ஓசோன் தினம்
--------
அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்
செப்டம்பர் 16 சர்வதேச ஓசோன் தினமாக 1994 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நாள் மாண்ட்ரியல் நெறிமுறைகள் ( Montreal protocol ) 1987 ஆம் ஆண்டு கையெழுத்தான தினமாகும். இவ்வருட ஓசோன் தினமானது மாண்ட்ரியல் நெறிமுறைகளின் 30 வது ஆண்டு தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மூலம் மாண்ட்ரியல் நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. அதன் வெற்றியினைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன.
முதன் முதலில் 1985 ஆம் ஆண்டு அண்டார்டிகா பகுதியில் ஓசோன் குறைவாக இருந்தமை (70%) கண்டறியப்பட்டது. மேலும் ஆர்டிக் மற்றும் திபெத் பகுதிகளிலும் ஓசோன் குறைவு காணப்படுகின்றது. இனி ஓசோன் அடுக்கினைப் பற்றி அறிந்து கொள்வோமா? ஓசோன் அடுக்கானது சூரியனிலிருந்து புற ஊதாக்கதிர்கள் போன்ற தீய கதிர்களிடமிருந்து நம்மைக் காக்கின்றது. குளோரோ ஃப்ளோரோ கார்பன், ஃப்ரியான், ஹேலஜன்கள் (உதாரணமாக குளோரின், ப்ரோமின், அயோடின்) ஆகியவை வளிமண்டலத்தில் இருந்து தீமை விளைவிக்கவே பிறந்தாற் போன்று புறப்பட்டுச் சென்று ஓசோனைத் துளைத்து எடுத்து விடுகின்றன. மேலும் போட்டான்களாக உடைந்து (Photo disassociation) ஓசோனிற்கு தீமை விளைவிக்கின்றன.
அதாவது ஓசோனை [o3] ஆக்சிஜனாக [o2] உடைக்கின்றன. எஞ்சியுள்ள ஒரு ஆக்சிஜனானது ஹேலஜன்களுடன் குறிப்பாக குளோரின் மற்றும் புரோமினுடன் புற ஊதாக்கதிர்களின் முன்னிலையில் வினைபடுகின்றது. பின் தனித்து விடப்படுகின்றது. அது ஓசோனுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மாபெரும் காரணியாக மாறி விடுகின்றது. சராசரியாக ஒரு குளோரின் அணு ஒரு லட்சம் குளோரின் அணுக்களை அழித்து விடும் தன்மையுடையது. எனவே, குளோரோ ஃபுளோரோ கார்பன் மற்றும் ஹைட்ரோ குளோரோ ஃப்ளோரோ கார்பன் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்த அளவிற்குக் கேடு விளைவிக்கின்றது என்பதை எண்ணி அவற்றைப் பெரும்பான்மையாக உருவாக்கும் மூலங்களான குளிர்பதனப்பெட்டி, குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியது நம்முடைய கடமை அல்லவா?
ஓசோன் என்பது ஆக்சிஜனின் சிறப்பு வடிவம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்பாடு o3 ஆகும். வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவு இருந்த பொழுதிலும் மனித குலத்திற்கு அதன் பங்கு இன்றியமையாததாகும். ஓசோன் படலமானது வளிமண்டலத்தில் 15 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை காணப்படுகின்றது. இந்தப் பகுதி “ஸ்ட்ரேட்டோஸ்பியர்” என்று அழைக்கப்படுகின்றது. 90% ஓசோன் இப்பகுதியில் காணப்படுகின்றது. இதனை எப்படி அளந்திருப்பார்கள் என்ற வினா உங்கள் மனத்தில் எழுந்திருக்கும் அல்லவா? டாப்சன் என்னும் அலகினால் இது அளக்கப்படுகின்றது.
நாம் ஏன் வளிமண்டலத்தின் ஓசோன் அடுக்கினைப் பற்றிக் கவலைப்படுதல் வேண்டும்? அதில் ஓட்டை விழுந்தால் நமக்கென்ன என்று இன்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. ஓசோனில் விழும் ஓட்டை மனித உடல்நலத்திலும் ஓட்டைகளை உண்டாக்கி விடும். தோல் புற்றுநோய், சூரியனின் அதிகபட்ச வெப்பத்தினால் தோல் வெந்து சிகப்பாதல், கண்புரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும். ஓசோன் மெல்லியதாய் மாறுவதால் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
ஓசோன் குறைபாட்டிற்கும் உலக வெப்பமயமாதலுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உலக வெப்பமயமாதலின் காரணமாக இருக்கக்கூடிய கார்பன் -டை-ஆக்சைடு தான் வளிமண்டல அடுக்கான ஸ்ட்ரேட்டோஸ்பியரை குளிர்ச்சிப் படுத்துகின்றது. இந்தக் குளிர்ச்சியானது ஓசோன் அதிகரிப்பிற்கும் துருவப்பகுதிகளில் ஓசோன் துளை விழுவதற்கும் காரணமாகின்றது.
