TNPSC Thervupettagam

ஏங்கித் தவிக்கும் நீதி!

June 26 , 2019 2026 days 983 0
  • உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும்ஒவ்வொருவரும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து தீர்ப்பதை தங்களது இலக்காக அறிவித்தாலும்கூட, தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை பலம் அதிகரிக்கிறதே தவிர, இலக்கை நோக்கிய பயணம் தொடங்குவதாகக்கூடத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுப்பியிருக்கும்  மூன்று கடிதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இப்போதைய அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்றும் தனது முதல் இரண்டு கடிதங்களில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மூன்றாவது கடிதத்தில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீள் நியமனம் செய்யும்  கைவிடப்பட்ட கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 31 இடங்களும் இப்போது நிரப்பப்பட்டுவிட்டன.கடந்த ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, உச்சநீதிமன்றத்தில் மட்டும் 57,987 வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது தலைமை நீதிபதியின் கருத்து.
ஓய்வு வயது 
  • அதேபோல, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்பது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் இன்னொரு கோரிக்கை. இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது 62.  தலைமை நீதிபதியின்  இந்த ஆலோசனையை  மத்திய அரசு  உடனடியாகப் பரிசீலிப்பது அவசியம். இப்போதைய நிலையில் இந்தியாவிலுள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 399 நீதிபதிகளின் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதாவது, அனுமதிக்கப்பட்ட இடங்களில் 37% நிரப்பப்படாமல் இருக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 43 லட்சத்துக்கும் அதிகம் எனும்போது, உடனடியாக  உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை அதிகரிப்பதும், நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதும் எந்த அளவுக்கு அவசியம் என்பதை நாம் உணரலாம்.
  • உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மட்டுமல்ல, கீழமை நீதிமன்றங்களின் நிலைமை இதையெல்லாம்விட மோசமாகக் காணப்படுகிறது. ஏறத்தாழ 5,000-க்கும் அதிகமான இடங்கள் விசாரணை நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
  • சுமார் 84 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. கீழமை நீதிமன்றங்களில் விசாரணைக்குக் காத்திருக்கும் வழக்குககளின் எண்ணிக்கையை உடனடியாகக் குறைத்தால் மட்டுமே சாமானியர்களுக்கு முறையான நீதி வழங்கப்படும். விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் பல நிரபராதிகள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதித் துறையும் அரசும் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நாமும் உணரக் கடமைப்பட்டவர்கள்.
தேங்கிக் கிடக்கும் வழக்குகள்
  • இந்தியாவில் தீர்ப்புக்காக தே(ஏ)ங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 3 கோடிக்கும் அதிகம். அதில், மிக அதிகமான வழக்குகள் உத்தரப் பிரதேசம் (61.58 லட்சம்), மகாராஷ்டிரம் (33.22 லட்சம்), மேற்கு வங்கம் (17.59 லட்சம்), பிகார் (16.58 லட்சம்), குஜராத் (16.45 லட்சம்) ஆகிய ஐந்து மாநிலங்களில் காணப்படுகின்றன. தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் 60% வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணையில் இருப்பவை. ஏனைய 40% வழக்குகள்  ஐந்து ஆண்டுகளும், அதற்கு மேலும் காத்துக் கிடப்பவை.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை பலத்தை அதிகரிப்பது, உச்சநீதிமன்ற நீதிபதிகளைப்போல உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை  65 வயதாக அதிகரிப்பது உள்ளிட்ட இரண்டு கோரிக்கைகளுமே  உடனடியாக நிறைவேற்றப்படக்கூடியவை அல்ல.
  • அரசியல் சாசனத் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே இவை இரண்டும் சாத்தியமாகும். அதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நீதித் துறை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தலைமை நீதிபதியின் கோரிக்கையை கெளரவம் பார்க்காமல் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று எப்படி எதிர்பார்ப்பது? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மீள் நியமனத்தின் மூலம் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து, முடிவுக்குக் கொண்டு வருவது என்கிற ஆலோசனையில் தவறில்லை.
  • ஆனால், அது குறித்த தெளிவான வழிமுறைகளும் நடைமுறைகளும் உருவாக்கப்படாத வரையில், அது ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பயன்படுமே தவிர, வழக்குகளை விரைந்து தீர்க்க வழிகோலுமா என்பதென்னவோ சந்தேகமாக இருக்கிறது. அதற்காக அந்த முயற்சியே தவறு என்று ஒதுக்கிவிடவும் முடியாது.
  • தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்மொழிந்திருக்கும் ஆலோசனைகள் நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு, தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கும், சிறைச்சாலையில் ஏங்கித் தவிக்கும் விசாரணைக் கைதிகளுக்கும் விடிவை ஏற்படுத்தியாக வேண்டும்.

நன்றி: தினமணி(26-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்