TNPSC Thervupettagam

ஐஏஎஸ் முதனிலைத் தேர்வில் மாற்றம்: காலம்தாழ்ந்த முடிவு!

July 19 , 2019 2003 days 1020 0
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), சிவில் சர்வீஸ் முதனிலைத் தேர்வில் மாற்றங்களைச் செய்யவும், ‘சிசாட்’ எனப்படும் திறனறித் தாளை நீக்கவும் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. பொது அறிவுத் தாள், திறனறித் தாள் இரண்டையும் உள்ளடக்கியதாகத் தற்போது முதனிலைத் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. 2011-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திறனறித் தாள் அறிமுகப்படுத்தப்பட்டபோதே கடும் ஆட்சேபனைகள் எழுந்தன. அவற்றையெல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாத யுபிஎஸ்சி, தான் செய்த தவறை மிகவும் காலம் தாழ்ந்து சரியாக்கிக்கொள்ள முன்வந்திருக்கிறது.
  • 2011-க்கு முன்பு நடத்தப்பட்ட முதனிலைத் தேர்வுகளில் பொது அறிவுத் தாளும் விருப்பப் பாடத் தாளும் இடம்பெற்றிருந்தன. பொது அறிவுத் தாளில் இந்திய வரலாறு, புவியியல், இந்திய அரசமைப்புச் சட்டம், பொருளாதாரம், அடிப்படை அறிவியல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் திறனறியும் கேள்விகள் அமைந்திருந்தன. கேள்வி ஒன்றுக்கு ஒரு மதிப்பெண் என்ற கணக்கில் மொத்தம் 150 கேள்விகள் அமைந்திருக்கும். இரண்டாவது தாள் விருப்பப் பாடம், ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண்கள். இரண்டு தாள்களிலும் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்குத் தகுதியான மாணவர்களின் பட்டியல் உருவாக்கப்படும்.
  • சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்கள் பணியில் சேருவதற்கு முன் பயிற்சி பெறும் நிலையில், அவர்களின் தகுதி போதுமானதாக இல்லை என்று எழுந்த அதிருப்தியைக் காரணம்காட்டியே தேர்வு முறையில் வடிகட்டும் முறையைக் கையிலெடுத்தது யுபிஎஸ்சி. முதனிலைத் தேர்விலும், முதன்மைத் தேர்விலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முதனிலைத் தேர்வில் விருப்பப்பாடம் நீக்கப்பட்டது. முதன்மைத் தேர்வில் இரண்டு விருப்பப்பாடங்களில் ஒன்று நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மேலும் இரண்டு பொது அறிவுத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களின் தகுதியை மேம்படுத்துவதாகச் சொல்லப்பட்ட இந்த மாற்றங்கள், கிராமப்புறக் கல்லூரிகளில் படித்துப் பட்டம்பெற்று, பாடநூல்களையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் வாய்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்று சொல்லலாம்.
என்னென்ன இழப்புகள்?
  • முதுகலை அல்லது ஆராய்ச்சி மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தையே விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டு, கூடுதலாகப் பொது அறிவுப் பாடத்தையும் படித்தாலே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நிலைமை பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது. தான் படிக்கும் துறையை விருப்பப் பாடமாக எடுக்கும்போது, அத்துறை சார்ந்த அடிப்படை நூல்களையெல்லாம் ஒரு மாணவர் விரிவாகப் படிப்பார். அதனால், பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித்தொகை தேர்விலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அமைந்திருந்தன. அதனாலேயே, பத்தாண்டுகளுக்கு முன்பு, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தேர்வாகும் மாணவர்களில் கணிசமானோர் தங்களது துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருந்தார்கள். தேர்வு முறையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், உயர்கல்விக்கும் போட்டித் தேர்வுக்கும் இடையில் தெளிவான ஒரு தடுப்புச் சுவரை எழுப்பிவிட்டது.
