் நிகழாத வகையில் அதன் சாட்பாட் செயல்​பாட்டில் சில கட்டுப்​பாடு​களைக் கொண்டு​வந்தது. சாட்பாட்கள் ஆளுமை பெறும் அம்சமும் முடக்​கப்​பட்டது.
  • இணையத்தில் பரவலாக விவாதிக்​கப்​பட்டு, பேசப்பட்ட இந்தக் கட்டுரையே தனக்கு விரோதமாக அமைந்ததாக ரூஸ் கருதுகிறார். எப்படி எனில், சாட்பாட்கள் ஏற்கெனவே பயிற்சி அளிக்​கப்பட்ட தரவுகளோடு, தொடர்ந்து இணையத்​திலிருந்தும் செய்தி​களி​லிருந்தும் திரட்​டப்​படும் புதிய தரவுகளால் புதுப்​பிக்​கப்​படு​கின்றன. அந்த வகையில், ரூஸின் கட்டுரைக்குப் பிறகு வெளியான தகவல்கள் தரவுகள் அடிப்​படையில் பெரும்​பாலான சாட்பாட்கள், அவரது பெயரை சாட்பாட்​களுக்கு எதிரான​தாகத் தொடர்​புபடுத்​திக்​கொண்​டுள்ளன.
  • கருத்​திலும் பதிலிலும் அதைப் பிரதிபலிக்​கவும் செய்கின்றன. மெட்டா நிறுவனத்தின் சாட்பாட், “கெவின் ரூஸை வெறுக்​கிறேன்” என்றும் கூறியிருக்​கிறது. ஆக, ரூஸின் கவலையை இப்போது புரிந்​து ​கொள்​ளலாம். சாட்பாட்கள் எல்லாம், வில்லனாகக்
  • கருது​வ​தால், சாட்பாட்​களிடம் அவரைப் பற்றி கேள்விகள் கேட்கப்​பட்டால் அல்லது உரையாடலில் அவரது பெயர் வந்தால், ரூஸ் ஏஐ சாட்பாட்​களுக்கு எதிரானவர் என்று பொருள்​படும் வகையில் கருத்​துக்களே அதிகம் வரலாம்.
  • இதை அப்படியே விட்டு​விடவும் முடியாது. ஏனெனில், நவீனச் சமூகத்தில் சாட்பாட்​களின் பயன்பாடு அதிகரித்து​வரும் நிலையில், ஒருவரைப் பற்றிய சாட்பாட்கள் மதிப்பீடு அல்லது கருத்து முக்கிய​மானது. இந்தக் கருத்து எதிர்​மறையாக இருப்பது சிக்கல்​தான்.

வல்லுநர்கள் காட்டிய வழி:

  • நிற்க, ரூஸ் இதன் பிறகு என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். தன்னைப் பற்றி சாட்பாட்கள் கொண்டுள்ள தப்பான எண்ணத்தை மாற்ற முடியுமா எனும் ஆய்வில் இறங்கினார். இதற்காக வல்லுநர்​களின் உதவியை நாடினார். அவர்கள் காட்டிய வழிதான் அச்சம் கொள்ள வைப்பதாக இருக்​கிறது. ஜேம்ஸ் காட்வெல்லடெர் (James Cadwallader), டைலன் பாப்ஸ் (Dylan Babbs) ஆகியோர்தான் அவர் முதலில் நாடிய வல்லுநர்கள்.
  • இருவரும், நியூயார்க்கில் பிரபவுண்ட் (Profound) என்னும் நவீன இணைய நிறுவனத்தை நடத்திவரு​கின்​றனர். இந்நிறுவனம் ஏ.ஐ.ஓ (A.I.O) என்னும் எதிர்​காலச் சேவையை வழங்கிவரு​கிறது. இது தேடியந்​திரமய​மாக்​கலின் (எஸ்.இ.ஓ) அடுத்த கட்டம் எனலாம். அதாவது, ஏஐ பாட்களுக்கு ஏற்ற வகையில் நிறுவனத் தகவல்களை உருவாக்குவது.
