- விளையாட்டுத் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்பட்டாலும், உலகின் எல்லா நிகழ்வுகளையும் போலவே இதுவும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல.
- 2021 ஒலிம்பிக் போட்டியில் வீரர்களின் இரண்டு வெளிப்பாடுகள் அதை உணர்த்தியுள்ளன.
- அல்ஜீரிய ஜூடோ வீரர் ஃபெதி நூரின் இஸ்ரேலிய வீரர் தோஹர் பூட்பூலுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
- இதன் காரணமாக ஃபெதி நூரினும் அவருடைய பயிற்சியாளர் அமர் பெனிகெல்பும் அல்ஜீரிய அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப் பட்டது.
- 2019 உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதேபோல் இஸ்ரேலிய வீரருக்கு எதிராக மோதுவதைத் தவிர்த்து ஃபெதி நூரின் விலகியுள்ளார்.
- இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் ஒரு பகுதியாக காஸா பகுதியில் மே மாதத்தில் நடைபெற்ற இருதரப்புத் தாக்குதல்களில் சொத்து இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டன.
- முன்னர் பல முறை நடைபெற்றதைப் போலவே ரம்ஜானை ஒட்டியே இந்த மோதல்கள் நிகழ்ந்தன. இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களைக் காரணம் காட்டியே ஃபெதி நூரின் விலகியுள்ளார்.
- ஃபெதி நூரினுக்கு முன்பாகவே, மியான்மரில் நிலவிவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக, அந்நாட்டு அணிக்காக விளையாடுவதிலிருந்து விலகுவதாக நீச்சல் வீரர் வின் டெட் ஓஓ அறிவித்தார்.
- ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருந்த அவர், நடப்பு ஒலிம்பிக்கிலிருந்து மியான்மர் ஒலிம்பிக் கமிட்டியை விலக்கி வைக்க வேண்டுமென விடுத்த கோரிக்கையை ஒலிம்பிக் கமிட்டி ஏற்கவில்லை.
- 1968-ல் மெக்ஸிகோ ஒலிம்பிக்கின் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் டாமி ஸ்மித்தும் ஜான் கார்லோஸும் பதக்கமளிப்பு விழாவில் ‘கறுப்பின விடுதலை இயக்க’த்தை ஆதரிக்கும் வகையில் கறுப்புக் கையுறை அணிந்து, முஷ்டியை உயர்த்தி நின்றது பரவலாக அறியப்பட்ட ஒலிம்பிக் வீரர்களின் அரசியல் வெளிப்பாடுகளில் ஒன்று.
நன்றி: இந்து தமிழ் திசை (27 - 07 – 2021)