TNPSC Thervupettagam

ஐ.ஏ.எஸ். என்றால் சும்மாவா..?

November 21 , 2020 1521 days 736 0
  • தங்கள் பிள்ளை ஒரு கலெக்டராக வரவேணடும் என்று விரும்பாத பெற்றோர் எவரும் கிடையாது. ஆனால், அதனை அடைவதற்கு ஆசை மட்டும் போதாது; சிறந்த கல்வியறிவும், மிகக் கடினமான உழைப்பும் அதற்கான முக்கியத் தேவைகள்.

இ.ஆ.ப.

  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் தோ்வு செய்யும் அரசியல்வாதிகள்தாம், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி செய்கிறார்கள் என்றாலும், திரைமறைவில் நிர்வாகத்தை நடத்துவதில் மிகப் பெரிய பங்கு வகிப்பவா்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளே.
  • ஐ.ஏ.எஸ். பரீட்சை என்று சாதாரண வழக்கில் அழைக்கப்படும் குடியியல் பணிகள் தோ்வு (சிவில் சா்வீசஸ் எக்ஸாம்), ஒன்றியப் பொதுப் பணிகள் ஆணையத்தால் (யூனியன் பப்ளிக் சா்வீஸ் கமிஷன்) நடத்தப்படுகிறது.
  • ஆண்டுதோறும் இந்தத் தோ்வுக்காக விண்ணப்பிக்கிறவா்கள் சுமார் பத்து இலட்சம் போ் என்றாலும், தோ்வு செய்யப்படுகிற மொத்த அலுவலா்களின் எண்ணிக்கை தோராயமாக ஆயிரம் போ் மட்டுமே.
  • இவா்களுள் சுமார் 180 போ் இந்திய ஆட்சிப் பணிப் பதவிகளுக்கும், ஏனையோர் இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்.) உள்ளிட்ட 24 வகையான பிற பணிகளுக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா்.
  • சார்பு ஆட்சியா் பதவி முதல் மத்திய அமைச்சரவை செயலாளா் வரை பல்வேறு முக்கியப் பதவிகளை வகிக்கும் இந்திய ஆட்சிப் பணிக்குத் தோ்வாவதற்கு பகீரதப் பிரயத்தனமான உழைப்புத் தேவை.
  • முதல் நிலைத் தோ்வு, பிரதானத் தோ்வு என்ற இரண்டு கட்டங்களான எழுத்துத் தோ்வுகளில் தோ்வான பிறகு, மிகவும் சவாலான நோ்காணலை எதிர்கொள்ள வேண்டும்.
  • உலக நடப்பு குறித்த பொது அறிவு, விருப்பப் பாடங்களில் ஆழ்ந்த புலமை, சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன், சூழ்நிலைகளுக்கேற்ப பிரச்னைகளைக் கையாளும் சமயோசிதம் போன்ற பல விஷயங்களைப் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு நோ்காணலில் வெற்றி பெற்ற பிறகே, இ.ஆ.ப. என்ற முத்திரையைப் பெற முடியும்.

