ஐயே.. பொண்ணா நீ?
- பெண்ணாகப் பிறந்த மறு நிமிடமே ஒரு பெண்ணை மட்டம் தட்டுவது ஆரம்பித்துவிடுகிறது. மட்டம் தட்டுவது என்றால் என்ன? அவமானப்படுத்துவதன் சிறு துகளாக அதை நாம் கருதிக்கொள்ளலாம்.
- நான் பணிபுரிந்த அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை அந்த நிறுவனத்தின் மேலாளர் மிகக் கேவலமாகப் பேசுவார். “உனக்கெல்லாம் திறமையே இல்லையே... நீ ஏன் இங்க வந்து வேலை பார்க்கிற? இதுக்கு நீ உங்க கிராமத்திலேயே இருந்து தொலைக்க வேண்டியதுதானே” என்று அவர் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் திவ்யாவைக் கூனிக் குறுக வைக்கும். குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு திவ்யா பதில் ஏதும் பேசாமல் அடர்ந்த கண்ணில் நிறைந்த கண்ணீரோடு அந்த இடத்தை விட்டு நகர்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.
பெண்களின் ‘வேலை’
- ஒரு முறை தாள முடியாமல் நானே அவரிடம், “ஏன் சார், ஒரு வேலையை திவ்யா பண்ணணும்னா தாராளமா நீங்க அவங்ககிட்ட பண்பா பேசலாமே. இப்படி எடுத்தெறிஞ்சு பேச வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டேன். அவர், “உங்க சோலியைப் பார்த்துட்டுப் போங்க” என்று சொன்னார். “என்னுடைய சோலி சக பெண்ணை அவமானப்படுத்தும் இடத்தில் நான் பேசாமல் இருப்பது அல்ல, தட்டிக் கேட்பதுதான் என் சோலி” என்று சொன்னேன். அடுத்த ஒரு வாரத்திலேயே நானும் திவ்யாவும் பணியில் இருந்து நீக்கப்பட்டோம். நான் இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாதபோது திவ்யா என்னிடம் வந்து, “ஏன் என்னைப் பத்தி அவர்கிட்ட அப்படிப் பேசினீங்க? இப்ப பாருங்க எனக்கு வேலை போயிருச்சு” என்று என் மீது பழி போடுவது போலச் சொல்வதன் பின்னால் இருக்கக்கூடிய அவருடைய மன அழுத்தத்தை நான் புரிந்துகொண்டேன். என்னால் திவ்யாவிடம் வேறொன்றும் சொல்ல இயலவில்லை. அவரது கைகளை மட்டும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டேன். இப்போது இதை எழுதும்போதுகூட அந்த ஸ்பரிசம் என் கரங்களில் தவழ்ந்தபடிதான் இருக்கிறது. திவ்யா என் கைகளை விலக்கிக்கொண்டு மெல்ல நகர்ந்தது இப்போதும் என் கண் முன் நிற்கிறது.
- எதற்காகப் பெண்கள் இப்படி மட்டம் தட்டுவதைக் குடும்பங்களிலும் அலுவலக வெளிகளிலும் தாங்கிக் கொள்கிறார்கள்? இதற்கு முக்கியக் காரணம் தங்களுக்குள் இருக்கக்கூடிய தாழ்வு மனப்பான்மைதான் என்று கருதுகிறேன். தங்களைப் பற்றிய சுயமரியாதையும் தங்களைப் பற்றிய கௌரவமும் மனதில் திடமாக இருக்கும் பெண்கள், தங்களைப் பிறர் மட்டம் தட்டுவதை எந்நாளும் கேட்டபடி இருக்க மாட்டார்கள். ஒரு பெண் கேள்வி கேட்காத வரைக்கும் தான், இந்தச் சமூகமும் குடும்பமும் கேள்வி கேட்டபடியே இருக்கிறது.
வட்டத்துக்குள் பெண்கள்
- இதேபோல்தான் பல காலமாகத் தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய அராஜகம் நடந்துகொண்டி ருக்கிறது. புத்தக அறிமுக விழாக்களில் குறிப்பாகப் பெண்கள் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாக்களில் பேசும் சிலர் அந்தத் தொகுப்பை மட்டம் தட்டுவது போலப் பேசிவிட்டுச் சென்றுவிடுகின் றனர். அதன் பாதிப்பு அந்தப் பெண்களின் எழுத்து வாழ்க்கையில் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று ஒரு கணம்கூட அவர்கள் யோசிப்பது இல்லை. இனிமேல் அவர்கள் எழுதாமலே போய்விடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. எழுதும் பெண்களை இந்தக் காலத்திலும் அவர்களது குடும்பங்கள் கொஞ்சம் விலக்கி வைத்துத்தான் பார்க்கின்றன. அவர்களைத் தங்கள் வட்டத்துக்குள் சக குடும்பப் பெண்கள்கூட இணைத்துக்கொள்வதில்லை என்பதுதான் பகிரங்கமான உண்மை. இந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக எழுத ஆரம்பித்து, அங்கு ஓர் உலகத்தை உருவாக்கி அதனுள் தஞ்சம் புகுந்தால் - அங்கு அந்த இலக்கிய உலகில் இருக்கக்கூடிய அரசியல் அவளை மீண்டும் இந்த வட்டத்திற்குள் எழுத்தைத் துறந்துவிட்டுப் போய், “குழம்பு வெச்சியா ரசம் வைக்கவா” என்று கேட்கும் குறுகலான சமையலறை வாழ்க்கையை அவள் மீது புகுத்திவிடுகிறது.
நிம்மதி முக்கியம்
- சில நேரம் ஒருவரை மற்றவர் மட்டம் தட்டுவது உண்டு. அது ஏன் தெரியுமா? நமக்கு நம் மீது தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் அடுத்தவரின் திறமை மீது பயம் ஏற்படும். இப்படி மட்டம் தட்டுவது அடுத்தவரை அதிகாரம் செலுத்துவதுபோல் தோன்றினாலும் அதன் பின்னால் இருக்கும் மிகக் குறுகிய மனநிலை தீர்க்க முடியாத ஒரு வியாதியை ஒத்தது. சமூக நீதி பேசும் ஆண்களில் சிலரும், ஆண்புத்தியை மூளையில் சுமக்கும் பெண்களும் இதில் அடக்கம். ‘ஏன் இப்படிக் குண்டா இருக்க? ஐயே என்ன இப்படிக் கறுப்பா இருக்க?’ என்று பெண்கள் தினம் தினம் ஆயிரம் உவப்பில்லாத வார்த்தைகளைச் சந்தித்தபடிதான் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் எப்படி நாம் சாகசமாக கைக்கொள்வது? எந்த இடத்தில் நாம் மட்டம் தட்டப்படுகிறோமோ அந்த இடத்தில் ஒருபோதும் நாம் மனம் தளரக் கூடாது. சிரித்துக்கொண்டே அவர்களைக் கலாய்த்துவிட வேண்டும். ‘இன்னொரு முறை நீங்கள் இப்படி மட்டம் தட்டினால் நான் உங்கள் பலவீனங்களை எல்லாம் சபையில் சொல்ல நேரிடும். அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?’ என்று முகத்துக்கு நேராகச் சிரித்தபடி கேட்டுவிட்டால் அவர்கள் ஒருவேளை யோசிக்கக்கூடும். யோசித்தால் அவர்கள் பண்பட்ட மனிதர்களாக மாறும் நிலை வரும். அவர்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நம் மன நிம்மதியை அவர்களுக்காக அழித்துக்கொள்ளக் கூடாது. அதுவே நமது சக்தி.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 10 – 2024)