ஓசோன் அடுக்கினைப் பாதுகாப்பதற்கான சர்வதேச வியன்னா ஒப்பந்தம் 1985 ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1988 ல் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டன. ஓசோன் அடுக்கினைப் பாதுகாப்பதில் இது அடிப்படையாக கருதப்படுகின்றது. ஆனால், இது சட்டப்பூர்வமாக ஓசோன் அடுக்கினைப் பாதுகாக்க வழிகாட்டவில்லை. அதற்காகத்தான் மாண்ட்ரியல் நெறிமுறைகள் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் உருவாக்கப்பட்டன. முதல் கூட்டம் பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கில் நடைபெற்றப் பிறகு 1989 ஆம் ஆண்டு ஜனவரி 1ல் நடைமுறைக்கு வந்தது. சர்வதேச முயற்சிகளின் காரணமாக அண்டார்டிகாவில் ஓசோனில் ஏற்பட்ட துளையானது மிக மெதுவாக தன் நிலையை மீண்டும் அடைந்து கொண்டு வருகின்றது.
1992 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு ( United Nations Framework convention on climate change) அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் மே 9 அன்று நடந்தது. பின் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் அதே ஆண்டில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் (Earth Summit) தீர்மானம் ஜூன் 3 முதல் 14 வரை கையெழுத்தானது. இதன் நோக்கமானது வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்கள் ( கார்பன் -டை – ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு) அளவை நிலைப்படுத்துவதும் காலநிலை மாற்றத்தில் மனிதனின் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்பதும் ஆகும். இதில் எந்த ஒரு நாட்டிற்கும் கட்டுப்பாடு மற்றும் காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை. 1992 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு பின்வரும் மாநாடுகளுக்கு வித்திடும் மாபெரும் காரணியாய் அமைந்தது.
1992 ஆம் ஆண்டின் காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டின் தொடர்ச்சியாக ஜப்பானின் கியோட்டோ நகரில் கியோட்டோ நெறிமுறைகள் (Kyoto Protocol) உருவாக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள் அமலுக்கு வந்தது. பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டுமென்றும் குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் கார்பன் – டை- ஆக்சைடின் அளவைக் குறைக்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1992 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டின் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் பாரிஸ் மாநாடு துவங்கியது. ஒருமித்த நிலையானது டிசம்பர் 12 அன்று ஏற்கப்பட்டது. ஒவ்வொரு நாடும் தன்னுடைய அறிக்கையில் தன்னால் நிறைவேற்றப்படும் தீர்மானம், புவி வெப்பமயமாதலைத் தணிப்பதற்கான வழிமுறைகளைத் தெரிவித்தது. எந்த ஒரு நாட்டிற்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன் நிர்ணயிக்கப்பட்டு இருந்த இலக்கினை விட அதிகமாக இருத்தல் வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.
2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எழுந்த கண்டனக்குரல்களின் காரணமாக பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து (Paris Agreement) அமெரிக்கா விலகியது. ஆனால், அதே வேளையில் பாரிஸ் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக்கோலஸ் ஹுலட் 2040 க்குள் படிப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் குறைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 2022க்குப் பிறகு நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். எந்நாட்டினை நாம் பின்பற்ற வேண்டும் என்பதனைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
2016 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ருவாண்டாவின் தலைநகரத்தில் நடைபெற்ற கிகாலி திருத்தத்தின் (Kigali Amendment) மூலம் புவி வெப்பமயமாதலைத் தூண்டும் காரணிகளை குறைப்பதற்கும் ஆதரவு அளிக்கப்படுகின்றது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகள் ஹைட்ரோ ப்ளோரோ கார்பனை (HFC) 2019க்குள்ளும், சீனா 2024 க்குள்ளும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் 2028க்குள்ளும் குறைக்கும்படி முடிவு எடுக்கப்பட்டது. ஏனெனில் ஹைட்ரோ ப்ளோரோ கார்பனானது கார்பன் - டை- ஆக்சைடினை விட ஆயிரம் மடங்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மேலும், உலக வெப்பமயமாதலினை 0.5 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாண்ட்ரியல் நெறிமுறைகளின் 30 வது ஆண்டு தினத்தினைக் கடைபிடிக்கும் இவ்வேளையில் ஓசோன் ஓட்டை குறித்துச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆசானை மதியாத பிள்ளை எங்ஙனம் சரியாக வளராதோ ஓசோனின் ஓட்டையை மதியாத நாமும் அங்ஙனமே வளரத்தலைப்படுவோம் என்பதினை மறந்து விடக்கூடாது.
--------