TNPSC Thervupettagam

ஓவியங்களால் ஒரு கெளரவம்

September 29 , 2024 58 days 90 0

ஓவியங்களால் ஒரு கெளரவம்

  • தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ள பெருமக்களைக் கெளரவிக்கும் வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 17.2.2024 அன்று தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘செந்தமிழ்ச் சிற்பிகள்’ அரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த அரங்கத்தில் தமிழ் அறிஞர்கள், முன்னோடி எழுத்தாளர்கள், ஞானபீட, சாகித்ய அகாடமி விருதாளர்கள் உள்ளிட்ட 180 ஆளுமைகளின் ஓவியங்கள் கண்ணாடிச் சட்டகங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்குக் கீழே ஆளுமைகள் பற்றிய சிறுகுறிப்பும் அவர்களின் கையெழுத்துப் பிரதியும் வைக்கப்பட்டுள்ளன. கையெழுத்துப் பிரதி கிடைக்காதவர்களுக்கு அவர்களுடைய முக்கியமான நூலின் அட்டைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
  • இவற்றுடன் ஒரு க்யூ ஆர் கோடு (QR Code) கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் திறன்பேசியில் உள்ள கூகுள் லென்ஸ் மூலமாக ஸ்கேன் செய்தால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையதளப் பக்கத்தில் சம்பந்தப்பட்ட ஆளுமைகள் குறித்த விரிவான தகவல்களை அளிக்கும் பக்கம் திறக்கிறது. அதில் அந்த ஆளுமை குறித்த சற்று விரிவான அறிமுகம், அவர்களின் தமிழ், இலக்கிய/சமூகப் பணிகள், அவர் பெற்ற விருதுகள், சிறப்புகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.
  • ராமலிங்க அடிகளார், உ.வே.சாமிநாதர், சி.வை.தாமோதரனார், விபுலானந்த அடிகள், அயோத்திதாசப் பண்டிதர், பாரதியார், பாரதிதாசன், பெரியார், ப.ஜீவானந்தம், திரு.வி.க., ராஜாஜி, அண்ணா, ம.பொ.சி, மு.கருணாநிதி, சோம சுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்தரனார் என தமிழ் மண்ணில் பிறந்த ஆளுமைகள் அரங்கத்தை அலங்கரிக்கின்றனர். ஜி.யு.போப், ராபர்ட் கால்டுவெல், கமில் சுவலபில், சீகன் பால்கு, வீரமாமுனிவர் என வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களும் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
  • சதாசிவனார், வெ.சாமிநாதனார் போன்ற வரலாற்றாசிரியர்கள், வா.செ.குழந்தைசாமி உள்ளிட்ட அறிவியல் அறிஞர்கள், மா.ராசமாணிக்கனார், மயிலை சீனி, வேங்கடசாமி போன்ற சமயம்/தொல்லியல்/வரலாற்று அறிஞர்கள், குழந்தை இலக்கிய முன்னோடி அழ.வள்ளியப்பா, க.நா.சுப்ரமண்யம், கா.சிவத்தம்பி, உள்ளிட்ட திறனாய்வு அறிஞர்கள், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் உள்ளிட்ட நாடக ஆளுமைகள், க.கைலாசபதி, ஆ.சிங்காரவேலர், வையாபுரியார் உள்ளிட்ட அகராதி/கலைக்களஞ்சியம் தொகுத்தோர், ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட இசை ஆளுமைகள், குன்றக்குடி அடிகளார், செய்குத்தம்பிப் பாவலர் போன்ற மெய்யியல் அறிஞர்கள் என அனைத்துத் துறைகளிலும் செம்மாந்த பங்களிப்பு செய்தோர் இவ்வாறு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
  • அ.மாதவையா, கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், வை.மு.கோதைநாயகி, லட்சுமி, திலகவதி, பூமணி, தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், இமையம், சு.வெங்கடேசன், அம்பை என்று 2023 வரை சாகித்திய அகாடமி விருது பெற்றவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. சுந்தர ராமசாமி, ஆர்.சூடாமணி போன்ற முக்கியமான எழுத்தாளுமைகளின் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. அப்துல் ரகுமான், மு.மேத்தா, கண்ணதாசன், வைரமுத்து போன்ற கவிஞர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
  • சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன், பிரமிள், அ.முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்கள், கவிஞர் வாலி ஓவியம் இல்லை. பத்துக்கும் குறைவான பெண்கள், ஒன்றிரண்டு ஈழத்துப் படைப்பாளிகள் மட்டுமே உள்ளனர். ஆபிரகாம் பண்டிதர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோருக்கு க்யூ ஆர் கோடு மூலம் கிடைக்கும் தகவல்கள் மிகவும் சுருக்கமாக இருக்கின்றன.
  • “பாரதி கிருஷ்ணகுமார், ப.சரவணன், வள்ளிநாயகம் ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் குழு ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். முதற்கட்டமாக 180 சான்றோர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 20 பேரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. ஓவியர்கள் வள்ளிநாயகம், கோபி ஆகியோர் தலைமையிலான இரண்டு குழுவினர் ஓவியங்களை வரைந்துள்ளனர்” என்கிறார் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் காமாட்சி.
  • இந்த அரங்கத்துக்குத் தினமும் சராசரியாக 500-600 பேர் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதைக் காண முடிந்தது. போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் இது பயனுள்ளதுதான். ஆனால், இதில் உள்ள விடுபடல்கள் குறித்துக் கேட்டபோது, “இந்த அரங்கில் சேர்க்கப்பட வேண்டிய ஆளுமைகளைப் பலரும் பரிந்துரைக்கின்றனர். அவற்றைத் தேர்வுக் குழுவினர் பரிசீலித்துவருகின்றனர். நூலகத்தில் வைக்கப்பட வேண்டிய நூல்களைப் போல் இந்த அரங்கில் இடம்பெற வேண்டிய சான்றோரின் எண்ணிக்கையையும் வரம்புக்குள் அடக்கிவிட முடியாது” என்கிறார் காமாட்சி.
  • “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கத்திற்குள் ஓவியங்களாக வைக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் உருவாக்கிய இலக்கியங்கள்தான், இன்றைய தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி. இவர்களின்றித் தமிழ் மொழி இல்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடையாளமாக இப்போது செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம் மாறியிருக்கிறது” என்கிறார் அரங்கத்தைப் பார்வையிட்ட எழுத்தாளர் இமையம். இந்த வார்த்தைகளிலிருந்து இந்த அரிய முன்னெடுப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்