TNPSC Thervupettagam

ஏழு கடல் கொண்ட ஓர் ஏரி!

August 9 , 2019 1981 days 1036 0
  • ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்' என்பது அப்பர் திருமுறை. குளம், குட்டை ஓடை, வாய்க்கால், கிணறு, கேணி, ஊருணி முதலியன நாம் அறிந்த நீர்நிலைகள்.  பொன்னேரி, வேப்பேரி, சித்தேரி போல மதுராந்தகம் முதலான ஊர்கள் ஏரிகளின் பெயர்களைக் கொண்டுள்ளன. சென்னையில் அண்ணா நகரை அடுத்து குளத்தூர், முகப்பேரியும் உள்ளது. மதுராந்தகத்துக் கோயில் இறைவனுக்கு "ஏரி காத்த இராமர்' என்ற பெயர் உள்ளது.
  • "சிகாகோ' என்ற சொல், "சிகாகெüவ்' என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. அதனுடைய பொருள் "வெங்காயப் பண்ணை' என்பதாகும்.  இது "மியாமி-இல்லியனாய் உடைய சிக்காகவா' என்ற சொல்லின் எதிரொலியாக அமைந்துள்ளது.  பத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற சிகாகோவில்  மிச்சிகன் ஏரியை  அண்மையில் நான் பார்த்தேன்.  ஏழு கடலைப் புகுத்தி ஒரு வரையறைக்குள் வைத்தால் எப்படியிருக்கும்? கற்பனை செய்யமுடியாத அந்த ஏரியைக் கடலேரி என்று குறிப்பிடலாம்.  இது அமெரிக்காவில் உள்ள ஐந்து பெரிய ஏரிகளை உள்ளடக்கியது. அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் குடிநீர்ப் பற்றாக்குறையே ஏற்படாதாம்.

ஏரி

  • இந்த ஏரி, வட அமெரிக்காவிலுள்ள ஐந்து பேரேரிகளில் ஒன்று.  இது மட்டுமே முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிக்குள் அமைந்ததாகும். மற்ற நான்கு பேரேரிகளும் ஐக்கிய அமெரிக்கா, கனடா இருநாட்டுப் பகுதிகளிலும் உள்ளன.  கொள்ளளவின்படி இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மேற்பரப்பளவின்படி மூன்றாவது பெரியதாகும்; சுப்பீரியர் ஏரியும் இயூரோன் ஏரியும் இதைவிடப் பெரியவை. கிழக்கில் இந்த ஏரியின் வடிநிலத்தில் இயூரோன் ஏரியும் இணைந்துள்ளது. ஒரே மேற்பரப்பு உயரத்தைக் கொண்டிருப்பதால் இவை இரண்டும் ஒரே ஏரி என்றே கூறலாம்.
  • இந்த ஏரியின் மேற்கிலிருந்து கிழக்காக விஸ்கான்சின், இலினொய், இந்தியானா, மிச்சிகன் மாநிலங்கள் அமைந்துள்ளன. மிச்சிகன் ஏரியின் கரையோரமாக அமைந்துள்ள துறைமுகங்களில் சிகாகோ; மில்வாக்கி; கின்பே, விஸ்கான்சின்; கேரி, இந்தியானா மற்றும் மஸ்கெகோன், மிச்சிகன் முதலியன அடங்கும்.
  • "மிச்சிகன்' என்ற சொல் தொடக்கத்தில் ஏரியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது; இது உள்ளூரில் பேசப்படும் ஒஜிப்வெ மொழியில் "பெரிய நீரமைந்த' என்ற பொருள் தரும் "மிச்சி காமி' என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பர்.
  • மிச்சிகன் ஏரியின் மேற்புறப் பரப்பு 13,237 சதுர மைல்கள் (34,284 கி.மீ.) மிச்சிகன் மாநிலத்திலும், 7,358 சதுர மைல்கள் (19,056 கி.மீ.) விஸ்கான்சின் மாநிலத்திலும், 234 சதுர மைல்கள் (606 கி.மீ.)  இந்தியானா மாநிலத்திலும், 1,576 சதுர மைல்கள் (4,079 கி.மீ.) இல்லினாய் மாநிலத்திலுமாக அமைந்துள்ளது. ஏரியின் சராசரி ஆழம் 279 அடி; இங்குள்ள மிக ஆழமான பகுதி 923 அடியாகும்.

