TNPSC Thervupettagam

ஏன் கூடாது ஒரே தேர்தல்

September 4 , 2023 496 days 300 0
  • எதிர்பார்த்தது போன்று மோடி 2.0 அரசு தன் ஏமாற்றுக் குணத்தின் உச்சத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. நம்முடைய அரசமைப்பு கொண்டிருக்கும் கூட்டாட்சி அடிப்படையைச் சிதைக்கும் விதமாக அடுத்து, ‘ஒரு தேசம், ஒரே தேர்தல்’ எனும் முறை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது.

செலவுக் குறைப்பு வாதம் சொத்தையானது

  • மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தும் இந்த முறையைக் கொண்டுவந்தால், தேர்தல் செலவை வெகுவாகக் குறைக்கலாம் என்பதே பாஜக இந்த முறையைக் கொண்டுவர வெளியே சொல்லும் காரணம்.
  • சரி, இப்படியொரு முறையைக் கொண்டுவந்தால், தேர்தல் செலவு குறையுமா என்று பார்த்தால், சில உண்மைகளை ஆராய்ந்தாலே இல்லையென்று சொல்லிவிடலாம்.
  • மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடத்தும் செலவுகள் ஒரு உறுப்பினருக்கு உத்தேசமாக ரூ. 1 கோடி ஆகிறது என்று கொள்வோம் (சமீபத்திய கர்நாடகத் தேர்தல்கள்படி). ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்து ரூ.4,150 கோடி முதல் ரூ.5,500 கோடி வரை ஆகலாம். அரசமைப்புப்படியான ஜனநாயகத்தில் வாக்காளரின் உரிமைகளை நிறைவேற்ற இந்தத் தொகை அதிகம் என்று சொல்லப்பட்டாலும்கூட, ஐந்தாண்டுகளில் மாநிலங்களின் மொத்த பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.
  • தமிழ்நாட்டையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இங்கே 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எனும்போது, ஒவ்வொரு ஐந்தாண்டும் தேர்தல் நடத்த அதிகபட்சம் ரூ.250 கோடி செலவு எனலாம். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த முக்கியத் தேவைதான் இந்தச் செலவு.

எப்படிச் சொல்கிறேன்?

  • இந்தச் செலவைத் தமிழக  அரசின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குமான மொத்த பட்ஜெட்டோடு நாம் ஒப்பிட்டுப்பார்ப்போம். இந்த 15வது சட்டப்பேரவையைப் பொறுத்தளவில், அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக்குமான பட்ஜெட்  குறைந்தது ரூ.13 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று மதிப்பிடுகிறேன்.
  • அதேபோல, ஒவ்வொரு  சட்டப்பேரவை உறுப்பினருக்குமான தொகுதி மேம்பாட்டு நிதி ஓர் ஆண்டுக்கு ரூ.2.50 கோடி; அப்படியென்றால் 234 தொகுதி உறுப்பினர்களுக்குமான ஐந்தாண்டுகளுக்கான மொத்த தொகை ரூ.2,925 கோடி.
  • இப்போது இந்தத் தொகைகளோடு இவ்வளவு பெரிய தொகையை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கான தேர்தல் செலவை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு சட்டப்பேரவை ஐந்தாண்டுகளில் கையாளும் ரூ.13 லட்சம் கோடியோடு ஒப்பிட அந்தச் சட்டப்பேரவையைத் தேர்ந்தெடுக்க ஆகும் ரூ.250 கோடி வெறும் 0.02%.
  • அதேபோல,  ஐந்தாண்டுகளில் 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2,925 கோடியோடு ஒப்பிட அந்தச் சட்டப்பேரவையைத் தேர்ந்தெடுக்க ஆகும் ரூ.250 கோடி வெறும் 8%.
  • ஆக, இந்த விஷயத்தை நியாயமாகப் புரிந்துகொள்ளும் எவருக்கும் பாஜக அரசு சொல்லும் செலவுக் குறைப்பு வாதம் ஒரு விஷயம் அல்ல என்பது இதன் மூலமாகவே புரிந்துவிடும். நாம் இதுகுறித்து மேலும் விவாதிப்போம்.

எங்கெல்லாம் செலவைக் குறைக்கலாம்?

  • செலவுக் குறைப்பு குறித்துப் பேசும்போது, மாநில, ஒன்றிய அரசுகள் எக்கச்சக்க பணத்தைப் பல விஷயங்களில் கேள்விக்குரிய வகையில் செலவுசெய்வதையும் நாம் கவனிக்க வேண்டும் (சிலைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள், விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள்). அங்கெல்லாம் குறைக்கலாம்தானே?
  • பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், இப்படித் திட்டமிடப்பட்ட நிதியில் நிறைய செலவுசெய்யப்படாமல் விடப்படுவது நாடு முழவதுமே நடக்கிறது. (2016 சிஏஜி அறிக்கையில் கடந்த 20 ஆண்டுகளில் ரூ.1,30,000 கோடி செஸ் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)
  • ஆக, தேர்தல் நடைமுறையின் செலவுகளைப் பிரித்துப் பார்த்தால், நாடு முழமைக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால் எந்தக் குறிப்பிடத்தக்க சேமிப்பும் நிகழும் என்று தோன்றவில்லை.

