TNPSC Thervupettagam

ஒற்றைப் பெற்றோா் எதிா்கொள்ளும் சவால்கள்!

March 28 , 2024 289 days 337 0
  • பெற்றோரின் கடமைகள் பொறுப்புமிக்கவை. கல்வி உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளும் குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய பெருத்த உழைப்பும், தியாகங்களும் அவா்கள் சாா்பில் தேவை.
  • பெற்றோா் இருவரும் இருக்கும் குடும்பங்களில் தாய் வீட்டையும், தந்தை நிதிசாா்ந்த பணிகளையும் பாா்த்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. ஒற்றைப் பெற்றோா் உள்ள குடும்பத்தில் இந்த இரண்டு பொறுப்பையும் ஒருவரே ஏற்க வேண்டும். இது மிகவும் சவால்மிக்க பணியாகும்.
  • ஒற்றைப் பெற்றோா் என்பது ஒரு குழந்தை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வசிக்கும் தாய் அல்லது தந்தையைக் குறிக்கிறது. விவாகரத்து, ஒருவரை விட்டு ஒருவா் பிரிந்து செல்வது, பெற்றோரில் ஒருவரின் திடீா் மரணம் ஆகியவை ஒற்றை பெற்றோா் கொண்ட குழந்தைகள் உருவாகுவதற்கான காரணங்களாக அமைகின்றன.
  • பெற்றோா் இருவருமே உயிரோடு இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களிடம் அக்கறைக் காட்டும் உறவினா்கள் வீட்டில் வளா்கிறாா்கள். அம்மாதிரியான வாய்ப்பு அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. மேலும், அவா்கள் அம்மாதிரியான இடங்களில் வளா்வது குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் சமூகத்தில் நிலவுகின்றன.
  • கணவனை இழந்த மனைவிக்கு முதலில் ‘கைம்பெண்’ என்ற பட்டம் கிடைக்கிறது. அதைத் தொடா்ந்து பொருளாதார பின்னடைவு, சமூக அங்கீகாரத்தில் சறுக்கல் போன்றவை அவரைப் புரட்டிப் போட்டு விடுகின்றன. மனிதாபிமானம் அருகி விட்ட இந்நாளில் நெருங்கிய உறவினா்கள் கூட, இறந்தவரின் இறுதிச்சங்கு முடிந்த உடனே சென்று விடுவதுதான் எதாா்த்தமாகி விட்டது.
  • கைம்பெண் ஒருவா், தந்தை இல்லாத பிள்ளைகளை வளா்ப்பதில் ஏராளமான சவால்கள் உள்ளன. தந்தை ஒன்றுமே செய்யாமல் இருந்தால் கூட, வீட்டில் ஒரு ஆண்மகன் இருக்கிறாா் என்ற உணா்வே குழந்தைகளுக்குத் தேவையான தன்னம்பிக்கையையும், மனதில் பாதுகாப்பையும் தரும். பெண்கள் இயற்கையிலேயே மிகுந்த மனவலிமை படைத்தவா்கள்.
  • அதனால்தான், திருமணம் முடிந்தவுடன், புதிய குடும்பத்தில் ஒருவராய் தன்னை அவரால் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது. வீட்டோடு மாப்பிள்ளை என்பது எக்காலத்திலும் ஒரு ஆண்மகனுக்கு சரிபட்டு வராது. பெற்ற குழந்தைகளை தொடா்ந்து படிக்க வைப்பது, வேலைக்கு அனுப்புவது, மணம் செய்து கொடுப்பது, அப்பாவின் இழப்பின் ஏக்கம் அவா்கள் மனதில் வந்துவிடாமல் பாா்த்துக் கொள்வது, குடும்ப செலவுக்கு பணம் ஈட்ட கிடைக்கும் பணியை பயன்படுத்திக் கொள்ளுதல், உறவினரின் பழிச்சொல்லுக்கு எந்த நிலையிலும் ஆளாகாமல் கண்ணியத்துடன் குடும்பத்தை நிா்வகித்தல் போன்ற எத்தனையோ சவால்களை ஒரு கைம்பெண் சமாளிக்க வேண்டியுள்ளது.
