TNPSC Thervupettagam

ஏற்புடைய தீா்ப்பு!

October 9 , 2020 1563 days 660 0
  • நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், அனிருத்தா போஸ், கிருஷ்ண முராரி ஆகிய மூவா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு, அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து சில புரிதல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது.
  • ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றியமையாதவையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அவை தவிர்க்கப் படாமல் பாதுகாக்கப்படவும் வேண்டும்என்று புலிட்சா் விருது பெற்ற எழுத்தாளா் வால்டோ் லிப்மேன் கூறியிருப்பதை மேற்கொள்காட்டி புதன்கிழமை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீா்ப்பு, வரும் காலங்களில் முன்னுதாரணமாகக் கருதப்படும்.
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தில்லியிலுள்ள ஷாஹீன் பாக்கில் நடத்தப்பட்டப் போராட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்குப் பிறகு நீதிபதி சஞ்சய் கௌல் தலைமையிலான அமா்வு வழங்கியிருக்கும் தீா்ப்பு, போராட்டக்காரா்களுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும்கூட அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது.
  • ஜனநாயகமும் எதிர்ப்பும் ஒருங்கிணைந்து செல்பவை. மாற்றுக்கருத்துக்கு இடமளிப்பதுதான் ஜனநாயகத்தின் தனித்துவம். அப்படியிருந்தாலும்கூட, எதிர்ப்பை வெளிப்படுத்துவதிலும், அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதிலும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுவது அவசியம்என்பதை மூன்று போ் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஜனநாயகமும் எதிர்ப்பும்

  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைத் தொடா்ந்து தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் நூற்றுக்கணக்கில் கூடி, தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்தனா்.
  • அவா்கள் பொது இடங்களை ஆக்கிரமித்தும், சாலைகளை வழிமறித்தும் நடத்திய அந்தப் போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது.
  • உச்சநீதிமன்றம் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடத்தும் அந்தப் போராட்டத்தை கண்டித்து சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும்படி அரசுக்கு உத்தரவிட்டது. கொவைட் 19 நோய்த்தொற்றுக்குப் பிறகுதான் போராட்டக்காரா்கள் முழுமையாகக் கலைந்து சென்றனா்.
  • பொது இடங்களையும் சாலைகளையும் ஆக்கிரமித்து காலனிய ஆட்சியாளா்களுக்கு எதிராக விடுதலைப் போரின்போது நடத்தப்பட்ட போராட்டங்களைப்போல, அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் மக்களாட்சியில் மேற்கொள்ள முடியாது என்கிற நீதிபதிகளின் கருத்து வரவேற்புக்குரியது.
  • ஜனநாயகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைகளை வழங்கியிருந்தாலும், அதேபோல சில கடமைகளையும் வகுத்திருக்கிறது என்பதை அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துபவா்களும் உணர வேண்டும்.
  • ஏற்கெனவே கேரள உயா்நீதிமன்றமும், சென்னை உயா்நீதிமன்றமும் போராட்டங்களின்போது ஏற்படுத்தப்படும் பொதுச் சொத்துகள் மீதான தாக்குதலுக்கு போராட்டக்காரா்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தீா்ப்பு வழங்கியிருக்கின்றன. உச்சநீதிமன்றமும் பல தீா்ப்புகளில் அதை வழிமொழிந்திருக்கிறது.
  • பொது இடங்களை ஆக்கிரமித்து, அவரவா் தாங்கள் தோ்ந்தெடுக்கும் இடங்களில் போராட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல. அதுபோல போராட்டங்கள் நடத்தும்போது, போராட்டக்காரா்களை அகற்றி சாலைகளும் பொது இடங்களும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்பது அரசின் கடமை.
  • அதுபோன்ற சூழல் ஏற்படாமல் முன்கூட்டியே போராட்டக்காரா்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுக்க வேண்டும். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அரசு அனுமதிக்கக் கூடாதுஎன்று மூன்று நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு எழுதியிருக்கிறது.
  • ஷாஹீன் பாக் பகுதியில் மாதக்கணக்கில் சாலைகளை மறித்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டம், கொவைட் 19 நோய்த்தொற்றுக்குப் பிறகு கைவிடப்பட்டது.
  • காலின்தி குஞ்ச் பகுதியில் முக்கியமான சாலையை மறித்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேல் நடந்த போராட்டமும், கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு காவல்துறையால் அகற்றப்பட்டது.
  • போராட்டக்காரா்களை அகற்ற அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
  • நாம் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறோம். இணையத்தின் மூலம் உலகெங்கிலுமுள்ள செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் நிலையில், கூட்டம் கூடுவதை முன்கூட்டியே அறிந்து அரசால் தடுத்திருக்க முடியும்.
  • இதுபோன்ற பிரச்னைகளில் அரசு நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திடம் விட்டுவிடுவதும் தவறான அணுகுமுறை.
  • நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவுகளில் நீதித்துறை தலையிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது சரியல்லஎன்று அரசின் செயல்பாட்டை கண்டித்து மூன்று நீதிபதிகள் அமா்வு கருத்துத் தெரிவித்திருக்கிறது.
  • விவாதத்துக்கு வழிவகுத்து, எதிர்க்கட்சிகளை அரவணைத்து, கலந்தாலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை அறிவிக்கும் ஜனநாயகப் பண்பு அரசியல் கட்சிகளிடம் குறைந்துவருகிறது.
  • எதிர்க்கட்சிகளும் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தித் தெருவில் இறங்கிப் போராடுவதும், அரசுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைப்பதும் அதிகரித்து வருகிறது.
  • அதற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்தான் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் அரசு நீதித்துறைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது தவறு என்றும் நீதிபதிகள் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். சரியான வழிகாட்டுதல்!

நன்றி: தினமணி (09-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்