TNPSC Thervupettagam

ஓயாத சுயமரியாதைக் குரல்

June 3 , 2024 28 days 72 0
  • நீண்ட ஆயுளைச் சாபம் என்று சொல்பவர்கள் உண்டு. காலத்தால், சிந்தனையால், இயக்கத்தால் தேங்கிப்போனவர்களுக்கு வேண்டுமானால் நீண்ட வாழ்வு பாரமாக இருக்கலாம். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி ஒவ்வொரு நாளும் புதிதாகச் சிந்தித்தவர், தீவிரமாக இயங்கியவர்.
  • 94 ஆண்டு கால வாழ்க்கை வேண்டுமானால் காலம் கொடுத்ததாக இருக்கலாம், அதில் 80 ஆண்டு காலப் பொதுவாழ்வும், இறுதிவரை அவர் எழுதிய எழுத்தும், பேசிய பேச்சும் அவரே வகுத்துக்கொண்டவை. அதற்குப் பின்னணியில் இருந்தது, பள்ளிக் காலத்தில் - குறிப்பாக, இசைப் பள்ளியில் அவர் கண்ட சாதியப் பாகுபாடும், அதை முறியடிக்க உறுதிபூண்ட அவரின் லட்சியவாதமும்தான்.

மாற்றங்களுக்கு முகங்கொடுத்தவர்:

  • காலனியமும், நிலப் பிரபுத்துவமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அரசியலுக்கு வந்து, சமூக ஊடக யுகம் வரையில் அரசியல் செய்தவர் கருணாநிதி. ‘மாணவ நேசன்’ கையெழுத்து இதழ் தொடங்கி, ட்விட்டர், ஃபேஸ்புக் வரை எழுதித் தீர்த்தவர்.
  • ஐந்து முறை ஆட்சி செய்தவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிகக் காலம் பதவிவகித்தவர் என்பதையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டில் எந்த முதலமைச்சருக்கும் இல்லாத சிறப்பு அவருக்கு உண்டு. காலனியத் தாக்கங்கள் வழக்கொழிந்திராத காலம், உலகமயமாக்கலுக்கு முந்தைய ‘லைசன்ஸ் ராஜ்’ காலம், உலகமயமும் தாராளமயமும் தீவிரத் தாக்கம் செலுத்திய காலம் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அவர் தமிழ்நாட்டை ஆண்டுள்ளார்.
  • தனது ஆட்சிக்காலங்களில், சூழலுக்கு ஏற்பத் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் முயற்சிகளை அவர் மேற்கொண்டார். திமுகவின் 1967-76 ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அரசுடைமை, நிலச் சீர்திருத்தம் மூலமாகப் பண்ணையடிமை முறையின் அடிப்படையைத் தகர்க்கும் முயற்சிகள், கிராமப்புறங்களில் சாதி ஆதிக்கத்தின் முதுகெலும்பாக இருந்த கிராம கர்ணம், கிராமத் தலைவர் உள்ளிட்ட பரம்பரைப் பதவிகளை முடிவுக்குக் கொண்டுவந்தது (தமிழ்நாடு கிராமப்புற அலுவலர்கள் பணி விதிகள் - 1974, மே 17 1975 முதல் செயல்படுத்தப்பட்டது), பொது விநியோகத் திட்டத்துக்கான அடிப்படையை வகுத்தது, ஒவ்வொரு 50 கிலோமீட்டருக்கும் ஒரு தொழிற்பேட்டை என்கிற இலக்கோடு செயல்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சி, அரசியல்ரீதியாக மாநில சுயாட்சியை வலியுறுத்த ராஜமன்னார் ஆணையம் என நிலப் பிரபுத்துவத் தாக்கங்களுக்கும், சாதி ஆதிக்க விளைவுகளுக்கும், அதிகாரக் குவிப்புக்கும் எதிரான திட்டங்கள் அக்காலத்தில் செயல்படுத்தப்பட்டன.

புரட்சிகரத் திட்டங்கள்:

  • 1989-91 ஆட்சியில் மகளிருக்கான சொத்துரிமை போன்ற லட்சியவாதச் சட்டங்கள், பெண் கல்வியை ஊக்கப்படுத்தவும், ஏழ்மைக்குத் துணைநிற்கவும், குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும் உதவிய திருமண உதவித்தொகைத் திட்டம், மகப்பேறு காலத்தை அரசின் மருத்துவத் துறையின் கண்காணிப்புக்குள் கொண்டுவர உதவிய மகப்பேறு நிதி உதவித் திட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு எனத் தமிழ்நாட்டின் அடுத்த நிலை வளர்ச்சிக்கான அடிப்படைகள் இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன.
  • உலகமயமாக்கலுக்குப் பிறகான 1996-2001 ஆட்சியில், தமிழர்களின் திறன்களை உலகமயப்படுத்தி, அவர்களுக்கான வாய்ப்புகளை உலகம் எங்கும் உருவாக்கித் தருவதற்கு ஏதுவாக, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கான அடிப்படைகள் வகுக்கப்பட்டன.
  • இந்தியாவிலேயே முதல் முறையாகத் தகவல் தொழில்நுட்பக் கொள்கை வகுக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. சேவைத் துறை, நகர்மயம், உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு வளர்ச்சியடைந்த காலமாகவும் இதனை வரையறுக்க முடியும். உலகமயமாக்கலின் விளைவைத் தமிழ்நாடு முழுமையாக, முதன்மையாகப் பயன்படுத்திக்கொண்டது.
  • 2006-2011 ஆட்சியில் தொழில்முறைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகை, அருந்ததியர் உள் இடஒதுக்கீடு, இஸ்லாமியர் இடஒதுக்கீடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவச எரிவாயு அடுப்பு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், பொது விநியோகத் திட்டத்தில் மளிகைப் பொருள்கள் போன்ற பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சமூகப் பாதுகாப்புச் சூழல் வலுப்படுத்தப்பட்டது. இவ்வாறு காலத்தால் தேங்கிவிடாமல், முற்போக்கான திட்டங்களின் வழியாகக் காலந்தோறும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தவர் மு.கருணாநிதி.

