TNPSC Thervupettagam

ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் ஆதிக்கர்கள்

May 3 , 2024 76 days 124 0
  • ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவரும் அறிஞர் ஒருவருடன் அண்மையில் அலைபேசியில் உரையாடினேன்: “ஆதிக்கச் சாதியினரான நீங்கள் எங்களைப் பற்றி எவ்வாறு எழுதலாம் என ஒருசிலர் என்னிடம் கேட்கிறார்கள். ஒடுக்கப்பட்டோரைப் பற்றி எழுதுவதை நிறுத்தலாம் எனச் சிந்திக்கிறேன்” என்று அவர் சொன்னது நெருடலைத் தந்தது. இது வருத்தமளித்தாலும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
  • பிற சமூகத்தவரைப் பற்றி எழுதுவதைச் சந்தேகிப்பது 1990களில் தோன்றிய அடையாள அரசியலின் எதிர்மறையான விளைவு. இவ்வரசியலை ஒப்புக்கொண்ட ஒடுக்கப்பட்டோரும் ஆதிக்கர்களும், “பிறரால் தங்களை எழுத இயலாது! தங்களைத் தங்களால்தான், அவர்களை அவர்களால்தான் எழுத இயலும்” என வாதிடுகின்றனர்.
  • படிநிலைச் சாதியக் கட்டமைப்பில் வலங்கை-இடங்கை, பிராமணர்-பிராமணரல்லாதோர், தலித்-தலித்தல்லாதோர் என்று சாதிகளும் உள்சாதிகளுமாகத் தனித்தனியாக இயங்குவதால் சாதியைக் கடந்து, சுயசார்பற்று ‘பொது’நிலையில் சிந்திக்க இயலும் என்பதைச் சந்தேகிப்பது முன்னெப்போதும் இல்லாத புதிய சிக்கலாகும்.
  • உலகெங்கும் வரலாறு நெடுக ஆதிக்கமும் ஒடுக்குதலும் ஏதாவதொரு வடிவில் மனிதனின் சமூகக் கட்டமைப்பாக நீடிப்பதால், விடுதலைக்கான போராட்டங்களும் தவிர்க்க இயலாமல் தொடர்கின்றன. ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைப் போராட்டங்களில் ஆதிக்கர்களின் பங்கேற்பை மறுக்க இயலாது.

கேள்விகளும் விளைவுகளும்:

  • பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும், பிராமணர் ஆதிக்கத்தாலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைபெற காங்கிரஸ், பிராமணரல்லாதோர் அமைப்புகளை உருவாக்கி இயங்கியபோது, இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் அவ்வியக்கங்களுக்கு முன்பே விடுதலைக்காகத் திரண்டனர். இச்சூழலானது, ‘ஆதிக்கர்களாக இருக்கும் நீங்கள்விடுதலை பெறுவதற்குத் தகுதியானவர்களா?’ என்ற விவாதத்தைக் கிளப்பியது.
  • இது, தீண்டாமையை ஒழிக்க வேண்டிய நிலையைகாங்கிரஸ், பிராமணரல்லாதோர் இயக்கங்களுக்கு உணர்த்தியது; தீண்டாமை ஒழிப்பும்அவ்வியக்கங்களின் இலக்கானது. இவற்றின்தாக்கம் சாதிய அமைப்புகளிடமும் தனிநபர்களிடமும் ஏற்பட்டது.
  • ஒடுக்கப்பட்டோரின் விடுதலையில் ஆதிக்கர்கள் எழுத்து, போராட்டம், நிதி போன்ற வடிவங்களில் பங்கேற்றனர். அப்போது, பிறரால் தங்களை எழுத இயலாது என்றோ, தங்களுக்காகப் பிறரால் போராட இயலாது என்றோ விவாதம் எழவில்லை.
  • சாதியக் கட்டமைப்புகளையும் அதன் தீங்குகளையும் இ.ராமசாமிக் கோனார், அப்துல் ரஹிமான் ஆகியோர் 1923, 1924களில், ‘பறையன் பாட்டு’, ‘அற்புத நூதனப் பறையன் பாட்டு’ ஆகியவற்றைப் படைத்தனர்.
  • ராஜாஜி 1927இல் ‘முகுந்தன் பறையனான கதை’யையும், எஸ்.பத்மாஸினி 1948இல், ‘சாம்பானின் குடும்ப’த்தையும் வெளியிட்டனர். காதரைன் மேயோ, ‘இந்திய மாதா’ புத்தகத்தில் பஞ்சமரைப் பற்றி எழுதியது காரசார விவாதத்தை உருவாக்கியது.
  • காந்தியின் அரசியல் பின்னணியில் உருவான ‘ஹரிஜன சேவா’ சங்கம் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டது. இவ்வியக்கத்தில் பிராமணர்களும் பிற ஆதிக்கச் சாதியினரும் பங்கேற்றனர். இந்தியா முழுமைக்குமான இச்சங்கத்தின் செயல்பாடுகள் ‘ஹரிஜன்’ இதழில் வெளியாகின. தீண்டாமை ஒழிப்பில் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கத்தினர் முன்னணிப் பங்கு வகித்தனர்.
  • ‘தமிழ்நாட்டில் எங்கெங்கு தீண்டாதார்களென்போருக்குப் பொது உரிமைகள் அளிக்கப்படாமல் கொடுமை செய்யப்பட்டு வருகின்றதோ, அவ்வவ்விடங்களிலெல்லாம், பிரச்சாரம் செய்வதும் அஹிம்சா தர்மத்தோடு அவசியமேற்பட்டால் சட்ட மறுப்பு, சத்தியாகிரகம் முதலியன செய்வதும் தீண்டாமை விலக்கு கமிட்டியின் கொள்கைகளாகும்’ எனக் ‘குடிஅரசு’ இதழில் 1925இல் அறிவிக்கப்பட்டது.
  • பார்ப்பனரல்லாதோர் 10ஆவது மாநாட்டில், ‘‘நமது இந்து சமூகத்திலுள்ள எல்லாத் தீங்குகளிலும் மிகக் கொடியது தீண்டாமையேயாகும். அதை நீக்கினாலொழிய, நம் சமூகத்தில் பற்பல வகுப்பாருக்குள்ளும் சகோதர உணர்ச்சி உண்டாக யாதொரு வழியுமில்லை. பற்பல வகுப்புப் பிள்ளைகளையும் பள்ளிக்கூடங்களிலும் விளையாட்டுக் கட்டிடங்களிலும் ஒன்றாய்ச் சேர்த்துச் சிறுவயதிலேயே சகோதர உணர்ச்சியை உண்டுபண்ணுவது தீண்டாமையை ஒழிக்கும் வழிகளில் ஒன்றாகும்” என்று எம்.டி.சுப்பிரமணிய முதலியார் பேசினார்.
  • சென்னை மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் சுப்பராயன், திருக்காட்டுப்பள்ளி சர்.சிவசாமி பள்ளிக்கூட விழாவில், ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்க்காதது குறித்து வருந்துவதாகவும் பார்ப்பனரைப்படைத்த கடவுள்தான் ஆதிதிராவிடரையும் படைத்தார் என்றும் பேசினார். “ஆதிதிராவிடருக்கும் மற்றவரைப் போல் சமஉரிமை வழங்க வேண்டும்” என்றார்.
  • பட்டியல் சமூகங்களின் பொதுக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் சுயமரியாதை இயக்கத்தினர் தலைமை வகித்தனர், பொருளுதவிகளைச் செய்தனர். திராவிடப் பத்திரிகைகளான ‘திராவிடன்’, ‘நகரதூதன்’, ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ போன்றவை தீண்டாமைக்கு எதிரான கட்டுரைகளையும் பட்டியல் சமூக இயக்கச் செயல்பாடுகளையும் விரிவாக வெளியிட்டன.

முக்கிய முன்னெடுப்புகள்:

