- கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட வேண்டிய 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்குக் கிடைப்பதில் பல்வேறு தடைகள் நிலவுவது கவலையளிக்கிறது.
- 2009இல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடங்கள், சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். கட்டணம் செலுத்த இயலாததால் யாருக்கும் கல்வி மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கல்வியை அடிப்படை உரிமையாக்கிய இச்சட்டத்தில், இத்தகைய பிரிவு இணைக்கப்பட்டது.
- ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 2024-25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அரசு இணையதளத்தின் வழியே விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தமிழ்நாட்டில் ஏப்ரல் 22 அன்று தொடங்கியது. ஆனால், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் இந்தச் சட்டத்தின் பயன்களைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பல பள்ளிகளில் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களுக்காகத் தனியார் பள்ளிகளை அணுகும் ஏழைப் பெற்றோர்களுக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் சரியான பதில் அளிக்கப்படுவதில்லை. சில பள்ளிகளில் வாயிற்காவலர்களே, “எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது” என்றும் “மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது” என்றும் தவறான தகவலைச் சொல்லி பெற்றோர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆர்டிஇக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களைப் பள்ளி அறிவிப்புப் பலகையில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவைப் பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- பிற மாநிலங்களிலும் தனியார் பள்ளிகளில் இதே போன்ற அணுகுமுறைதான் காணப்படுகிறது. ஒடிஷா தலைநகர் புவனேஸ்வர் தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ இடங்களை ஒதுக்க மறுப்பதாக ஏப்ரல் முதல் வாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
- மகாராஷ்டிர அரசு இந்த ஆண்டு ஆர்டிஇ சட்டத்துக்கான மாநில விதிகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்களை ஒதுக்க வேண்டியதில்லை என்னும் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. 2018இல் கர்நாடகத்தில் இதே போன்ற சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, புணேயில் தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ மூலம் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களை 8ஆம் வகுப்போடு வெளியேற்றுவதற்கான முயற்சி, மாநிலத் தொடக்கப் பள்ளி இயக்குநரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. சில பள்ளிகளில் ஆர்டிஇ மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்கள் அவமதிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
- ஆர்டிஇ சட்டத்தைத் தொடக்கத்திலிருந்தே தனியார் பள்ளிகள் எதிர்த்துவருகின்றன. மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்கிறது. என்றாலும் சில நேரம் அந்தக் கட்டணம் ஆண்டுக் கணக்கில் செலுத்தப்படாமல் நிலுவை வைக்கப்படுவது பள்ளி நிர்வாகங்களுக்குத் தேவையற்ற நிதிச் சுமையாகிவிடுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் தவிர்க்க வேண்டியது அரசின் கடமை.
- அதே நேரம், தனியார் பள்ளிகள் தமது லாப நோக்கத்தை முன்னிட்டு ஆர்டிஇ சட்டத்தை மீறுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு தங்களுக்கும் உள்ளது என்பதைத் தனியார் பள்ளிகள் உணர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 04 – 2024)