- கடந்த 2015-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் ஒன்றுகூடி, 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை எங்கு நடத்துவது என்று விவாதித்தபோது, சீன தலைநகர் பெய்ஜிங் என்ற முடிவு சிறிய ஆதரவுடனே வெற்றிபெற்றது.
- சில லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால், பல ஐரோப்பிய நாடுகளும் போட்டியில் இருந்து பின்வாங்கிய நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இரண்டு இடங்கள் வாய்ப்பு இருந்தது. ஒன்று சீனாவின் பெய்ஜிங், மற்றொன்று கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரம்.
- இதில், சீனா வெற்றிபெற்றபோது, இது ஒரு பாதுகாப்பான தேர்வு என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் மகிழ்ச்சியடைந்தார்.
- ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்ஜிங் சிறந்த தேர்வாக அவருக்குத் தோன்றியிருக்கலாம்.
- ஆனால், இன்று மனித உரிமை மீறல்களுக்காக பலத்த எதிர்ப்பை சீனா சந்தித்து வருவதால், ஒலிம்பிக் கமிட்டி சார்ந்தவர்கள் தடுமாறி வருகின்றனர்.
- தற்போதைய நிலையில், பன்னாட்டுப் புறக்கணிப்பு அச்சுறுத்தல்கள் குறைந்துவிட்டாலும், பெய்ஜிங்கில் நடைபெறும் போட்டிக்கு தங்கள் ராஜீய பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று அறிவித்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு, சீனாவுக்கு தனிப்பட்ட முறையில் எரிச்சலையும், சர்வதேச அளவில் பெரிய சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜீய ரீதியிலான புறக்கணிப்பு
- டோக்கியோவில் நடைபெற்ற கோடைக் கால ஒலிம்பிக் போட்டி, கரோனா தொற்று காரணமாக பெரிய நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், தற்போது பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி அரசியல் புறக்கணிப்பு, ஒமைக்ரான் தொற்று பரவல் என்ற இரு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
- உய்கர், கசாக்ஸ், பிற இன சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில், சீனாவுக்கு எதிராக சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- கற்பித்தல் முகாம்கள், கலாசார அழிப்பு, இனப்படுகொலை, ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறைகள், திபெத், மங்கோலியா, தைவானில் நடைபெறும் ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் ஆகியவை சீனாவை பிறநாடுகளில் இருந்து தனிமைப்படுத்தியுள்ளன.
- இந்த மாதம் திபெத்திய மாணவர்கள் ஸ்விட்சர்லாந்தின் லொசானில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைமையகத்திற்கு வெளியே, ஒலிம்பிக் வளையங்களில் தங்களை சங்கிலியால் பிணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, "பெய்ஜிங்கை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரமாக அனுமதிப்பது, ஒலிம்பிக் சாசனத்தை கேலிக் கூத்தாக்குகிறது.
- விளையாட்டின் உலகளாவிய நெறிமுறை கொள்கைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
- விளையாட்டுகளில் அரசியல் ஊடுருவியதற்கு வரலாற்று முன்னுதாரணங்கள் உள்ளன. சோவியத் யூனியன், ஹங்கேரி புரட்சியை நசுக்கியதற்கு பதிலளிக்கும் விதமாக, 1956 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் இருந்து மூன்று ஐரோப்பிய நாடுகள் விலகின.
- 1976-இல் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கை தொடர்பான போராட்டத்தால், 20-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க, அரபு நாடுகள் போட்டிகளில் பங்கேற்க மறுத்தன.
- சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததை எதிர்த்து 1980 மாஸ்கோ விளையாட்டுப் போட்டியை 65 நாடுகள் புறக்கணித்தன.
- இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 1984-இல் லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை சோவியத் யூனியன் தவிர்த்தது.
- ஆனால், தற்போதைய நிலையில், அமெரிக்கா கடுமைக் குறைவான புறக்கணிப்பை அறிவித்துள்ளது.
- குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்து, போட்டியை எதிர்பார்த்திருக்கும் வீரர்களுக்கு தண்டனை விதிப்பது சரியான நடவடிக்கையாகக் கருத வில்லை என அது கூறியுள்ளது.
- பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அமெரிக்காவை வழிமொழிந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜீய ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமை மீறல்களைத் தவிர்க்க பெரு நிறுவன ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
- இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில், சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தினார். இது ஊடகங்களில் பரவிய நிலையில், அந்த வீராங்கனை காணாமல் போனார்.
- சீன கட்சிப் பிரமுகர்களை விமர்சிப்பவர்கள் காணாமல் போகும் நிலையில், வீராங்கனை காணாமல் போனது அச்சத்தை ஏற்படுத்தியது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர்கள் கடும் வேதனை அடைந்தனர்.
- இந்த நிலையில், கமிட்டி தலைவர் தாமஸ் பாக், டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாயுடன் 30 நிமிட விடியோ அழைப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது, வீராங்கனை பெங், தான் பாதுகாப்பாகவும், நலமாக இருப்பதாகவும், பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டில் வசிப்பதாகவும் விளக்கினார்.
- இதைத்தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராஜீய ரீதியிலான புறக்கணிப்பை பாக் நிராகரித்தார்.
- மேலும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "அமெரிக்கா, தனது நடவடிக்கைகளுக்கு உரிய விலை கொடுக்க நேரிடும்' எனக் கூறியுள்ளது, விளையாட்டில் புகுந்துள்ள அரசியல் போர் தொடரும் என்பதையே காட்டுகிறது.
- மேலும், பல ஐரோப்பிய நாடுகள் சீனாவை விமர்சித்தாலும், அதனுடனான வர்த்தக உறவுகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அதை நிராகரிக்கத் தயங்குவதாகக் கூறப் படுகிறது.
- மொத்தத்தில், உலகத் தலைமை கொள்வதற்கான போட்டியில், அமெரிக்கா, தன்னுடைய இடத்தை தக்கவைப்பதற்காக, சீனாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த ராஜீய ரீதியிலான புறக்கணிப்பை அறிவித்துள்ளதாகக் கருதப் படுகிறது.
- அதை முறியடிக்க சீனாவும் தனக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் பயன்படுத்தி வருகிறது.
- இதற்கிடையே வளரும் நாடுகள், யார் பக்கம் செல்வதென தெரியாமல் தவித்து வருகின்றன.
- பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நல்லபடியாக நடந்துமுடிந்தாலும், ராஜீய ரீதியிலான புறக்கணிப்புகள் தொடர்ந்தவண்ணம் இருக்கும் என்பதே உண்மை!
நன்றி: தினமணி (30 - 12 - 2021)