TNPSC Thervupettagam

ஏன் பெரியாரை வட இந்தியா வரித்துக் கொள்ளவில்லை

November 29 , 2022 707 days 427 0
  • பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை இந்தி மொழியில் புத்தகங்களாக எழுதி வெளியிட்ட முதல் பதிப்பாளர் லலாய் சிங்; அந்தப் புத்தகத்துக்கு உத்தர பிரதேச அரசு விதித்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலேயே வழக்காடி வென்றவர்; சமூக நீதிக் காவலர்களில் ஒருவராக இன்று அவர் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்; அப்படியல்லாமல் மக்கள் அவரை மறந்துவிட்டனர் அல்லது அங்கீகரிக்கவில்லை என்பதுடன் அவரைப் பற்றிப் பேசுவதுகூட இல்லை. இது ஏன்? அதற்குக் காரணம் அவர் அறிமுகப்படுத்திய பெரியார், வட இந்திய மக்களால் வரவேற்கப்படவில்லை என்பதே ஆகும்.
  • லலாய் சிங் (1911-1993) இந்தி பேசும் மக்கள் இடையேகூட, வகைப்படுத்த முடியாத ஓர் ஆளுமை; ‘ராமாயணம்: உண்மையான பார்வை’ என்ற பெரியாரின் நூலை லலாய் சிங் இந்தியில் எழுதி 1968இல் வெளியிட்டார். அடுத்த ஆண்டு உத்தர பிரதேச அரசு அந்த நூலுக்குத் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து லலாய் சிங், உச்ச நீதிமன்றத்தில் வழக்காடினார். நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி, சையது முர்தசா ஃபஸலாலி இந்த வழக்கை விசாரித்து, லலாய் சிங்குக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கினர்.

யார் இந்த லலாய் சிங்?

  • லலாய் சிங் 1935இல் ‘குவாலியர் தேசிய படை’ என்ற மாநிலக் காவல் படையில் கான்ஸ்டபிளாக சேர்ந்து 1950இல் ஓய்வுபெற்றவர். தன்னுடைய வாழ்க்கையை அம்பேத்கரின் சிந்தனைகளுக்கும் பகுத்தறிவு இயக்கத்துக்கும் அர்ப்பணித்தார். ஏராளமான புத்தகங்களையும் துண்டறிக்கைகளையும் வெளியிட்டார். ராமாயணத்தில் வரும் சம்பூக முனி, ஏகலவ்யன் ஆகியோர் குறித்துப் பகுத்தறிவைத் தூண்டும் வகையில் நாடகங்கள் எழுதினார்.
  • புராணங்களிலும் தொன்மங்களிலும் கூறப்படும் கதைகளின் உட்பொருளை அவர் இடைநிலை மக்களுக்குப் புரியும்படியாக வெளிக்கொணர்ந்தார். அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சியில் (ஆர்பிஐ) உறுப்பினர் ஆனார். சமூக நீதி பெறுவதற்கான அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கினார், பின்னாளில் அதன் அடிப்படையில்தான் கான்ஷிராம், பட்டியல் இனத்தவரையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் அணிசேர்த்தார். லலாய் சிங்கின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தரம்வீர் யாதவ் ககன் ஐந்து பெரிய தொகுப்புகளாகத் திரட்டியிருக்கிறார்.

செல்வாக்கு பெறாத லலாய்

  • உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சி மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து நான்கு முறை அரசு அமைத்திருந்தும், வெகுஜன மக்கள் இடையே லலாய் சிங்கின் பெயரும் புகழும் பரவவில்லை. அவர் மட்டுமல்ல, சித்தாந்தரீதியாக அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட பெரியாரையும் உத்தர பிரதேச வெகுஜன மக்கள் கொண்டாடவில்லை.
  • சமூக நீதியை வலியுறுத்தும் வெகுஜன மக்களுடைய அரசியலில் லலாய் சிங் ஏன் ஒதுக்கப்பட்டார்? தென்னிந்தியாவில் பெரியாருக்குக் கிடைத்த ஆதரவும் வரவேற்பும் உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் ஏன் கிடைக்கவில்லை? இவ்விரு மாநிலங்களும் 1990களில் (மண்டல் பரிந்துரை மூலமான) அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட மவுனப் புரட்சியை நடத்தியவை.