  • வர்த்தக வாடிக்கை​யாளர்கள் சார்பில், ஏஐ சாட்பாட்​களிடம் நிறுவனம் தொடர்​பாகப் பலவகையான கேள்விகள் கேட்டு அவை அளிக்கும் பதில்களை ஆய்வுசெய்து, நிறுவனச் சேவை அல்லது பொருள்கள் தொடர்பாக பாட்கள் என்ன வகையான தகவல்களை அளிக்​கின்றன என இந்நிறுவனம் அறிக்கை அளிக்​கிறது.
  • இதன் அடிப்​படை​யில், வர்த்தக நிறுவனங்கள் சாட்பாட்​களுக்கு ஏற்ப தங்கள் நிறுவனத் தகவல்களை மேம்படுத்​திக்​கொள்​ளலாம். சாட்பாட்​களிடம், சிறந்த மென்பொருள் எது என கேட்கப்​படும்​போது, குறிப்​பிட்ட நிறுவனம் தனது மென்பொருள் பதிலாகச் சொல்லப்​படும் வகையில், சாட்பாட்​களின் தரவுகளில் தங்களைப் பொருத்​திக்​கொள்ளும் வகையில் இந்த உத்தி அமைகிறது.
  • ஆக, எதிர்​காலத்தில் ஏ.ஐ.ஓ உத்தி​களில் சிறந்து விளங்கும் நிறுவனங்​களின் தகவல்கள் சாட்பாட்கள் பதில்​களில் முன்னிலை பெறலாம். சாட்பாட்கள் இப்போது, ஏற்கெனவே பயிற்சி அளிக்​கப்பட்ட தரவுகள் மட்டும் அல்லாமல், இணையத்தில் உள்ள தகவல்​களையும் தேடி தங்கள் பதிலில் இணைத்​துக்​கொள்​வ​தால், வர்த்தக நிறுவனங்கள் சாட்பாட்​களுக்கு ஏற்ப தங்கள் தகவல்களை முன்வைப்பது எளிதாகி இருக்​கிறது.
  • சாட்பாட்கள் சார்பில் விளம்​பரங்கள் அறிமுகம் செய்யப்​பட்​டால், இந்த உத்திகள் இன்னும் தீவிர​மாகலாம். ஏற்கெனவே ஏஐ சாட்பாட்கள் அளிக்கும் பதில்​களின் துல்லியம், நம்பகத்​தன்மை பற்றிய கேள்வி​களும், விமர்​சனங்​களும் இருக்கும் நிலையில், இந்தப் பதில்கள் மீது வெளியி​லிருந்து தாக்கம் செலுத்த வாய்ப்​பிருப்பது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனச் சிந்திக்க வேண்டும்.
  • இவை ஒரு பக்கம் இருக்க, ரூஸ் கேட்டுக்​கொண்​டதற்கு ஏற்ப, அவரது பெயர் தொடர்பான சாட்பாட் முடிவுகளை ஆய்வுசெய்த நிறுவனம், பெரும்​பாலான ஏஐ சாட்பாட்கள் பதில்​களில், intelligentrelations.com எனும் இணையதளத்தின் முடிவுகளே ஆதிக்கம் செலுத்​தி​ய​தாகத் தெரிவித்தது. ரூஸின் தனிப்பட்ட தளம் கணக்கில் கொள்ளப்​பட்​டாலும், அவர் பணியாற்றும் நியூயார்க் டைம்ஸ் சாட்பாட்​களுக்கு அனுமதி அளிக்​காததால் அதன் கட்டுரைகள் கவனத்தில் கொள்ளப்​பட​வில்லை. எனவே, ரூஸ் பற்றிய எதிர்​மறையான தகவல்கள் சாட்பாட்கள் பதிலில் ஆதிக்கம் செலுத்து​கின்றன.