தமிழ்நாட்டின் வளர்ச்சி:

  • 18.09.1955 அன்று ‘திராவிட நாடு’ இதழில், ‘எங்கள் நாடு’ என்கிற தலைப்பில் பேரறிஞர் அண்ணா எழுதிய கடிதத்தில் இந்தியாவில் தொடங்கப்படும் காகித ஆலைகள் வட இந்தியாவில் மட்டுமே தொடங்கப்படுகின்றன; தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது என்கிற வருத்தத்தைப் பதிவுசெய்தார். குறிப்பாக, தென்னிந்தியாவில் சராசரி வருமானம் ரூ.300. வட இந்தியாவில் ரூ.600 என இருந்ததைச் சுட்டிக்காட்டி அக்கடிதத்தை எழுதினார்.
  • ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22இல் இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது (39,512 தொழிற்சாலைகள்). 2021-22ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் ரூ.2,41,131. மத்தியப் பிரதேசம் (ரூ.1,21,594), உத்தரப் பிரதேசம் (ரூ.70,792), பிஹார் (ரூ.49,470) இந்திய சராசரி (ரூ.1,70,801),
  • 1960-61ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வறுமை அளவு 51.7%, குஜராத்தில் 37.4%, பிஹாரில் 49.7%. இந்திய சராசரி 38.5%. 2023ஆம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட பல் பரிணாம வறுமை அளவீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் வறுமை அளவு 2.2%, குஜராத்தில் 11.66%, பிஹாரில் 33.76%, இந்திய சராசரி 14.96%. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டேபோகலாம்!

திராவிடச் சட்டகம்:

  • இதன் பின்னணியில் தமிழ்நாட்டை ஆண்ட எல்லாருக்கும் பங்கு உண்டு. ஆனால், இந்த வளர்ச்சிக்கு அடிப்படை, திராவிட இயக்கத்தின் சட்டகம் (Dravidian Framework). தமிழ்நாட்டு அரசியலை இச்சட்டகத்துக்கு உள்ளாகச் செலுத்தியதில் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் தமிழ்நாட்டு அரசியலைத் திராவிடச் சட்டகத்துக்கு உள்ளாக இயங்கவைத்தவர் அவர்.
  • அதற்கு மிகச் சிறந்த உதாரணம், இடஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பைக் கொண்டுவருவதற்கும், பன்முகப் பண்பாட்டைச் சிதைக்கும் வகையில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடுவதைத் தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மக்கள் துணையுடன் அதனை முறியடித்தவர் கருணாநிதி.
  • அந்த வகையில், தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக் கால அரசியல் தீர்மான சக்தியாக இருந்து, அதன் நவீன கால வளர்ச்சிக்கு வினையூக்கியாகவும், கிரியாவூக்கியாகவும் செயல்பட்டவர் கருணாநிதி.
  • தமிழ் - தமிழ்நாடு என்கிற அரசியலையும், அதற்கெனத் தனித்த பண்பாட்டு அடையாளத்தையும் அவர் தொடர்ந்து நிலைநிறுத்தினார். தமிழ்நாட்டின் சமத்துவச் சிந்தனைக்குச் சான்றாக, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற, கோயிலின் கருவறையில் எல்லாருக்கும் இடம் உண்டு எனச் சட்டம் இயற்றினார்.
  • காவி உடை தரித்தும், கடவுளின் பெயரால் அல்லாமல் மனசாட்சியின் பெயரால், தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்றுக்கொண்ட குன்றக்குடி அடிகளாரை வைத்துச் சட்ட மேலவையில் அச்சட்டத்தை முன்மொழியவைத்தது தனி வரலாறு.

அனைவருக்குமானவர்:

  • பண்பாட்டுரீதியாக மட்டுமின்றி, தமிழர்களுக்கான வாய்ப்பை ஜனநாயகப்படுத்தி, உலகமயப்படுத்துவதிலும் கருணாநிதி தீவிரக் கவனம் செலுத்தினார். ஒருவர் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தத் தடையும் இல்லாமல் சாதிக்க முடியும் என்கிற சூழல் கருணாநிதி காலத்தில் உருவானது.
  • சமத்துவபுரம் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அங்கும் சாதிரீதியாகத் தெருக்கள் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, ஒதுக்கீட்டு இடங்களில் மிகுந்த கவனம் செலுத்தினார்.
  • 1973 அக்டோபர் 23 அன்று ஆரணியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கை ரிக்ஷா ஒழிப்பு போன்றவற்றைப் பாதிக்கப்பட்டோரின் சுயமரியாதையைக் காக்கும் திட்டங்களாக வரையறுத்தார்.
  • வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தது, ஆலய அறங்காவல் குழுக்களில் பட்டியல் சாதியினரும், பெண்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என அரசாணை இட்டது வரை இச்சிந்தனை நீள்கிறது.
  • தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றிய சமகாலத்தில் தோன்றியவர் கலைஞர் மு.கருணாநிதி. அவர் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட அரசியலின் அடிப்படையாக வகுத்துக்கொண்ட லட்சியமாக அதே சுயமரியாதை இருந்தது. அது தமிழ்நாட்டின் சுயமரியாதை!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்