ஓணம் பண்டிகை தொடங்கிய கோயில்
- ஓணம் பண்டிகைக்கும், நேந்திரம் பழத்துக்கும் பெயர் பெற்ற கேரள மாநிலத்தில் அமைந்துள்ள திருக்காட்கரையப்பன் கோயில், முன் ஜென்ம வினைகள் நீக்கும் தலமாக போற்றப்படுகிறது. ஆவணி மாதம் நடைபெறும் திருவோண உற்சவத்தில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று இறைவனுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுவது தனிச்சிறப்பு.
- தசாவதாரங்களில் ஒன்றான வாமன மூர்த்திக் கென்று வெகு சில கோயில்களே உள்ளன. அவற் றுள் ஒன்று எர்ணாகுளத்தில் இருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மலையாள திவ்யதேசம் திருக்காட்கரையப்பன் கோயில் ஆகும். பெருமாள் தன் திருவடியால் உலகைத் தாவி அளந்த இடம் என்ற பொருள்பட திரு-கால்-கரை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 67-வது திவ்யதேசம் ஆகும். (தாயார் வாத்ஸல்யவல்லி - பெரும் செல்வநாயகி) கபிலர் என்ற மகரிஷி இத்தலத்தில் தவம் புரிந்தார்.
- திருமால் அவர் முன்பு தோன்றி, “யாது வரம் வேண்டும்?” என்று கேட்க, 'கிருத யுகத்தில் மூவுலகு அளந்த வாமன மூர்த்தியாக மகாபலிக்கு சேவை சாதித்த அதே திருக்கோலத்தை நான் சேவிக்க வேண்டும்' என்று கபில மகரிஷி வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி வாமன மூர்த்தியாக திருமால் இத்தலத்தில் சேவை சாதிக்கிறார்.
நேந்திரம் பழம் பிறந்த இடம்:
- ஒரு தனிகர், தன் வாழைத் தோட்டத்து வாழை மரங்கள் விளைச்சல் கொடுக்கவில்லை என்று காட்கரையப்பன் பெருமாளிடம் வேண்டினார். பெருமாளும், வாழைத் தோட்டம் நன்றாக மகசூல் கொடுக்க தனது திருக்கண்களால் அருள்பாலித்தார். ஆனந்தம் அடைந்த அந்த தனிகர், பெருமாளுக்கு தங்க வாழைக்குலையை சமர்ப்பித்தார். அந்த தங்க வாழைக்குலையை இன்றும் சந்நிதியில் வைத்துள்ளனர். பெருமாள் தன் திருக்கண்களால் அருள்பாலித்ததால் ‘நேத்திர பழம்' (நேத்திர என்றால் கண்கள்) என்பது பின்பு நாளடை வில் ‘நேந்திரம் பழம்' என்று மருவியது.
- ஓணம் பண்டிகை தினத்தில் நடைபெறும் நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேந்திரம்பழ வாழைத்தார்களை பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தி வழிபடுகிறார்கள்.
ஓணம் பண்டிகை தொடக்கம்:
- பெருமாள் தன் திரிவிக்ரம அவதாரத்தின்போது இவ்வுலகைத் தாவி அளந்தார். அப்போது அவர் திருவடியால் 2 அடிகள் அளந்து, பின் 3-வது அடியை மகாபலியின் தலை மேல் வைத்து பாதாளத்தில் தள்ளினார். வருடத்துக்கு ஒருமுறையாவது தான் வந்து தன் மக்களை சந்திக்க வேண்டும் என்று மகாபலி, பெருமாளிடம் வேண்டினார். பெருமாளும் ‘ஆவணி மாதம் திருவோண நட்சத்திர தினத்தில் வந்து மக்களைப் பார்’ என்று திருக்காட்கரையில் இருந்து மகாபலிக்கு அருளினார். திருக்காட்கரையில் தொடங்கிய ஓணம் பண்டிகை கேரளா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- திருநெடுந்தாண்டகம் என்னும் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் மகாபலியை “காமருசீர் அவுணன்“ என்று குறிப்பிடுகிறார். ஆசைப்படக் கூடிய குணம் படைத்த அசுரன் (மகாபலி) என்று பொருள். மகாபலி அகங்காரம் படைத்தவன். மேலும் பகவானுடைய சொத்தை திருடியவன் என்று ஞானம் படைத்த எவரும் மகாபலியைக் கொண்டாடுவதில்லை. ஆனால் ஆழ்வார் இங்கு, “மகாபலி வாமன அவதாரத்தை நேரில் தரிசித்ததோடு பகவானுடைய அனைத்து குணங்களையும் அறிந்துள்ளான். அதனால் மகாபலியைப்போல் பாக்கியவான் யாரும் இல்லை” என்று அசுரனைக் கொண்டாடுகிறார்.
- நம்மாழ்வார் தன்னுடைய பிரபந்தமான திருவாய்மொழியில் "உருகுமால் நெஞ்சம்" (9.6.1) என்று தொடங்கி 10 பாசுரங்களால் இத்தல பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளார். “எந்த நெஞ்சை வைத்து பெருமாளை போற்றலாம் என்று வந்தேனோ அந்த நெஞ்சே உருகி விட்டதென்றால் எதைக் கொண்டு அவரை நினைக்க?” என்று பாடினார். பெருமாள் இத்தலத்தில் நம்மாழ்வாருக்குக் காட்டிய குணம் சௌசீல்யம்.
- சௌசீல்யம் என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுடன் இரண்டறக் கலப்பதாகும். பெருமாள் நம்மாழ்வாருடன் கலந்து பரிமாறினார். இப்படி சேஷ - சேஷி (ஆண்டான் -அடிமை) பாவம் மாறாடிப் பரிமாறும்சீல குணம் திருக்காட்கரையில் பெருகுகின்றது என்பதை "போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரையழிக்கும்” என்று தமது ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்னும் நூலில் அழகிய மணவாள பெருமாள் நாயனார் குறிப்பிடுகின்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2024)