  • தீண்டாமையை ஒழிக்கச் சாதிய அமைப்புகளும் அறைகூவல் விடுத்தன. மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா குன்னத்தூர் கிராமத்தில், ‘திராவிடன்’ ஆசிரியர் ஜெ.எஸ்.கண்ணப்பர் தலைமையில் 1926 மே 16 அன்று நடைபெற்ற வெலம நாயுடு மாநாட்டில், “நம் சகோதரர்கள் சிலரைத் தீண்டத்தகாதவர்களென்று நடத்திவருவது பெரும்பிழை” என்று கொண்டய்ய நாயுடு பேசினார்.
  • கைவல்யசாமியார், ‘கொங்கு வேளாளர்களுக்கு ஒரு வார்த்தை’ எனத் தலைப்பிட்டு, “ஆதிதிராவிடர்களான பறையர்களின்பேரில் கருணையும் தரும சிந்தனையும் வைத்து, அவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்” என எழுதினார். மேலும், “அவர்களை எவ்வளவு தாழ்த்த வேண்டுமோ அவ்வளவும் தாழ்த்தியாகிவிட்டது.
  • குடிக்கத் தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டோம். அவர்களுடைய வயிற்றையும் தேகத்தையும் நனைக்கவும் திண்டாடுவதற்கும் காரணம் நாம் நினைக்காத குற்றமே. நம் கிணறுகளும் பூமிகளும் ஈரமற்றுக் கிடக்கின்றன.
  • அவர்களை அடிமைகொண்டு வேலை வாங்கும் பாத்தியதையை வேலைக்கு வரும்போதோ திரும்பிப்போகும்போதோ அவன் வயிற்றுக்குச் சோறு உண்டா என்று கவனியாதவர்களையும் பார்க்கிறோம். வேலையாகப் பட்டணக்கரைக்கு அனுப்பப்படுகிறவனுக்கு வேண்டியதைக் கொடுக்க மனம் சுருங்குகிறது” என விமர்சித்தார்.
  • மதுரையில் 1927 செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடைபெற்ற சென்னை மாகாண யாதவர் மகாநாட்டின் தலைவர் எம்.வேணுகோபால் பிள்ளை, “நமது கடமை என்னவெனில் நாம் பின்பற்றி யொழுகும் அன்பு மதத்தோடு முற்றும் முரண்படுவதான ‘தீண்டாமை’ என்பதை ஒழிப்பதில் நாம் முழு ஊக்கத்தோடு முனைந்து நிற்பதேயாகும்” எனப் பேசினார்.
  • தேவர்களின் பத்திரிகையான, ‘பிரமலை சீர்திருத்தன்’ சாதி வேற்றுமைகளை ஒழிக்க வலியுறுத்தியது, தீண்டாமைக்கு எதிரான கட்டுரைகளையும் 1929, 1930ஆம் ஆண்டுகளில் வெளியிட்டது. மதுரையில் 1947இல் நடைபெற்ற வேளாளர் மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் எம்.துரைசாமிப் பிள்ளை, “சாதி, நிறப் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிற இக்காலத்தில், சமூக மாநாடுகள் நடத்துவது முறையா?” என வினவினார்.
  • சாதி மறுப்புத் திருமணங்களும் சமபந்தி போஜனங்களும் நடத்தப்பட்டன.பார்ப்பனரல்லாதோர் சங்கம் நாகப்பட்டினத்தில் 1927இல் 100 பேர் பங்கேற்பில் நடத்தியசமபந்தி போஜனத்தில் ஆதிதிராவிடரே பந்தி பறிமாறினர். நாடார்குல மித்திரன் பத்திராதிபர் முத்துநாடார் மகளின் மணவிழாவில் மணமகன் பல சாதிகளைச் சேர்ந்த நண்பர்களை அழைத்து ‘சம்பந்தி’ விருந்தளித்தார்.

இரக்கம் மட்டும் காரணமல்ல:

  • பட்டியல் சமூகங்களின் விடுதலைக்கான பிராமணர்,பிராமணரல்லாதோர் என ஆதிக்கர்களின் இச்செயல்பாடுகள் ‘இரக்கத்தால்’ உருவாகவில்லை. ஒருபுறம் பிரிட்டிஷ், பிராமணர்ஆதிக்கங்களின் ஒடுக்குமுறையையும் வலியையும் ஆதிக்கச் சாதியினர் அனுபவித்ததும், மறுபுறம் தங்களால் ஒடுக்கப்படும் பட்டியல்சமூகங்களின் வலியை அவர்களுக்கு உணர்த்தியது.
  • ஆதிக்கர்களாக இருப்பது தவறென்ற குற்ற உணர்வையும் விளைவித்தது. மேலும், தங்களின் பொருளாதார வளத்துக்குப் பட்டியல் சமூகங்களின் உழைப்பே முக்கியமானது என்றும் உணர்ந்தனர். இதனால் பட்டியல் சமூகங்களின் விடுதலைக்காக ஆதிக்கர்கள் போராடினர்.
  • இந்நிலைப்பாட்டைச் சமகாலத்திலும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் தொடர்கின்றன. ஆனால், சாதிய அமைப்புகளின் நிலையோ தலைகீழாகி, பட்டியல் சமூகங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன.
  • இதற்கான காரணங்களைக் கண்டறிவதற்குப் பதிலாக, ஆராய்ச்சியில் அறிவியல், வரலாற்று முறைகளுக்கு முரணான, புராண வகைப்பட்ட அடையாள அரசியலை முன்னெடுத்ததால் சாதியின் இடியாப்பச் சிக்கலின் முடிச்சுகள் மேலும் இறுகியுள்ளன. இவற்றால் மூச்சுத் திணறும் நாம் சுவாசிக்க, அம்பேத்கரின் சிந்தனையே சாளரமாய் இருக்கிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்