"கிரீன் பே'

  • வடமேற்கிலுள்ள "கிரீன் பே' (பசுமை விரிகுடா) மிகப் பெரிய விரிகுடாவாகும். வடகிழக்கிலுள்ள "கிராண்டு டிராவர்சு விரிகுடா' மற்றொரு பெரிய விரிகுடா ஆகும். மிச்சிகன் ஏரியின் கரையோரமாக 13 லட்சம்  மக்கள் வாழ்கின்றனர்.
  • மிச்சிகன் ஏரியின் அழகும் வனப்பும், வளமும் மனமகிழ்வுக்கான வாய்ப்புகளும் பருவம் சார்ந்த காலங்களில்  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.  சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஏரிக் கரையில் கோடை இல்லங்களில் இருந்துவிட்டுக் குளிர்காலத்தில் தங்கள் சொந்த ஊரிலுள்ள இல்லம் திரும்புகின்றனர்.  ஏரியின் தென்முனையில் இந்தியானாவின் ஏரி அருகே பெருமளவில் தொழில்கள் வளர்ந்துள்ளன.
  • இந்த ஏரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 19 கோடி லிட்டர் தண்ணீரை  ஐந்து மிகப்பெரிய மின் நீரேற்றும் இயந்திரங்கள் மூலம் சிகாகோ நகர் முழுமைக்கும் குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. மேலும், இந்தக் கடலேரியில் விரைவு படகில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பாங்கும், வனப்பும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.  படகில் செல்லும்போது, உடன் பயணிக்கும் வழிகாட்டி, இந்த ஏரியைப் பற்றியும், ஏரி நீர் குடிநீராக மாற்றப்படுவது பற்றியும் எடுத்துரைக்கிறார்.  மாமல்லபுரத்தில் உள்ள பழைய கலங்கரைவிளக்கத்தைப் போலவே ஒரு பெரிய கலங்கரைவிளக்கம் மிச்சிகன் ஏரியில் காணப்படுவது வியப்பில் ஆழ்த்துகிறது.

மிட்சிகன் ஏரி

  • மிட்சிகன் ஏரி குறித்து 125 ஆண்டுகளுக்கு முந்தைய தனது அனுபவத்தை சுவாமி விவேகானந்தர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது சுவாரஸ்யமானது. அதாவது, ஏரிக் கரையின் நிலவொளியில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்காட்சி வழங்குவது போன்ற காட்சியையும் ஏரிக் கரையின் எதிரில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லிங்கன் பூங்காவில் நாள்தோறும் தாம் நடைப் பயிற்சி செய்ததையும் சுவாமி விவேகானந்தர் தனது வரலாற்றுக் குறிப்பில் தெரிவித்துள்ளார். சிகாகோவின் உயர்ந்த கோபுரத்தின் 103-ஆவது தளத்திலிருந்து மிச்சிகன் ஏரிக் கரையை நான் அண்மையில் பார்த்தபோது சுவாமி விவேகானந்தரின் குறிப்பு என் நினைவுக்கு வந்தது.
  • பெட்டோசேகா கூழாங்கற்கள் மிச்சிகன் ஏரிக் கரையோரம் நிரம்பி உள்ளன. அவற்றை உற்றுப் பார்த்தால் ஒரு கால்பந்தின் வடிவத்தைப் போலவே செதுக்கப்பட்டுள்ளன.  இது சிகாகோ மாநில மதிப்புக் கல்லாகப் பெருமை பெற்றுள்ளது.  
  • ஏரிக்கரையின் எழிலும், மிச்சிகன் ஆற்றின் மீது புரளும் அலையும் வற்றாத வளத்தைக் காட்டும் சிகாகோ மாநகரை நினைக்கும்போது, இப்படி ஓர் ஏரி நம் தமிழ்நாட்டிலும் இருக்காதா என்ற ஏக்கம் எழுகிறது.

நன்றி: தினமணி(09-08-2017)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்