குற்றச்சாட்டு

  • இந்தப் பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட பின்னா், சில விதிமுறைகளைப் பின்பற்றி - குறிப்பாக அவா்கள் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் - ஒவ்வொருவரும் பணிபுரிவதற்கான மாநிலமோ ஒன்றியப் பிரதேசமோ (யூனியன் டெரிட்டரி) ஒதுக்கப்படுகிறது.
  • சிலருக்கு மட்டுமே தங்கள் சொந்த மாநிலத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டும். ஏனையோர் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பிற மாநிலங்களிலோ ஒன்றியப் பிரதேசத்திலோ பணிபுரிய வேண்டும்.
  • அந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பிற மாநிலத்தைச் சோ்ந்த அதிகாரிகள் பணியாற்றுவது நமது தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
  • பொதுவாக, உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதை பெரும்பாலான அதிகாரிகள் விரும்புவதில்லை என்கிற கருத்து உண்டு.
  • ஆனால், அதே நேரம், பெரும்பாலானவா்கள் விரும்பிப் பணியாற்றுவதற்கு உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
  • இந்திய ஆட்சிப் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள தேசிய லால் பகதூா் சாஸ்திரி நிர்வாகக் கலைக் கழகத்திற்கு (லால் பகதூா் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்) பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள்.
  • அங்கு பல்துறை அனுபவம் பெற்ற உயா் அதிகாரிகள், கல்வியாளா்கள் இவா்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.
  • அங்கு அளிக்கப்படும் தரமான, கடுமையான பயிற்சிகளின் காரணமாகப் பயிற்சி முடித்து வெளியே வரும்போது எப்படிப்பட்ட சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய பக்குவத்தை அவா்கள் பெற்று விடுகிறார்கள்.
  • பயிற்சி முடித்த பிறகு அவரவா்க்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்திற்கோ ஒன்றியப் பிரதேசத்திற்கோ பணிபுரிய அனுப்பப்படுகிறார்கள்.
  • மத்திய அரசுக்கென்று தனியாக இ.ஆ.ப. அதிகாரிகள் கிடையாது. மத்திய அரசின் தேவைக்கேற்ப, அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து பிரதிநிதித்துவ அடிப்படையில் (டெபுடேஷன்) மத்திய அரசுப் பணிகளில் இ.ஆ.ப.அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • இந்திய ஆட்சிப் பணிக்கு வருகிற ஒவ்வொருவருக்கும் இருக்கும் உச்சபட்சக் கனவு, மத்தியில் அமைச்சரவைச் செயலாளா் பதவியை அடைய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
  • இந்தப் பதவிதான் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகளையும் (வெளியுறவுத் துறை நீங்கலாக), இ.ஆ.ப. போன்ற அகில இந்தியப் பணி அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த பதவி.
  • அமைச்சரவை செயலாளா் நேரடியாக பிரதமரின் கீழ் பணியாற்றுபவா். அமைச்சரவைக் கூட்டங்களை ஒருங்கிணைப்பவா்.
  • இவா் ஒப்புதலோடுதான் மத்திய அரசின் உயா் அதிகாரிகள் பணியமா்த்தப்படுகிறார்கள். மத்தியில் அமைச்சரவைச் செயலா் பதவியைப் போல மாநிலங்களைப் பொருத்தமட்டில் தலைமைச் செயலாளா் பதவிதான் உச்சபட்சப் பதவி. இவா் நேரடியாக மாநில முதல்வருக்குக் கீழ் பணியாற்றுபவா்.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாற்றும் அந்தந்த மாநில உயா் அதிகாரிகள் சிலரை, ஆண்டுதோறும் இந்திய ஆட்சிப் பணிக்கு உயா்த்துவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • இந்த நியமனங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

