TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த திட்டமிடலும் செயல்பாடுகளுமே காலத்தின் தேவை!

April 16 , 2020 1542 days 646 0
  • கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணிகள் முழுமையான பயனை அளிக்க வேண்டுமெனில், அனைத்துத் துறை வல்லுநர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடுதல் மிகவும் அவசியம்.
  • இல்லையென்றால், தற்போது செயல்பட்டுவரும் கரோனா தொடர்பான அரசின் செயல்பாடுகள் யாவும் வருவாய்த் துறை நடவடிக்கையாகக் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுருங்கிப்போய்விட நேரும். நிர்வாகம், நிதி, சுகாதாரம் தொடர்பாகக் குறிப்பிட்ட துறைகளின் அதிகாரிகள் மட்டுமின்றி அத்துறையைச் சார்ந்த வல்லுநர்களையும் உள்ளடக்கி வழிகாட்டும் நிபுணர் குழுக்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் முந்தைய காலங்களின் அனுபவங்களோடும் புதிய சாத்தியங்களோடும் திட்டமிடுவதும் செயல்படுவதும் எளிதாகும்.

கேரளம் நமது முன்னுதாரணம்

  • கேரளத்தை இந்த விஷயத்தில் நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கரோனா தொடர்பாக கேரளத்தின் முன்னாள் தலைமைச் செயலர் கே.எம்.ஆப்ரகாம் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
  • சுகாதாரத் துறைச் செயலர், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், பன்னாட்டு முகமைகளில் பணியாற்றும் கேரள அறிஞர்கள் எனப் பலரும் அதில் இடம்பெற்றிருந்தார்கள். கேரள நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமின்றி, ஊரடங்கைப் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றியும் மிகச் சிறப்பான பரிந்துரைகளை அளித்துள்ளது.
  • மூன்றடுக்குகளாக ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது பற்றி இந்தக் குழு அளித்த பரிந்துரையைத்தான் இன்று மத்திய அரசு நாடு முழுவதும் பின்பற்றத் திட்டமிட்டிருக்கிறது.
  • அதைப் போலவே, கேரள அரசு தன்னுடைய நிவாரண நடவடிக்கைகளில் தன்னார்வலர்களை மிகவும் திட்டமிட்டு, சிறப்பான வகையில் ஈடுபடுத்திவருகிறது. தமிழக இடதுசாரிக் கட்சிகள் தன்னார்வலர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துவருகின்றன.
  • தமிழகத்தைச் சார்ந்த பல்துறை அறிஞர்களையும் உள்ளடக்கிய நிபுணர் குழுவை உருவாக்கி அவர்களின் பங்களிப்பைப் பயன்படுத்திக்கொள்வதைப் பற்றியும், நிவாரணப் பணிகளில் கட்சிபேதங்களின்றி தன்னார்வலர்களை அனுமதிப்பது பற்றியும் தமிழக அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (16-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்