  • தற்போது விருப்பப் பாடங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. விருப்பப் பாடங்களுக்குப் பதிலாக முதனிலைத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட திறனறியும் தாளானது ஆங்கிலப் பத்திகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறன், தர்க்கரீதியாகச் சிந்தித்து விடையளிக்கும் திறன் மற்றும் சிக்கல்கள் எழுகிறபோது முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவற்றைப் பரிசோதிப்பதாகத் திட்டமிடப்பட்டது. 80 கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. பொது அறிவுத் தாளில் கேள்விகள் 100 ஆகக் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு கேள்விக்கும்  2 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியின் ஆதிக்கம்
  • திறனறியும் தாளில் பத்திகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறனைச் சோதிப்பதில் இரண்டு முறைகள் அறிமுகமாயின. முதலாவது, ஆங்கிலப் பத்திகளைப் படித்து அதன் பொருளைப் புரிந்துகொள்ளுதல். இந்த வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். எனவே, எல்லோருக்குமே பொதுவானது. மற்றொன்று, பொதுவாக பத்திகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறன். இவ்வகையில் ஆங்கிலம், இந்தி என்று இரண்டு மொழிகளிலும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இத்தகைய கேள்வி முறை, இந்தி அல்லாத மொழிகளைப் பேசும் மாணவர்களுக்குத் தீங்கானது என்று கடும் விமர்சனங்களை அடுத்து, பத்திப் பொருள்விளக்கம் காணும் கேள்விகளில் இரு மொழிகள் இடம்பெறுவது விலக்கிக்கொள்ளப்பட்டது. சிவில் சர்வீஸ் தேர்வுகள் முதற்கொண்டு அஞ்சல் துறைத் தேர்வுகள் வரை இந்தி இல்லாத மற்ற இந்திய மொழிகள் தங்களது உரிமையைப் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. முடிவெடுக்கும் ஆற்றல் குறித்த வினாக்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை என்று கூறப்பட்டாலும் அத்தகைய கேள்விகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமே ஆர்வம்காட்டவில்லை. கடைசியில் திறனறியும் தாள் என்பது ஆங்கிலப் பத்திகளுக்குப் பொருள்புரிந்துகொள்வதும், தர்க்கரீதியாகக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதும் என்பதாகச் சுருங்கிவிட்டது. பொது அறிவுத் தாளில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றாலும், திறனறித் தாளில் 33% மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயத் தகுதியாக உள்ளது. இதனால், முதனிலைத் தேர்வுக்காகப் பொது அறிவுப் பாடத்தையும் விருப்பப் பாடத்தையும் விரிவாகப் படிப்பதற்குப் பதிலாக, பயிற்சி மையங்களில் சேர்ந்து தொடர்பயிற்சியின் வாயிலாக அதிவேகமாக கேள்விக்குப் பதிலளிக்கும் திறனைப் பெறுவதே படிப்பு என்றாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களைக் குறிப்பாக கலை, அறிவியல் மாணவர்களை சிவில் சர்வீஸ் தேர்வுகளிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றி, மாநகரங்கள் சார்ந்த, அனைத்திந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே உள்நுழைவதற்கான வாய்ப்பாகிவிட்டது.
நீண்ட காலக் கோரிக்கை
  • தற்போது கிராமப்புற மாணவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்றால், பயிற்சி மையங்களை நோக்கி வர வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. உயர்கல்வி கற்றுக்கொண்டே அல்லது அரசு அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டே சிவில் சர்வீஸ் எழுதிய கதையெல்லாம் கடந்த தலைமுறையின் கதையாகிவிட்டது. இந்நிலையில்தான், சிசாட் எனப்படும் திறனறியும் தாளை நீக்குவது குறித்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். சிசாட் நீக்கப்படலாம். ஆனால், சிசாட் குளறுபடியால் கடந்த பத்தாண்டுகளில் சிவில் சர்வீஸ் வாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு யுபிஎஸ்சியும் மத்திய அரசும் என்ன தீர்வை வைத்திருக்கின்றன?
  • முதனிலைத் தேர்வில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதே நேரத்தில், இந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்றையும் யுபிஎஸ்சி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசமைப்பின் அட்டவணை மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிப்பது மட்டும் போதாது. முதனிலைத் தேர்வின் வினாத்தாளையும் இந்தி உள்ளிட்ட அனைத்து அட்டவணை மொழிகளிலும் தயாரிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்