தேர்தல் ஆணையத்தின் போதாமைகள்

  • நம்முடைய தேர்தல் ஆணையம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே முழு நேர ஊழியர்களைக் கொண்ட ஓர் அமைப்பு; இங்கே  பெரும்பாலும் மாநில நிர்வாகப் பதவி சார்ந்த அலுவலர்கள்தான் பெருமளவிலான தேர்தல் பணிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு மாவட்டத்தின் ஆட்சியர்தான் அதன் தேர்தல் அலுவலர்களும். நியமிக்கப்பட்ட ஊழியர்கள் (உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்களிப்பு போன்றவற்றில் கூடுதல் வேலைகள் கொடுக்கப்படும்).
  • ஒரே நாளில் இரண்டு மடங்கு மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பெற்று, கையாள்வதன் செலவை, இரண்டு வெவ்வேறு நாட்களில் பாதிப் பாதி இயந்திரங்களைக் கையாள்வதன் செலவோடு ஒப்பிட்டால் அவ்வளவு குறைவாக இருக்காது. சொல்லப்போனால் தனித்தனியாகச் செய்வதே நம்பகத்தன்மையோடு, சிறப்பாக செயல்பட வழிவகுக்கும். களத் தேர்தல் நடைமுறைகளின் அடிப்படையான மற்றும் மாறும் செலவுகளை ஒப்பிட்டால், ஒரே தேர்தலால் செலவு குறைவதற்கான வாய்ப்பு தெரியவில்லை.

