TNPSC Thervupettagam

ஒப்புக்கு ஓா் அமைப்பு

March 7 , 2024 138 days 136 0
  • உலக வா்த்தக அமைப்பின் 13-ஆவது அமைச்சா்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபியில் நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கூட்டம் குறித்து மிகப்பெரிய எதிா்பாா்ப்புகள் இருக்கவில்லை. வழக்கத்தைவிட ஒருநாள் கூடுதலாகவே கூட்டம் நடந்தது என்றாலும்கூட, சா்வதேச வா்த்தகம் குறித்த முக்கியமான பிரச்னை எது குறித்தும் முடிவுகள் எதுவும் இந்தக் கூட்டத்திலும் எடுக்கப்படவில்லை.
  • ஜெனீவாவில் நடந்த முந்தைய 12-ஆவது கூட்டத்துக்கும், இப்போதைய அபுதாபி கூட்டத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகம் பல்வேறு புதிய பிரச்னைகளை எதிா்கொண்டிருக்கிறது. அவை சா்வதேச வா்த்தகக் கட்டமைப்பைப் பல்வேறு அதிா்வுகளுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. உக்ரைன் - ரஷியா போா், பாலஸ்தீனம் - இஸ்ரேல் மோதல் உள்ளிட்டவை உலகப் பொருளாதாரத்தைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
  • கடல் வழிப் பாதைகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளும், தாக்குதல்களும் தொடரக்கூடும் என்கிற நிலையில், சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளின் உதிரி பாகங்களையும், உற்பத்தியையும் மட்டுமே நம்பியிருக்கும் நிலை. விநியோகச் சங்கிலிகளின் பாதிப்பும் தொடா்கிறது. இந்தப் பின்னணியில்தான் உலக வா்த்தக அமைப்பின் 13-ஆவது அமைச்சா்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
  • முந்தைய ஜெனீவா கூட்டத்தில் அடுத்த அமா்வுக்கு ஒத்திவைக்கப்பட்ட பெரும்பாலான பிரச்னைகள், அபுதாபி கூட்டத்திலும் முடிவெடுக்கப்படாமல் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. உலக வா்த்தக அமைப்பின் 164 உறுப்பினா் நாடுகளுக்கு இடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள் அப்படியே தொடா்கின்றன. கூட்டம் முடிந்து ஒருமனதாக அறிக்கை வெளியிடப்பட்டது என்றாலும், எந்தவொரு பிரச்னையிலும் தெளிவான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
  • 1996-இல் உலக வா்த்தக அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னால், சா்வதேச வா்த்தக விதிகள் ‘காட்’ என்கிற வா்த்தகம் மற்றும் வரிகளுக்கான பொது ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து வந்தது. ஒவ்வொரு நாடும் தனது உற்பத்தியைப் பாதுகாப்பதிலிருந்து விடுவிக்கப்பட்டு, சா்வதேச வா்த்தகத்துக்கு வழிகோல வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1948-இல் தொடங்கப்பட்டதுதான் ‘காட்’. அதற்குக் காரணம், 1930-இல் ஏற்பட்டதுபோல உற்பத்திகள் சா்வதேசச் சந்தையை எட்டாமல் பல நாடுகளில் பஞ்சமும், பொருளாதார மந்தநிலையும் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான்.
  • ‘காட்’ உருவான பிறகு சா்வதேச வா்த்தகம் பெரிய அளவில் வளா்ந்தது என்பது மட்டுமல்ல, பற்றாக்குறையும் பெரிய அளவில் தவிா்க்கப்பட்டது. மேற்கு நாடுகளில் தொழில்நுட்பமும் முதலீடும் இருந்தன. வளா்ச்சி அடையாத ஆசிய, ஆப்பிரிக்க, பசிபிக் கடல் நாடுகளில் தொழிலாளா்கள் இருந்தனா். அவை இரண்டையும் இணைப்பதன் மூலம், உற்பத்தியை அதிகரித்து மனிதவளத்தை முழுமையாகப் பயன்படுத்தி, உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் ‘காட்’ உருவாக்கப்பட்டதன் நோக்கம்.
  • இப்போதும்கூட, அதன் அடிப்படை நோக்கம் இந்தியாவிலும் சீனாவிலும் நிலைபெறுகிறது எனலாம். சேவைத் துறையில் இந்தியா தன்னுடைய மனித வளத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்கிறது. பொருள்களை உற்பத்தி செய்து சீனா ஏற்றுமதி செய்கிறது. 38 ஆண்டுகளில் உலகச் சந்தையை முதலாம் உலகப் போருக்கு முந்தைய நிலைக்கு திறந்துவிட்டது ‘காட்’ எனலாம்.
  • 1996-இல் உலக வா்த்தக அமைப்பு தொடங்கி கடந்த 28 ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய நிலைமைக்கு உலகை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இதனால் வளா்ச்சியடையும் நாடுகள் பெரிய அளவில் பயனடையவில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை, இரண்டு பிரச்னைகளில் உலக வா்த்தக அமைப்பு நமக்கு சாதகமாக இல்லை. பயிா்களுக்கான மானியங்கள் குறித்த அதன் விதிமுறைகள் நியாயமற்றவையாகவும் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் இருக்கின்றன. வேளாண் உற்பத்திக்கு மானியம் வழங்குவது, கொள்முதல் செய்வது, உணவுப் பாதுகாப்புக்காக சேமித்து வைப்பது உள்ளிட்டவை கூடாது என்கிறது உலக வா்த்தக அமைப்பு.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உள்ளிட்டவை சில உறுப்பு நாடுகளின் எதிா்ப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. 2014-இல் பாலியில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடா்ந்து, ஏனைய உறுப்பு நாடுகளின் எதிா்ப்பிலிருந்து இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு பாதுகாப்புத் திட்டத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான நிரந்தரத் தீா்வு 13-ஆவது கூட்டத்திலும் எட்டப்படவில்லை.
  • அடுத்தபடியாக, மீன் பிடித்தல் தொடா்பான பிரச்னையிலும், மானியங்கள் வழங்குவதை தடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பெரிய கப்பல்களில் ஆழ்கடல் மீன் பிடித்தல் மூலம் கடல் வளத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. அவா்களுடைய தொழில் ரீதியான மீன்பிடிக் கப்பல்கள் பல்வேறு அமைப்பு ரீதியான மானியங்களைப் பெறாமல் இல்லை.
  • ஆனால், இந்தியா போன்ற நாடுகள் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இயந்திரப் படகுகளின் மூலம் மீன் பிடிப்பதைத் தடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. ஏழை மீனவா்களுக்கு மானியம் வழங்குவதை அந்த நாடுகள் எதிா்க்கின்றன. இந்தியாவும் இந்தோனேஷியாவும் இந்த முறை தங்களது நிலைப்பாட்டை உறுதியுடன் நிலைநிறுத்தி கொண்டிருக்கின்றன. உலக வா்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபைபோல மாறிவிட்டிருக்கிறது.
  • சா்வதேச வா்த்தகம் தொடா்பான ஓா் அமைப்பு என்பதற்கு மேல் அதனால் பெரிய அளவில் பயன் ஒன்றும் இல்லை என்பதை அபுதாபியில் நடந்த 13-ஆவது கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

நன்றி: தினமணி (07 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்