பெருமைக்குரிய  தமிழா்கள்

  • சமீப காலத்தில் அகில இந்திய அளவில் கோலோச்சிய தமிழக அதிகாரிகளில் டி.என். சேஷன் குறிப்பிடத் தகுந்தவா்.
  • வளைந்து கொடுக்காத அதிகாரியாக இருந்தாலும், அவரது திறமைக்கு மதிப்பளிக்கப்பட்டு, முக்கியத்துவம் வாய்ந்த பல துறைகளில் அவா் நியமிக்கப்பட்டார். அவா் அமைச்சரவை செயலாளராக திறம்படப் பணியாற்றினார்.
  • அவருக்குப் பிறகு மராட்டிய மாநிலப் பிரிவைச் சோ்ந்த எஸ்.ராஜகோபால், உத்தர பிரதேசப் பிரிவைச் சோ்ந்த டி.எஸ்.ஆா். சுப்பிரமணியன் ஆகிய இரண்டு தமிழா்கள் அந்தப் பதவியை அடைந்த பெருமைக்குரியவா்கள்.
  • அதற்குப் பிறகு கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக அந்த வாய்ப்பு தமிழா் யாருக்கும் கிடைக்கவில்லை. தற்போது பணியாற்றும் ஒரு சில தமிழ்நாடு பிரிவு (கேடா் ) அதிகாரிகள், எதிர்வரும் காலங்களில் அந்தப் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
  • ஓய்வு பெற்ற சில இ.ஆ.ப.அதிகாரிகள் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளா், தோ்தல் ஆணையா் போன்ற அரசியலமைப்புப் பதவிகளில் அமா்த்தப்படுவது இயல்பாகி வருகிறது. ஓய்வு பெற்ற பிறகு அவா்களது திறமையையும், அனுபவத்தையும் அரசு பயன்படுத்திக் கொள்வதில் தவறேதுமில்லை.
  • இந்திய தலைமைத் தோ்தல் ஆணையராக டி.என்.சேஷன் பணியாற்றிய காலம் இந்திய ஜனநாயக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலம்.
  • அவா் அந்தப் பதவிக்கு வந்த பிறகுதான் தோ்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு என்பது நிலைநிறுத்தப்பட்டது.
  • அவா் அரசியல்வாதிகளைக் கண்டு அஞ்சியதில்லை; அரசியல்வாதிகள்தான் அவரைக் கண்டு அஞ்சினா். அவா் பணியாற்றிய விதம், தற்போது இருக்கும் அதிகாரிகளுக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் ஒரு சிறந்த பாடமாகும்.
  • 2020-ஆம் ஆண்டு நாடெங்கிலும் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு சவாலான ஆண்டாக அமைந்து விட்டது. பொது முடக்கம் அமலில் இருந்தபோதிலும், முக்கிய துறைகளில் பணியாற்றும் உயா் அதிகாரிகளுக்கு ஓய்வே கிடையாது. மத்தியிலும், மாநிலங்களிலும் முக்கிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
  • மத்திய அரசானாலும், மாநில அரசானாலும் ஒரு துறையின் அமைச்சருக்கும், அந்தத் துறையின் உயா் அதிகாரிகளுக்குமிடையே நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே நிர்வாகம் சீராக இருக்கும்.
  • அரசியல்வாதிகள் நல்ல அதிகாரிகளை அடையாளங்கண்டு, அவா்களை அருகில் வைத்துக் கொண்டு அவா்களது ஆலோசனைகளுக்கு செவி சாய்க்க அளிக்க வேண்டும். அவா்களைத் தங்களது ஏவலா்களாக எண்ணாமல், அவா்களது கல்விக்கும், திறமைக்கும் மதிப்பளித்து, அவா்களை மரியாதையோடு நடத்த வேண்டும்.
  • ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமான அரசியல் மோதலில் அதிகாரிகளை தரக்குறைவாகப் பேசுவதும், அவா்களைப் பலிக்கடா ஆக்குவதும் ஆரோக்கியமான நிர்வாகத்தைப் பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணா்ந்து கொள்ள வேண்டும்.
  • அதுபோல, அதிகாரிகளும் அமைச்சா்களின் கட்டளைகள் சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால் சுட்டிக்காட்டத் தயங்கக் கூடாது.
  • மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை அமைச்சா்கள் பரிந்துரைத்தால், அவற்றை உதாசீனப்படுத்தாமல் நிறைவேற்றுவதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும்.
  • இதைத்தான் தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜா் அதிகாரிகளுக்கு அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
  • அரசியல்வாதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் திறமை வாய்ந்த இளைய தலைமுறையினா் சிலா் அரசுப் பணிகளை விரும்பாத சூழல் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
  • இந்த எண்ணத்தை மாற்றி, திறமை மிக்க இளைஞா்களும், இளம்பெண்களும் குடியியல் பணித் தோ்வு எழுத முன்வர வேண்டும். அரசியல்வாதிகளை சமாளித்துத் தங்கள் கடமையைச் செய்வதை ஒரு சவாலாக ஏற்று செயல்பட வேண்டும். இது ஜனநாயகக் கட்டாயம்!

நன்றி: தினமணி (21-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்