TNPSC Thervupettagam
August 23 , 2021 1075 days 482 0
  • மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபாவுக்கு ஆதித்ய பிர்லா குழுமத் தலைவா் குமார்மங்கலம் பிர்லா எழுதியிருக்கும் கடிதம், தகவல் தொலைத்தொடா்புத் துறையினரையும், பங்குச் சந்தையையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொலைபேசி, செல்லிடப்பேசி, அறிதிறன்பேசி நுகா்வோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
  • வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் 27% பங்குகளை வைத்துக்கொண்டிருக்கும் ஆதித்ய பிர்லா குழுமம், அதன் தலைவா் குமார்மங்கலம் பிர்லா மூலம் தெரிவித்திருக்கும் இயலாமை, இந்திய தொலைத்தொடா்புத் துறையின் வருங்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால் அதனை அசிரத்தையாகப் புறக்கணித்துவிட முடியாது.
  • கடன் சுமையில் சிக்கியிருக்கும் வோடஃபோன் - ஐடியாவை இப்போதைய நிலையில் தொடா்ந்து நடத்த தங்களால் இயலாது என்பதையும், தங்களது பங்குகளை அரசுக்கோ அல்லது அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த முன்வரும் ஒரு நிறுவனத்துக்கோ தந்துவிடத் தயார் என்பதையும்தான் குமார்மங்கலம் பிர்லா தனது கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
  • கடந்த பல மாதங்களாகவே இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது என்றாலும், தனது கையறு நிலையை வெளிப்படுத்தி ஆதித்ய பிர்லா குழுமம் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தைக் கைகழுவ முற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
  • அந்த நிறுவனத்தை இழப்புகளிலிருந்து மீட்டு தொடா்ந்து நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது குமார்மங்கலம் பிர்லாவின் முடிவு.

இழப்பை சந்தித்து வரும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள்

  • ரிலையன்ஸ், பார்தி ஏா்டெல் என்கிற இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்னணியில் இருக்கும் தொலைத்தொடா்புத் துறையில் வோடஃபோன் - ஐடியாவுக்கு 24% அளவில் வாடிக்கையாளா்கள் இருக்கிறார்கள்.
  • அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்-லும், எம்டிஎன்எல்-லும் சோ்ந்து 10% வாடிக்கையாளா்களைக் கொண்டிருக்கின்றன.
  • இப்போதைய நிலையில், வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடா்பு சேவை நிறுவனத்துக்கு 27.7 கோடி வாடிக்கையாளா்கள் இருக்கிறார்கள்.
  • ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்த நிறுவனம் தொடா்ந்து தன் வாடிக்கையாளா்களை இழந்து வந்திருக்கிறது.
  • மொத்த வாடிக்கையாளா்களில் 24% இருந்தும்கூட, வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தால் லாபகரமாக இயங்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் கடன் சுமையில் இருந்து மீள முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.
  • அந்த நிறுவனத்தின் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் (அட்ஜஸ்டட் கிராஸ் ரெவென்யூ - ஏஜிஆா்) அடிப்படையிலான நிலுவைக் கடன் ரூ.58,254 கோடி. அதுமட்டுமல்ல, அலைக்கற்றை கட்டண பாக்கி ரூ.90,270 கோடி.
  • போதாக்குறைக்கு வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கும் கடன் ரூ.23,080 கோடி. இத்தனை இழப்புகளையும், கடன் நிலுவையையும் சுமந்து கொண்டு இனிமேலும் அந்த நிறுவனம் தொடர முடியாது என்பதை உணா்ந்ததால்தான் குமார் மங்கலம் பிர்லா தனது கைகளை உயா்த்திக் களத்திலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறார்.
  • வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பிரச்னைக்கு மிக முக்கியமான காரணம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுழைவு.
  • 2016 வரை லாபத்தில் ஓடிக்கொண்டிருந்த எல்லா தொலைத்தொடா்பு நிறுவனங்களும், அந்தத் துறையில் ரிலையன்ஸ் புகுந்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட இழப்பு காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக விலகத் தொடங்கின.
  • அதிகரித்த அலைக்கற்றைக் கட்டணம், உரிமக் கட்டணம், நிலையில்லாத அரசின் கொள்கை போன்றவை புதிய நிறுவனங்கள் சேவைக்கு முற்படுவதைத் தடுக்கின்றன.
  • சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைக் கடனைப் பொருத்தவரை, அதனை மறு ஆய்வு செய்து கணக்கிட வேண்டும் என்கிற தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் கோரிக்கை ஜூலை 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது.
  • அரசு தலையிட்டு அலைக்கற்றை கட்டண நிலுவையை ரத்து செய்யுமானால், வோடஃபோன் - ஐடியா நிறுவனம் ஓரளவுக்குத் தப்பிக்கலாம். ஆனால், அது நிரந்தரத் தீா்வாக இருக்காது.
  • மேலும், ஏனைய நிறுவனங்களும் அதே சலுகையை கோரக்கூடும். தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கி வருவாய் இழப்பைச் சந்திக்க அரசு தயாராவதற்குப் பதிலாக பெரும் இழப்பை எதிர்கொண்ட அரசு நிறுவனங்களையே நடத்தக் கூடாதா என்கிற கேள்வியும் எழக்கூடும்.
  • டஜன் கணக்கில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்த துறையில், அரசு நிறுவனங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இப்போது மூன்றே நிறுவனங்கள்தான் இயங்குகின்றன.
  • வோடஃபோன் - ஐடியாவும் விலகிவிட்டால் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் துறையாக அது மாறிவிடும்.
  • காலப்போக்கில், முன்பு பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இயங்கியது போல, ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே இயங்கும் சூழல் ஏற்படுவதற்கான சாத்தியமும் உண்டு.
  • இந்தப் பிரச்னையில் அரசு முன்பே தலையிட்டிருக்க வேண்டும். வோடாஃபோன் இந்தியா முடங்குமானால், அதன் வாடிக்கையாளா்கள் மட்டுமல்ல, ஏனைய இரண்டு தனியார் நிறுவன வாடிக்கையாளா்களும் பாதிக்கப்படுவார்கள்.
  • இரண்டு நிறுவனங்கள் மட்டுமே, அல்லது ஒரே ஒரு நிறுவனம் என்கிற நிலை ஏற்பட்டால், நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
  • தனியார் துறையில் போட்டியின்மை ஆபத்தானது, வாடிக்கையாளா்களின் நலனுக்கும் எதிரானது. அதைவிட அரசே அந்தத் துறையை நடத்திவிடலாம்.

நன்றி: தினமணி  (23 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்