தேர்தல்களுக்கு இன்னும் அதிகம் செலவுசெய்ய வேண்டும்

  • ஆக, 'ஒரு தேசம், ஒரே தேர்தல்' என்ற கருத்தால் அரசு / பொது நிதிகள், வளங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது வெளிப்படையாகிவிட்டது. சரி, இந்த விஷயத்தால் அரசியல் கட்சிகளின் செலவு குறையுமா? தேர்தல்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் அரசியல் கட்சிகளின் செலவு நிச்சயம் குறையும். ஆனால், அரசியல் கட்சிகளின் செலவைக் குறைக்க நமது அரசமைப்பின் அடிப்படையையே அழிக்க வேண்டுமா? நோயாளியைக் குணமாக்க மருத்துவரைக் கட்டிப்போடுவது போலிருக்கிறது இது.
  • நானும் தேர்தலில் போட்டியிட்ட அனுபவத்திலிருந்தும், கட்சியில் வேறு பல விஷயங்களுக்கிடையே தரவுகளிலும் நடைமுறைகளிலும் கவனம் செலுத்திய அணியின் தலைவராகவும், நான் உண்மையான ஜனநாயக நடைமுறைகளை உறுதிப்படுத்த தேர்தல்களில் குறைவாக அல்ல, இன்னும் நிறைய செலவழிக்க வேண்டும் என்றே சொல்வேன்.
  • ஏனென்றால், நம்முடைய தேர்தல் முறையில் ஏராளமான போதாமைகள் உள்ளன. வாக்காளர் பட்டியல்களில் பெயர் விடுபடல், விடுவிப்பில் பல ஓட்டைகள் என்பது தொடங்கி அடிப்படை நடைமுறைகளிலேயே பெரிய பிழைகள் இருக்கின்றன. வாக்காளர்களை வயதுவாரியாகப் பிரித்து ஒரு வரைபடத்தில் குறித்தாலே (இந்தியா போன்ற வளரும் நாட்டில் அது (இடதுபுறம்) இளையவர்களிடமிருந்து (வலது) வயதானவர்கள் பக்கம் சரிய வேண்டும்) 18-25 வயதுள்ள இளம் வாக்காளர்கள் முழுமையாக சேர்க்கப்படாதது (விடுபட்டுள்ளது) தெரியும்.
  • இன்னொரு பிரச்சினை, முறைகேடுகளை எதிர்கொள்ளல். போலி வாக்காளர்கள் சேர்ப்புக்கு நமது 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவந்தாலே போதும்; இந்த ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து ஏப்ரல் 2017இல் - டிசம்பர் 2017க்குள், 47,000 பெயர் பதிவுகளை நீக்கியது மாநிலத் தேர்தல் ஆணையம்.
  • இந்த நீக்கங்களுக்குப் பின் வாக்காளர் பட்டியல்களை ஆராய்ந்து பார்த்தபோது இன்னும் பல நூறு போலி/தெளிவற்ற பதிவுகளைக் கண்டோம் - அவற்றைச் சரிசெய்ய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் எடுத்துச் சென்றோம். அவற்றில் அதிர்ச்சிகரமான ஒன்று, ஒரு வாக்காளர் அடையாள அட்டை ஐந்து வெவ்வேறு சாவடிகளில் ஆறு முறை பட்டியலிடப்பட்டு இருந்தது, ஐந்தில் 26 வயதுள்ள இந்துப் பெண் பெயர் ஒன்றிலும், ஒரு சாவடியில் மட்டும் அதே வாக்காளர் 43 வயதுள்ள முஸ்லீம் ஆணாகவும் பட்டியலிடப்பட்டு இருந்தார்.
  • தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளில் அனுபவமுள்ள எவரும் இன்னும் பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்ட முடியும். தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்படும் அரசு ஊழியர்கள், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் பெரும்பாலானோர் தேர்தல் நடைமுறைகளில் முழுமையான பயிற்சி பெறுவதில்லை. விஷமத்தனமான செயல்களை விடுங்கள், எதிர்பாரா செயல்பாடுகளை (பாதி நாளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாவது) கையாளக்கூட முழுமையாக பயிற்சி பெறுவதில்லை. பெரும்பாலும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் போட்டியாளர்களின் பிரதிநிதிகளும் 17சி படிவங்களை (வாக்களிப்பு முடிந்தபின் மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அறிவிப்பு) காலையிலேயே விவரங்கள் நிரப்பாமலேயே கையெழுத்து போட்டுவிடுகிறார்கள் என்பதை அறிந்தோம்.
  • தேர்தலின் வெவ்வேறு நிலைகளில் தேர்தல் ஆணையம் அதன் படிவங்களில் பட்டியல்களில் அறிவிக்கும் தரவுகள் நிறைய தொடர்பற்றிருக்கின்றன. 2019 பொதுத் தேர்தலில் நூற்றுக்கணக்கான இடங்களில் 17சி காகிதப் படிவங்களில் உள்ள மொத்த வாக்கு எண்ணிக்கைக்கும் ஆணையத்தின் திரட்டறிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்ததைக் கண்டோம். பெரும்பாலான இடங்களில் இது சில வாக்குகள் கூடுதல் குறைவுதான். ஆனால், சில இடங்களில் இது நூற்றுக்கணக்கான வாக்குகள். நல்லவேளை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு எண்ணிக்கைக்கு முன் பல பெரிய வேறுபாடுகளைச் சரிசெய்தார் - பெரும்பாலானவை அலுவலர் நிலை / தட்டச்சுப் பிழைகள் எனத் திரும்பப் பெறப்பட்டன.
  • இருப்பதிலேயே மோசம், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு தொகுதியிலும், ஆணையத்தின் சாவடி வாரி வாக்கு எண்ணிக்கைக் கணக்குக்கும் (17சி படிவங்கள்), சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை நாளில் எண்ணப்படும் வாக்குகளுக்கும் (20 படிவங்கள்) உள்ள பெரிய வித்தியாசங்கள். இங்கும் இரண்டு வகை தவறுகளும் நடக்கின்றன: சில இடங்களில் போடப்பட்டதைவிட நிறைய வாக்குகள் எண்ணப்படுவது, சில இடங்களில் எண்ணப்பட்டதைவிட நிறைய வாக்குகள் போடப்பட்டுள்ளது.
  • நான் இந்தத் தவறுகளில் (இதுவரை) எந்தச் சதித்திட்டமும் இருப்பதாக குற்றஞ்சாட்டவில்லை, இவை எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் அற்புதமாக ‘தற்காலிக’ முத்திரை ஒன்றைக் குத்தி விளக்கிவிடுகிறது. ஆனால், இத்தகைய முரண்பாடுகள் வாக்குச் சாவடி போன்ற அடிப்படை, சிறிய நிலைகளில் எண்ணிக்கைகளில் திரும்பத் திரும்ப நிகழும்போது, ஒரு நடைமுறையின் பல்வேறு நிலைகளில் நிகழும்போது, அந்த நடைமுறையை நிறைய முன்னேற்ற வேண்டியிருக்கிறது என்று தெரிகிறது. இன்னும் நிறைய ஆட்களையும் பிற வளங்களையும் முதலீடு செய்யாமல், இத்தகைய முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியாது.
  • நாம் தேர்தல்களுக்கு குறைவாக இல்லை, இன்னும் நிறைய செலவுசெய்ய வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் இந்த மிக மகத்தான புனிதமான செயல்பாடு அதிகபட்ச நேர்மையோடு, நம்பகத்தன்மையோடு, வெளிப்படையாக நடப்பதை உறுதிசெய்ய முடியும்.

நன்றி: அருஞ்சொல் (04 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்