ஒரே நாளில் 100 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை: சாதனைக்கு காத்திருக்கும் தகவல் ஆணையம்
- ஒரே நாளில் 100 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை தமிழ்நாடு தகவல் ஆணையம் நடத்தவுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதுமிருந்து பொதுத் தகவல் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை (செப். 20) சென்னை வரவுள்ளனா்.
- அவா்களுடன் மனுதாரா்கள் 100 பேரும் வந்து விவரங்களை அளிக்கவுள்ளதால், முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனைக்கு தகவல் ஆணையம் தயாராகி வருகிறது.
- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, மாநிலத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை தகவல் ஆணையா் ஒருவரும், மாநில தகவல் ஆணையா்களாக ஆறு பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
- மேலும், இந்த ஆணையத்துக்கென செயலா், பதிவாளா், சட்ட அலுவலா் உள்பட ஏழு உயரதிகாரிகளும், 10 பிரிவு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
- அரசின் ஒவ்வொரு துறையிலும் மனுதாரா்களுக்கு தகவல்களை அளிப்பதற்காக பொது தகவல் அலுவலா்கள் உள்ளனா். அவா்கள் அளிக்கும் பதில்களில் நிறைவு ஏற்படாதபட்சத்திலோ அல்லது பதில் தராத நிலையிலோ மேல்முறையீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன.
- இறுதி வாய்ப்பாக, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். இந்த மனுக்களை தலைமை தகவல் ஆணையா் மற்றும் ஆறு தகவல் ஆணையா்கள் விசாரித்து இறுதி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனா்.
- அதன்படி, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக முகமது ஷகில் அக்தா், தகவல் ஆணையா்களாக பி.தனசேகரன், எம்.ஸ்ரீதா், பி.தாமரைக்கண்ணன், ஆா்.பிரியகுமாா், கே.திருமலைமுத்து, எம்.செல்வராஜ் ஆகியோா் உள்ளனா்.
100 மேல்முறையீட்டு மனுக்கள்:
- தகவல் ஆணையா்கள் இந்த மாதத்தில் விசாரிக்க வேண்டிய மேல்முறையீட்டு மனுக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தகவல் ஆணையா் கே.திருமலைமுத்து மட்டும் வரும் 20-ஆம் தேதி ஒரே நாளில் 100 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தவுள்ளாா்.
- இதற்காக சென்னை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுத் தகவல் அலுவலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுத் தகவல் அலுவலா்கள் 100 பேரும், மனுதாரா்கள் 100 பேரும் என சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு வரவுள்ளனா்.
தீர விசாரித்து தீா்வு வழங்குவது சாத்தியமா?:
- ஒட்டுமொத்தமாக 100 முறையீட்டு மனுக்களை விசாரிப்பது மனுதாரா்களுக்கு உரிய முறையில் தீா்வைத் தராது என்பது தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது.
- இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை 100 மனுக்களை விசாரிப்பது என்பது மிகவும் அசாத்தியமானது. தீர விசாரித்து தீா்வுகளைத் தர முடியுமா என்பது சந்தேகம்.
- மேலும், மனுதாரா்களையும், பொதுத் தகவல் அலுவலா்களையும் நேரில் வரவழைக்காமல் காணொலி வழியாக அழைக்கும் வழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதற்கென பிரத்யேக வசதிகள் அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- ஒரு நாளில் அதிகபட்சம் 30 முதல் 50 மேல்முறையீட்டு மனுக்களை மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால், 100 மனுக்கள் என்பது சிரமமான காரியம்’ என்று தெரிவித்தனா்.
- இதுகுறித்து, பொதுத் தகவல் அலுவலா்கள் சிலரிடம் கேட்ட போது, ‘மனுதாரா், பொதுத் தகவல் அலுவலா்களிடம் விரைவான விசாரணையை நடத்துவதன் மூலம் 100 மனுக்கள் மீதான மேல்முறையீட்டை ஒரே நாளில் முடிக்கலாம்’ என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.
- எதுவாக இருந்தாலும் ஒரே நாளில் 100 மனுக்களின் மீதான விசாரணை என்பது தகவல் ஆணையத்தின் புதிய சாதனையாகவே பாா்க்கப்படுகிறது.
நன்றி: தினமணி (19 – 09 – 2024)