- உலக அளவில் ஐந்தில் ஒருவருக்குக் கேட்கும் திறனில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் 2050-ல் நான்கில் ஒருவர் இந்தச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது, இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
- கடந்த 2019 வரை 160 கோடிப் பேர் தங்களது கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்துள்ளனர். அடுத்து வரும் 30 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.5 மடங்குக்கும் மேலாக உயர்ந்து ஏறக்குறைய 250 கோடிப் பேர் கேட்கும் திறனை இழக்கக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
- 250 கோடியில் 70 கோடிப் பேருக்குத் தீவிரமான சிகிச்சைகள் தேவைப்படும் என்றும் அதற்காகத் தற்போதைய பண மதிப்பில் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக நபர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.97 வரை செலவழிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.73 லட்சம் கோடி அளவுக்குத் தற்போது செலவழிக்கப்பட்டாலும் இந்தப் பிரச்சினை குறித்து இன்னும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதே உண்மை.
- கேட்கும் திறன் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குறைவாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
- கேட்கும் திறன் பிரச்சினைகளைச் சந்திப்பவர்களில் ஏறக்குறைய 80% பேர் ஏழை நாடுகளில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள், அவர்களால் தங்களுக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெற இயலாத நிலை உள்ளது. மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கேட்கும் திறன் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
- கேட்கும் திறனில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நோய்கள், தொற்றுகள், பிறவிக் குறைபாடுகள் மட்டுமின்றி, வாழ்க்கைமுறை மாற்றமும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
- நகர்மயத்தின் அதிவேகமும் தொழிற்சாலைகளின் பெருக்கமும் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்துவதோடு ஒலியளவையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
- அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ஒலியெழுப்புவதும் மாசு என்றே கருதப்படுகிறது. தொழிற்பகுதிகளில் இயந்திரங்களை இயக்குபவர்கள் ஒலியளவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதோடு, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒலி மாசுபாட்டின் பாதிப்புகள் நேராவண்ணம் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டியதும் அவசியமாகும்.
- தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதில் காட்டும் அலட்சியமானது கடுமையான பின்விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த போதிய விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். நகர்ப்புறங்களில் வாகன ஓட்டிகள் ஒலியெழுப்புவதில் சுயக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.
- தனியார் பேருந்துகளில் திரைப்படங்களையும் பாடல்களையும் அதிக ஒலியளவில் ஒலிக்கச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்ல விழாக்கள் தொடங்கி அரசியல் பொதுக் கூட்டங்கள், சமய நிகழ்ச்சிகள் வரை பொதுக் கூடுகைகள் அனைத்திலும் ஒலி மாசுபாடு தவிர்க்கவியலாததாக மாறியிருக்கிறது.
- செல்பேசிகளின் பயன்பாடு காதோடு எப்போதும் நம்மை ஒலிக்கருவிகளோடு இணைத்துவைத்திருக்கிறது. தனிநபர் விழிப்புணர்வு, சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு இரண்டும் சேர்ந்துதான் இந்த உலகளாவிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04-03-2021)