TNPSC Thervupettagam

ஒரு உப்புமா கதையும் இந்தியாவின் தேர்தல் முறையும்

February 18 , 2021 1425 days 671 0
  • ஒரு விடுதியில் தினமும் காலை உணவாக உப்புமா போடப்பட்டது. 100 பேரில் 80 பேர் அதை விரும்பவில்லை. உப்புமாவை மாற்ற வேண்டும், வேறு சிற்றுண்டி வேண்டும் என்று விடுதிக் காப்பாளரிடம் புகார் சொன்னார்கள். உப்புமா விரும்பிகளான 20 பேர் அதுவே தொடர வேண்டும் என்றார்கள்.
  • ஜனநாயக முறைப்படி முடிவெடுக்கத் தீர்மானித்தார் காப்பாளர். அதன்படி, உப்புமாவே மீண்டும் தொடரும் என முடிவானது. எப்படி? உப்புமா வேண்டாம் என்று புகார் செய்தவர்களில் 18 பேர் தோசைக்கும், 16 பேர் இட்லிக்கும், 14 பேர் பொங்கலுக்கும், 12 பேர் பிரட் பட்டருக்கும், 10 பேர் ஊத்தப்பத்துக்கும், 10 பேர் பூரிக்கும் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.
  • இந்த உப்புமா கதைதான் இந்தியாவின் தேர்தல் முறையும்.
  • பெரும்பாலான வாக்காளர்கள் ஒரு வேட்பாளரைப் புறக்கணித்தாலும்கூட, போட்டியிட்டவர்களுக்குள் அவர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருந்தால், அவரே வெற்றிபெற்றவராகிவிடுகிறார்.
  • அவரைப் புறக்கணித்த பெரும்பாலானவர்களுக்கும் சேர்த்து, அவரே பிரதிநிதி. இந்த நடைமுறை எப்படிச் சரியானதாக இருக்க முடியும் என்று வெகு காலமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.
  • ஆனாலும், அதிக வாக்குகள் வாங்குபவரே வெற்றிபெற்றவர் என்ற நடைமுறையை மாற்றும் விஷயத்தில், யாரும் அவ்வளவு உறுதியாக நின்று போராடவில்லை. அதனாலேயே, இந்தத் தேர்தல் நடைமுறை இன்னும் தொடர்கிறது.

தோற்றால் மட்டுமே கோரிக்கை

  • தேர்தல் முடிந்து மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தில் பெரும்பான்மையைத் தவறவிடும் கட்சிகள் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று முழங்குவதும் பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோருவதும், பின்பு அவர்களே தேர்தலில் வெற்றிபெற்றால் அந்த நடைமுறை குறித்து மௌனம் சாதிப்பதும் வழக்கமாகிவிட்டது.
  • தற்போதைய தேர்தல் நடைமுறைகளால், தோல்வியடையும் கட்சிகளுக்கு, அவை பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.
  • உதாரணமாக, கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில், தமிழகத்தில், 4 கோடியே 28 லட்சத்து 78 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். அவர்களில், 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 60 பேரின் வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
  • அதிமுகவுக்கு ஆதரவாக 40.80% பேர் வாக்களித்திருந்தாலும் அக்கட்சிக்கு எதிராக வாக்களித்திருந்தவர்களின் எண்ணிக்கை 59.2%. ஆக, எதிர்த்து வாக்களித்தவர்களுக்கும் சேர்த்து அதிமுகதான் ஆட்சிப்பொறுப்பை வகிக்கிறது.
  • 2016 சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியைப் பிடித்த அதிமுக கூட்டணிக்கும் பெரும்பான்மையைத் தவறவிட்ட திமுக கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே. ஆக, இப்படிப் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு வாக்குகளுக்குப் பின்னும் ஆட்சி அதிகாரத்தில் தொடரும் ஒரு கட்சியால், எப்படிச் சரிசமமாக எல்லோருக்கும் சேர்த்துப் பணியாற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது. இது எப்படி உண்மையான ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக இருக்க முடியும்?
  • தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிகளின் சார்பில் போட்டியிட்டவர்களைத் தவிர, வேறு யாரும் வெற்றி பெறவில்லை.
  • அப்படியென்றால், இந்த இரு கூட்டணியினரும் பெற்ற வாக்குகளைத் தாண்டி மற்ற கட்சியினர் பெற்ற வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. இரு கூட்டணிக் கட்சியினரைத் தாண்டி, மற்ற கட்சியினர் 22% சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்குத் தற்போதைய நடைமுறையில், ஒரு பிரதிநிதிகூடக் கிடைக்காததால் அவர்களின் குரலை சட்டமன்றத்தில் வெளிப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.
  • இதனாலேயே, குறிப்பிட்ட சதவிகிதத்தில் மொத்த வாக்குகளைப் பெற்றும் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாத சிறு கட்சிகளெல்லாம், தங்களது எதிர்காலம் கருதி, அடுத்த தேர்தலில் தாங்கள் எதிர்த்த பெரிய கட்சிகளோடு கூட்டணி சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