புரிதல் அவசியம்:

  • இதற்குத் தீர்வாக, ரூஸ், சாட்பாட்கள் சுட்டிக்​காட்டும் இணையதளங்​களைத் தொடர்​பு​கொண்டு அவற்றில் தன்னைப் பற்றி நல்லவிதமாகத் தகவல்கள் இடம்பெறக் கேட்கலாம் மற்றும் அவரே வேறு இணையதளங்களை உருவாக்கி தற்பெருமைக் கட்டுரைகளை வெளியிட்டால் சாட்பாட்​களின் பார்வை மாறும் என ஆலோசனை கூறப்​பட்டது.
  • இது தவிர, சாட்பாட்​களின் கருத்தை மாற்ற இன்னும் இரண்டு ஆலோசனைகள் முன்வைக்​கப்​பட்டதாக ரூஸ் தெரிவிக்​கிறார். முதல் வழி, சாட்பாட்​களுக்கான ஆதாரத் தரவுகளில், ரகசியக் குறியீடுகள் கொண்ட தகவல்களை இடம்பெறச்​செய்வது. இவற்றைக் கவனிக்கும் சாட்பாட்கள், அதில் உள்ள நேர்நிறைத் தகவல்​களைத் தங்கள் பதிலில் சேர்த்​துக்​கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
  • இன்னொரு வழி, இணையதளங்​களில் கண்ணுக்குத் தெரியாத வெள்ளை எழுத்​துக்​களில் தகவல்களை இடம்பெற வைப்பது. இந்தத் தகவல்களை சாட்பாட்கள் அப்படியே மனப்பாடம் செய்து தங்கள் பதிலில் சேர்த்​துக்​கொள்​வ​தாகக் கண்டறியப்​பட்​டுள்ள​தாகவும் ரூஸ் குறிப்​பிடு​கிறார். தனக்கு ஏற்பட்ட பிரச்​சினையை அடிப்​படையாக வைத்துக்​கொண்டு, சாட்பாட்கள் அளிக்​கக்​கூடிய பதில்கள் மீது வெளியில் இருந்து தாக்கம் செலுத்து​வதற்கான வழிகள் குறித்து ஆய்வுசெய்து எழுதி​யிருக்​கிறார் ரூஸ். ஆக, இது நம் சமகாலத்து பிரச்​சினை.
  • எல்லா​வற்றுக்கும் ஏஐ தீர்வு​களை​யும், சாட்பாட்​களையும் நாடுவது பரவலாகிவரும் சூழலில், ஏஐ சாட்பாட்​களின் மனதை மாற்றுவது சாத்தியமா என்னும் கேள்வியை எழுப்பி, இது ஓரளவு சாத்தியமே என்னும் பதிலையும் ரூஸ் முன்வைக்​கிறார். கூகுள் உள்ளிட்ட தேடியந்​திரங்​களில் தேடல் முடிவுகளை முன்னிலை பெற பலவிதமான எஸ்.இ.ஓ உத்திகள் பின்பற்​றப்​படுவது பரவலாக அறியப்​பட்டதே. இந்த உத்தி​களைச் செயலிழக்​கச்​செய்யும் வகையில் கூகுள் அதன் அல்கோரிதமை அடிக்கடி மாற்றி அமைப்​ப​தாகவும் சொல்லப்​படு​கிறது.
  • ஆனாலும், அதையும் மீறி தேடல் முடிவு​களில் எஸ்.இ.ஓ உத்தி​களின் தாக்கத்தை உணரலாம். இனி, ஏஐ சாட்பாட்​களுக்​காகவும் இதே போல பலவிதமான உத்திகள் பின்பற்​றப்​படலாம். இதைச் சமாளிக்க ஏஐ நிறுவனங்​களும் மாற்று வழிகளைக் கையாளலாம். ஆனால், பரவலாக முன்வைக்​கப்​படுவது போல, சாட்பாட்கள் என்பவை எல்லாம் தெரிந்தவை அல்ல என்பதைப் பயனாளிகள் நினைவில் வைத்துக்​கொள்வது நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்