TNPSC Thervupettagam

ஒலிம்பிக்கின் உண்மையான சாதனை

August 9 , 2021 1089 days 485 0
  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
  • கரோனா பெருந்தொற்று இன்னும் விடைபெறாத நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டி, உலக மக்களின் உற்சாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
  • கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்வையாளர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதும் இந்தப் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு மூலம் உலகெங்கும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
  • ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக நீரஜ் சோப்ரா மூலம் தடகளத்தில் தங்கப் பதக்கம், ஹாக்கியில் வெண்கலம், பி.வி.சிந்துவின் வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
  • ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்க அணி, இந்த முறை 113 பதக்கங்களை வென்று, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. சீன அணி அதற்குக் கடுமையான போட்டியாகத் திகழ்ந்தது.
  • இப்படி வழக்கமான பதக்க வேட்டைகள், சிறந்த விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளின் விளையாட்டுத் திறன் போன்றவை கவனத்துக்கு வந்த அதேநேரம், உலகம் ஒற்றைத் தன்மை கொண்டதல்ல, பன்மைத்தன்மை நிறைந்தது என்பதை இந்த ஒலிம்பிக் போட்டி மீண்டும் ஒருமுறை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
  • ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா மூலமாக ஏற்கெனவே கவனம் பெற்றிருந்த விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளின் மனநலம், பிரபல அமெரிக்க ஜிம்னாசிய வீராங்கனை சிமோன் பைல்ஸ் மூலமாக மீண்டும் கவனம் பெற்றது.
  • அதிகப் பதக்கம் வெல்லும் சாதனைகளைப் புரிவார் என்று கருதப்பட்ட சிமோன் பைல்ஸ், மனநலத்தைக் காரணம் காட்டி சில போட்டிகளிலிருந்து விலகினார்.
  • எவ்வளவு உடல்வலுவும் விளையாட்டுத் திறனும் புகழும் பெற்றிருந்தாலும்கூட ஒருவருக்கு மனநலம் எவ்வளவு முக்கியமானது என்பதை இவர்களுடைய செயல்பாடுகள் கவனப் படுத்தியுள்ளன.
  • விளையாட்டு அதிகாரிகளும் அதைக் கணக்கில் எடுக்கத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம்.
  • இந்த ஒலிம்பிக்கில் பெண்களின் விளையாட்டுத் திறன் துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. அதே நேரம், மாற்றுப் பாலினத்தவர்களின் திறன்களும் கவனம் பெற்றுள்ளன.
  • வெளிப்படையாகத் தங்கள் மாற்றுப் பாலின அடையாளங்களை அறிவித்துப் பங்கேற்ற 182 பேரில் பலர் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்கள்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஒலிம்பிக்கில் பல வீரர்/வீராங்கனைகள் அடிப்படை மனிதப் பண்புகளான அன்பு, கனிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார்கள்.
  • அதற்குச் சிறந்த உதாரணம் உயரம் தாண்டும் வீரர்கள் கத்தாரின் மாதஸ் இஸ்ஸா பர்ஷிம், இத்தாலியின் ஜமர்கோ தம்பேரி.
  • இருவரும் ஒரே உயரத்தைத் தாண்டியிருந்த நிலையில், கூடுதல் உயரத்தைத் தாண்டி ஒருவர் மட்டும் தங்கப் பதக்கத்தைப் பெறுவதற்கு மாறாக, விதிமுறைகளின்படி தங்கப் பதக்கத்தை இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
  • உலகம் நெருக்கடியான காலத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் இதுபோல் அடிப்படை மனிதப் பண்புகள் மீண்டும் கவனம் பெறுவதுதான் இந்த ஒலிம்பிக் நிகழ்த்தியுள்ள மிகப் பெரிய சாதனை.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்