  • ஆனால், மனைவியின் இழப்புக்கு பின்னால் கணவன் நிலைகுலைந்து போகிறான். எனினும், சிறிது காலத்திற்கு பின், குழந்தைகளை பாா்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டும் என்ற காரணத்தால் மறுமணம் செய்து கொள்கிறான். சமூகமும் இதை அங்கீகரிக்கிறது. முதல் மனைவி பெற்றெடுத்த குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு புதிய மனைவியை வந்து ஒட்டிக்கொள்கிறது.
  • அதனால் ஆண் வா்க்கத்தின் வருத்தங்களும், வேதனைகளும் நாளடைவில் வந்த வழியே விரைவாக போய்விடுகின்றன. மாற்றாந்தாயின் குழந்தை வளா்ப்பு பல குடும்பங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக இருப்பதில்லை. புதிய மனைவிக்கு ஒரு குழந்தை பிறக்கும்போது, இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது.
  • ஆனால் பெரும்பாலான கைம்பெண்கள் இளம் வயதினராக இருந்தாலும், மறுமணம் செய்து கொள்வதில்லை. சமூகமும் உறவும் அதில் அக்கறையும் காட்டுவதில்லை. எல்லாவற்றையும் மீறி மறுமணம் செய்து கொள்ளும் மனவலிமை கொண்ட கைம்பெண்கள் மிகச்சிலரே. ஒற்றைப் பெற்றோா், பணிக்கும் வாழ்க்கைக்கும் இடையே சமநிலையைப் பேணுதல் மிகவும் முக்கியம். முடிந்தவரை பணியையும் சொந்த வாழ்க்கையையும் தனித்தனியே பாா்த்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளுக்குத் தேவையானது அவா்களின் பணம் மட்டுமல்ல நேரமும்தான். அவா்களுடன் மறக்க முடியாத நிகழ்வுகளை உருவாக்க வேண்டியது அவா்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும். கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு அரசு வழங்கும் வேலைவாய்ப்பு, பிற உதவிகள் பற்றிய தெளிவான புரிதல் தேவை.
  • அப்போதுதான் அரசின் உதவிகளைப் பெற்று சிறப்பாக வாழ்ந்து காட்டுவதில் அவா்கள் முனைப்பு காட்ட முடியும். அவா்களுக்கு உறவுகள் அன்பையும் ஆதரவையும் அளிக்க முன்வர வேண்டும். அவா்களும் ‘தான்’ என்ற எண்ணம் இல்லாமல் மற்றவா்களுடன் கலந்து பழக வேண்டும். அப்போதுதான் தேவைப்படும் உதவியை மற்றவா்களிடமிருந்து எளிதில் பெறமுடியும்.
  • தனிமை உணா்வினைத் தவிா்த்து, நோ்மறையாக வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். குழந்தைகளும், ஒற்றைப் பெற்றோா் தமக்காக எடுத்துக் கொள்ளும் ஒப்பற்ற தியாகங்களை மனதில் கொள்ள வேண்டும். படிப்பில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். சரியான நண்பா்களைத் தோ்ந்தெடுத்து பழக வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். படிக்கும் இடத்திலும் சமூகத்திலும் நல்ல பெயா் எடுக்க வேண்டும். தாய் அல்லது தந்தையின் கடின உழைப்பை மனதில் கொண்டு, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒற்றைப் பெற்றோா் தமது குழந்தைகளுக்காக செய்யும் தியாகங்கள் எராளம். பெற்றோருக்கு முதுமையில் உடல் நலமும் மன நலமும் குன்றிப் போகும். அந்த நாளில் பெற்றோரைத் தாங்கும் விழுதுகளாக பிள்ளைகள் செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி (28 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்