- “எந்தக் கல்லூரியாக இருந்தாலும், எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் அங்கு கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் எவ்வளவு இருந்தாலும் அவை அனைத்தும் இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகையாக முழுமையாக வழங்கப்படும்” என அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டு, 1943 முதல் செயல்பாட்டில் உள்ளது ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ (PMSS) திட்டம்.
- எனினும், மத்திய - மாநில அரசுகள் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குக் கீழ் உள்ள பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மாணவ-மாணவிகளுக்குச் சுயநிதித் தனியார் கல்லூரிகளில், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த உதவித் தொகை வழங்குவதற்கு ஏறத்தாழ ரூ.1,400 கோடி (மத்திய அரசு 60%; மாநில அரசு 40%) ஒதுக்கப் படுகிறது.
- இதற்கான அரசாணை - 92 வெளியிடப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பி.ஏ., பட்டப் படிப்புக்கு ரூ.1,350, பி.எஸ்சி., பி.காம்., படிப்புகளுக்கு ரூ.2,850, மற்ற இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கு ரூ.4,750 என வழங்கப்படுகிறது. ஆனால், சுயநிதிக் கல்லூரிகளில் கலை-அறிவியல் படிப்புகளுக்குக் கல்விக் கட்டணமாக, ஆண்டுக்கு ரூ.20,000 முதல் 50,000 வரை வசூலிக்கப் படுகிறது.
- முதல் தலைமுறைப் பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்கள் அவ்வளவு பெரிய தொகையைக் கல்விக் கட்டணமாகச் செலுத்த
- முடியாமல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை இழந்துவருகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கை விகிதமும் (GER) சரிந்துவருகிறது. தமிழ்நாட்டில் 2017-18இல் 42%ஆக இருந்த மாணவர் சேர்க்கை விகிதம், 2019-20 இல் 39%ஆகச் சரிந்தது.
- அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்கள் தனியார் சுயநிதிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அரசாணை வெளியிடப் பட்ட நாளிலிருந்து இன்றுவரை கலை, அறிவியல், சட்டம், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குக் கல்விக் கட்டண உயர்வு கட்டணக் குழுவால் உயர்த்தி வழங்கப்படவில்லை.
- கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படாத படிப்புகளுக்கு, குழுவை நியமித்துக் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசின் சமூகநீதி-அதிகாரமளிப்புத் துறை போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழிகாட்டி 2021-2026இல் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும் தமிழ்நாட்டில் நிறைய படிப்புகளுக்குக் கல்விக் கட்டண நிர்ணயக் குழு இல்லை; அப்படியே இருந்தாலும் முழுமையாகச் செயல்படுவதில்லை.
- இந்நிலை மாற பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கலை-அறிவியல் படிப்புக்கான கல்வி உதவித்தொகை நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் முழுக் கல்வி உதவித்தொகையும் விடுவிக்கப் படுவதைத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் துறை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரி கல்வியாண்டுத் தொடக்கத்திலேயே பாதித் தொகை விடுவிக்கப் பட்டால், மாணவர்களுக்கும் கல்லூரிகளுக்கும் இடையே நிலவும் கட்டணச் சிக்கல்கள் நீங்கும், இடைநிற்றல் விகிதமும் குறையும்.
நன்றி : இந்து தமிழ் திசை (23 – 08 – 2023)