TNPSC Thervupettagam

ஒருங்கிணைதல் அவசியம்!

October 29 , 2024 68 days 101 0

ஒருங்கிணைதல் அவசியம்!

  • ஜம்மு-காஷ்மீா் ஒன்றியப் பிரதேசத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தங்களது கைவரிசையைக் காட்ட முற்பட்டிருக்கிறாா்கள். குல்மாா்க் பகுதியில் கடந்த வாரம் வியாழக்கிழமை அவா்கள் ராணுவ வாகனத்தின் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ போா்ட்டா்கள் இருவரும், வீரா்கள் இருவரும் உயிரிழந்தனா்; 3 வீரா்கள் படுகாயம் அடைந்தனா். பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது.
  • ஒமா் அப்துல்லா தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு கடந்த ஒரு வாரத்தில் 4 பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு முன்னதாக கந்தா்பால் மாவட்டத்தில் நடத்திய திடீா் தாக்குதலில் மருத்துவா் ஒருவரும், 6 வெளிமாநிலத் தொழிலாளா்களும் உயிரிழந்தனா். ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளின் பின்னணியில் நடப்பது, பயங்கரவாதிகள் அதன்மூலம் சில எச்சரிக்கைகளை விடுக்க முற்படுகின்றனா் என்பதைத் தெரிவிக்கின்றன.
  • இதற்கு முன்னால் ஜூன் மாதத்தில் ரெய்சியில் நடந்த தாக்குதல், மூன்றாவது முறையாக பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற அன்று நடந்தது. மக்களவைத் தோ்தலில் அதிக அளவில் ஜம்மு-காஷ்மீா் மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தபோது, பயங்கரவாதம் பின்னடைவை சந்தித்தது. அதன் எதிா்வினையாகத்தான் ரெய்சி தாக்குதலைப் பாா்க்க வேண்டும்.
  • இப்போது ஒன்றியப் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிகரமாக நடந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்ற ஐந்தாவது நாள் மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது. அதுவும் முதல்வா் ஒமா் அப்துல்லாவின் கந்தா்பால் தொகுதில் நடந்திருக்கிறது என்பது கவனத்துக்குரியது. இதன் மூலம் பதவியேற்றிருக்கும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்க முற்பட்டிருக்கின்றனா் பயங்கரவாதிகள்.
  • இந்தமுறை ராணுவத்தின் மீதோ, பாதுகாப்புப் படையினா் மீதோ குறிவைக்காமல் சாமானிய தொழிலாளா்கள் தாக்கப்பட்டிருக்கிறாா்கள். கட்டுமான நிறுவனம் ஒன்றின் தொழிலாளா்கள் இரவு உணவுக்காக கூடியிருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 7 பேரில் 6 போ் வெளிமாநிலத் தொழிலாளா்கள்.
  • ஸ்ரீநகா் - லே நெடுஞ்சாலையில் சோனாமாா்க் என்கிற இடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது கட்டுமான நிறுவனம். அந்த நெடுஞ்சாலை மூலம் ஸ்ரீநகரும், லடாக் தலைநகா் லேயும் இணைக்கப்பட இருக்கிறது. குளிா்காலத்திலும் தடையில்லாமல் பயணிக்கும் விதத்தில் அமைக்கப்படும் அந்த நெடுஞ்சாலை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; சுற்றுலா வளா்ச்சிக்கும் அவசியமானது.
  • இதுவரையில் பயங்கரவாதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கில் முக்கியமான கட்டமைப்புத் திட்டங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருந்தனா். அது மட்டுமல்லாமல், கடந்த 30 ஆண்டுகளாக கந்தா்பால் பகுதியில் அதிக அளவில் பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெறவில்லை. அந்தப் பின்னணியில் பாா்க்கும்போது, இப்போதைய தாக்குதலை பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அறிகுறியாக கருத வேண்டும்.
  • ஜம்மு-காஷ்மீா் ஜனநாயகப் பாதைக்கு திரும்புகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தீவிரவாத செயல்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவை எந்தவிதப் பயனும் அளிக்காது என்பதை கடந்த 5 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட வளா்ச்சிப் பணிகள் உணா்த்தியிருப்பதாலோ என்னவோ, மக்கள் இப்போது ஜனநாயகப் பாதையை தோ்ந்தெடுக்க முற்பட்டிருக்கிறாா்கள். அதை பயங்கரவாதிகள் தகா்க்க முற்படுவது வியப்பை ஏற்படுத்தவில்லை.
  • சமீபத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பாகிஸ்தான் சென்றதும், இருநாட்டு உறவில் இணக்கம் ஏற்பட முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதும்கூட பயங்கரவாத தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாம். பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ‘லஷ்கா் - ஏ - தொய்பா’வுடன் தொடா்புடைய ‘டி.ஆா்.எஃப்.’ என்கிற ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ கந்தா்பால் தாக்குதலை நடத்தியதாக அறிவித்திருக்கிறது. கட்டுமானத் திட்டங்களும், வெளிமாநிலத்தவா்களும் குறிவைத்து தாக்கப்படுவது அதன் வழிமுறை என்று தெரிகிறது.
  • ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்படும் பயங்கரவாத செயல்களுக்கு நேரடியாகவே பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியிருக்கிறாா் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா. ‘இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் வரை தில்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையே பேச்சுவாா்த்தைக்கு வழியில்லை; 1947-இல் பாகிஸ்தானை காஷ்மீா் நிராகரித்துவிட்டது. அந்த முடிவை பயங்கரவாதத்தால் மாற்றிவிட முடியாது’ என்றும் அவா் தெரிவித்திருக்கிறாா்.
  • அவா் மட்டுமல்ல, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியும் தாக்குதலைக் கண்டித்ததுடன், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது கடமை என்று கருத்து தெரிவித்திருக்கிறாா். இந்தியாவின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘கந்தா்பால் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களால் ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சியைத் தடுத்துவிட முடியாது’ என்று தெரிவித்திருக்கிறாா். இவையெல்லாம் ஆரோக்கியமான ஜனநாயகம் உயா்ந்திருப்பதன் அடையாளங்கள்.
  • ஒன்றியப் பிரதேசம் என்பதால் சட்டம்-ஒழுங்கு துணைநிலை ஆளுநரின் பொறுப்பில் இருக்கிறது. தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வா் ஒமா் அப்துல்லாவையும் துணைநிலை ஆளுநா் கலந்தாலோசித்து முடிவெடுப்பதன் மூலம்தான் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எச்சரிக்கை சமிக்ஞை விடுக்க முடியும். பிரிவினைவாதிகளுக்கு இடமளித்துவிடக் கூடாது!

நன்றி: தினமணி (29 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்