எண்களின் விளையாட்டு

  • தற்போதைய தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கலை எல்லோரும் உணர்ந்துதான் இருக்கின்றனர். தேர்தலையே ஒரு எண் விளையாட்டு என்று விமர்சித்தார் முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் லிங்டோ.
  • இந்தத் தேர்தல் நடைமுறையில் இன்னொரு சிக்கலையும் பார்க்க முடிகிறது. அதாவது, ஒரு கட்சிக்கு ஆதரவாக அளிக்கும் வாக்கு, மற்றொரு கட்சிக்கு எதிராகிவிடுகிறது. உதாரணத்துக்கு ஹைதராபாதின் அசாதுதீன் ஒவைஸியின் மஜ்லிஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுகிறது என வைத்துக் கொள்வோம்.
  • அந்தக் கட்சிக்கு ஒருவர் வாக்களித்தால், அது அந்தக் கட்சிக்கு அளிக்கும் ஆதரவு வாக்கு என்பதை விடவும் மறைமுகமாக அது திமுகவுக்கு எதிரான வாக்காகவும் பாஜகவுக்கு ஆதரவான வாக்காகவும் மாற அதிகம் வாய்ப்பிருக்கிறது.
  • இந்தக் குறுக்குக் கணக்குகளை இப்போது பெரிய கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. அதனாலேயே அக்கட்சிகள், தங்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் கட்சிகளுக்குப் போகும் வாக்குகளைச் சிதறடிக்கும் முயற்சியில் இறங்குகின்றன.
  • அந்தக் கட்சிகளுக்கு எதிராக இருக்கும் வாக்குகள், நேரடியாக எந்தக் கட்சிக்குப் போகுமோ, அதற்குப் போக விடாமல், பல கட்சிகளைக் களம் இறக்கி, வாக்குகளைச் சிதறடித்து வெற்றிபெறுகின்றன. இந்த தந்திர அரசியல் அனைத்து மாநிலங்களிலுமே அரங்கேற்றப்பட்டுவருகிறது.
  • அரசமைப்பு நடைமுறையில் இருக்கும் இந்தக் குறைபாட்டை, செல்வாக்கு மிக்க கட்சிகள் பயன்படுத்திக்கொள்வதாகச் சொல்லலாமே தவிர, அதைச் சட்டத்துக்குப் புறம்பானது என்று குற்றஞ்சாட்ட முடியாது.
  • இந்த நடைமுறை பெரும்பான்மையான வாக்காளர்களின் விருப்பங்களுக்கு மாறான தேர்தல் முடிவுகளை அளிக்கிறது என்ற வகையில் குறைபாடு கொண்டது. விகிதாச்சார முறையிலான பிரதிநிதித்துவத்தால் மட்டுமே இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும்.
  • நடப்புத் தேர்தல் நடைமுறையால், பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியாமல் தவிக்கும் சிறு கட்சிகள், தங்களுடைய தனித்த குரலைச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் வெளிப்படுத்திட அது மட்டுமே வாய்ப்பளிக்கும்.
  • ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்போது சாதிய, மதவிய இயக்கங்கள் கூடுதல் எண்ணிக்கையில் பிரதிநிதிகளைப் பெற்றுவிடும் ஆபத்து இருப்பதாகச் சிலர் சொல்கின்றனர்.
  • அதையும் முழுமையாகப் புறக்கணித்துவிட முடியாது. முஸ்லிம் சிறுபான்மையினத்தவருக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்ற காரணத்தால் தங்களைத் தாங்களே அதிகார மையத்துக்குள் கொண்டுவந்துவிடும் முனைப்பில்தான் மஜ்லிஸ் கட்சி தேர்தல் களத்துக்கு வருகிறது. என்றாலும், நேரிய அரசியலுக்கான விதைகள் ஊன்றப்படும்போது, மக்களிடம் பாகுபாடுகளை வளர்க்கும் அரசியல் போக்கு இயல்பிலேயே அகன்றுவிடும் என்பது உறுதி.

நன்றி: இந்து தமிழ் திசை (18-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்