ஒடுக்கப் பட்டோருக்கும் கிடைக்கட்டும் சர்வதேசக் கல்வி!
- சர்வதேசக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை, முனைவர் கல்வி பெறுவதற்கான உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் பயனடையும் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடிகளைச் சேர்ந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
- தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர், பழங்குடி நலத் துறை சார்பில் கல்விக்குப் பலவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றுள் ‘குவாக்கரெலி சைமண்ட்ஸ்’ (க்யூ.எஸ்) தரவரிசைப் பட்டியலில் முதல் 1,000 இடங்களைப் பெற்ற சர்வதேசக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை, முனைவர் பட்டம் பயில உதவித்தொகை வழங்கும் திட்டம் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
- 2003இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் பயனடைபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இந்நிலையில், 2023இல் தமிழ்நாடு அரசு இதன் விதிமுறைகள் சிலவற்றை மாற்றி அமைத்தது. அதன்படி பட்டியல் சாதிகளைச் சேர்ந்த எத்தனை பட்டதாரிகள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்போது ரூ.8 லட்சத்துக்கு மேல் ரூ.12 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு ரூ.24 லட்சம் உதவித்தொகை வழங்குவதற்கான புதிய பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் படிப்புக்கு 35 வயதுக்கு மிகாமலும் முனைவர் பட்டப் படிப்புக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் மூலம் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் 120 பட்டதாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
- சிறப்பான இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் மாணவர்கள் அனைவரையும் சென்று சேரவில்லை என்பது கவலைக்கு உரிய விஷயமாகும். மதுரையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டச் செயல்பாட்டாளர் ஒருவரின் கோரிக்கைக்கு, தகவல் அறியும் உரிமை ஆணையம் கொடுத்த பதிலில், 2012 முதல் 2020 வரையிலான எட்டு ஆண்டுகளில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த 18 பட்டதாரிகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்ததாகவும் அவர்களில் மூன்று பேர் மட்டுமே உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 2022-23 காலக்கட்டத்தில் 25 பட்டதாரிகள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
- அவர்களில் 9 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். அந்த ஆண்டு உதவித்தொகைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.8.94 கோடி. அதில் ரூ.7.93 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ரூ.1.01 கோடி மீதமானது. இது அடுத்த கல்வியாண்டின் உதவித்தொகை நிதியில் சேர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு, இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த ஒட்டுமொத்தப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்தத் திட்டத்தால் பயனடைகிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
- கர்நாடக அரசு பட்டியல் சாதி / பழங்குடி மாணவர்கள் வெளிநாடுகளில் முதுநிலைக் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகைத் திட்டமான ‘பிரபுத்தா’வை நடைமுறைப்படுத்திவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 150 பட்டதாரிகள் இதன் மூலம் பயன்பெற முடியும். டெல்லி அரசு இதேபோன்ற ஒரு திட்டத்துக்கு, ஆண்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கிவருகிறது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க மாணவர்களிடம் அரசு பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம். திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 09 – 2024)