பெரியாரும் வட இந்தியாவும்

  • பெரியாரின் சிந்தனைகளும் பிரச்சாரங்களும், இந்தியக் குடியரசு ஒரு கூட்டரசு என்பதை வலியுறுத்தின. காங்கிரஸ் எதிர்ப்பு, இந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்பு, கடவுள் மறுப்பை வலியுறுத்தும் நாத்திகப் பிரச்சாரம், பிராமணர்களுக்கு எதிரான கொள்கை, சமூக நீதி, மகளிர் உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் கொள்கைகள் பெரியாருடைய அடையாளங்கள். வட இந்திய சமூக நீதி இயக்கத்தின் சட்டகமும் வேறு, பாதையும் வேறு; அதில் பெரியாரும், லலாய் சிங்கும் பொருந்தி வரவில்லை.
  • ராம் மனோகர் லோகியாவும் இதர சோஷலிஸ்ட் தலைவர்களும் விவசாய சமூகங்கள் தங்களுடைய அரசியல் உரிமையை வலியுறுத்துவதை ஆதரித்தனர். காங்கிரஸ் தலைமையிலான வட இந்திய ஆதிக்க அரசியலில், விவசாய சமூகங்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அழுத்தப்பட்டனர். எனவே, சோஷலிஸ்ட்டுகள் தலைமை தாங்கிய மக்கள் இயக்கங்கள் காரணமாக கற்பூரி தாக்கூர், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத், நிதீஷ் குமார், சரத் யாதவ் போன்ற தலைவர்கள் மக்கள் இடையே செல்வாக்கு பெற்றனர். இந்தக் காலகட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலச் சட்டப்பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதைச் சமூக – அரசியல் கள ஆய்வாளர் கிறிஸ்டோ ஜாஃபர்லோ புள்ளிவிவரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார்.

தென்னிந்திய செல்வாக்கு இல்லை

  • லோகியாவுக்கும் வட இந்தியாவின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு அரசியல் தலைவர்களுக்கும் தென்னிந்திய சமூக சீர்திருத்த இயக்கம் பெரிய ஈர்ப்பாக இருக்கவில்லை. அவர்களுக்கு அரசியல் களத்திலும் கல்வி – வேலைவாய்ப்பிலும் தங்களுக்குரிய பங்கைப் பெறுவது மட்டுமே முக்கியமாக இருந்தன. உழைக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி அவர்களை மூட நம்பிக்கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற லட்சியமெல்லாம் இல்லை.
  • பகுத்தறிவு, அறிவியல்பூர்வமான அணுகுமுறை லோகியாவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் செயல்திட்டமாக இருக்கவில்லை. அவர்களுடைய சமூகநீதி என்ற கருத்துகூட அரசியலிலும் கல்வி – வேலைவாய்ப்பிலும் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதுடன் நின்றது. சோஷலிஸத்தை வலியுறுத்திய ராம் மனோகர் லோகியா, ‘ராமாயண மேளா’ என்ற பெயரில் மக்கள் பங்கேற்கும் திருவிழாக்களைக்கூட நடத்தியிருக்கிறார். முலாயம், லாலு போன்றவர்கள் நாத்திகக் கருத்துகளையோ, பிராமண எதிர்ப்பையோ ஒருபோதும் அங்கீகரித்ததே இல்லை. காரணம், பெரியாரால் அவர்களுக்கு அரசியல்ரீதியிலான பலன் ஏதும் அவர்களுடைய மாநிலங்களில் இல்லை.

கான்ஷிராம் ஏற்றார்

  • பெரியாரின் கருத்துகளை கான்ஷிராம் ஏற்றார். தொடக்கக் காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரசுரங்களிலும் பதாகைகளிலும் சுவரொட்டிகளிலும் பெரியார் இடம்பெற்றார். சமூக அதிகாரமளித்தல், சமூக நீதி, பிராமண எதிர்ப்பு ஆகிய கருத்துகளை விவாதிக்கும் பெரியார் மேளாக்களைக்கூட அவர் நடத்தினார். அரசியல் வெற்றிக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, வேறுவிதமாகச் செயல்படத் தொடங்கினார் கான்ஷிராம். பெரியார் மேளாக்கள் குறித்து நீண்ட காலம் மிகப் பெரிய சர்ச்சைகள் நடந்தன. இறுதியில் அவற்றுக்கு பகுஜன் சமாஜ் கட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
  • லக்னௌ நகரில் அம்பேத்கர் பூங்காவில் பெரியாருக்கு சிலை வைக்கும் முடிவைக்கூட பகுஜன் சமாஜ் 2002இல் எடுத்தது. பாஜகவின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு அந்த முடிவையும் பகுஜன் சமாஜ் கட்சி அது கைவிட்டது. “அப்படியொரு யோசனையே எங்களிடம் இல்லை” என்று மாயாவதி பிறகு அறிவித்துவிட்டார். “பெரியாருக்கு தென்னிந்தியாவில்தான் ஆதரவாளர்கள் அதிகம். அவருக்கு சிலை வைப்பதாக இருந்தால் அங்கேதான் வைக்க வேண்டும்” என்றும் கூறினார். அதற்குப் பிறகு பொதுவெளியின் விவாதங்களிலிருந்து பெரியார் மறைந்துவிட்டார். பிறகு பகுஜன் சமாஜ் கட்சி, ‘சர்வஜன அரசியல்’ முறைக்கு மாறிவிட்டது. முற்பட்ட சாதிகளையும் அரவணைக்கும் சகோதரத்துவ மேளாக்கள் அதிகரித்தன. பெரியார் தொடர்பான பேச்சும் சிந்தனையும் அவர்களுடைய கட்சியிலிருந்து வெகு தொலைவுக்கு விலக்கப்பட்டது.

நன்றி: அருஞ்சொல் (29 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்