- கச்சத்தீவு தமிழகத்தின் பூர்விக சொத்து. அதாவது, அது ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் பாரம்பரிய சொத்து. அது பசுமை நிறத்தில் தெரிந்ததால், அதைப் "பச்சைத் தீவு' என்று சொல்லி காலப்போக்கில் அப்பச்சைத்தீவு "கச்சத்தீவு' ஆகியது. "கச்சம்' என்றால் ஆமை. அதனாலும் இதற்கு கச்சத்தீவு என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது சில தமிழறிஞர்களின் கருத்து. அன்றைய ஜனசங்க உறுப்பினர் வாஜ்பாய், கச்சத்தீவின் பழைய பெயர் "வாலித் தீவு' என்று கூறினார். அது வாலி வதம் நடந்த இடம் என்றும் அவர் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. இப்படிப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன.
- ராமேசுவரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்திலுள்ள குட்டித் தீவு இது. இதன் பரப்பளவு 285 ஏக்கர். இதைப் புரிந்துகொள்ள வேண்டுமனால், நமது தஞ்சைப் பெரிய கோயில் 44 ஏக்கர். அதைவிட சுமார் ஆறு மடங்கு பெரியது இத்தீவு. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 14 ஏக்கர் பரப்பளவில்தான் உள்ளது. இவற்றோடு ஒப்பிட்டால் கச்சத்தீவு ஒரு கணிசமான பரப்பளவுள்ள தீவுதான்.
- சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ராபர்ட் பாக் பெயரை நினைவுகூரும் வகையில் கச்சத்தீவு பகுதிக்கு பாக் நீரிணை எனப் பெயரிடப்பட்டது. கச்சத்தீவைச் சுற்றிலும் மீன்வளம் அதிகம். இப்போது அப்பகுதியில் அதிகமாக மணல் சேர்ந்து வருகிறது. அதனால் கச்சத்தீவு பகுதியின் ஆழமும் குறைந்து வருகிறது. முன்பு 10 மீட்டராக இருந்த ஆழம், இப்போது நான்கு மீட்டராகிவிட்டது. காலப்போக்கில் இது இன்னும் குறையுமானால், ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவுக்கு நடந்தே போய்விடலாம்.
- நம்மை போலவே இலங்கையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக இருந்த நாடு. அங்கு குடியேறிந்த ஆங்கில பிரபுக்கள், அங்கிருந்த மலைப் பகுதிகளில் இங்கிலாந்துக்குத் தேவையான தேயிலைப் பயிரை உற்பத்தி செய்யத் திட்டமிட்டார்கள். இலங்கையின் வடக்குப் பகுதியான மலைப் பிரதேசங்களில் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்களை அமைத்தார்கள். அவற்றில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களைப் படகுகளில் ஏற்றிச் சென்றனர். இப்படித்தான் இலங்கை மலையகப் பகுதி தேயிலைத் தோட்டங்களாக மாறின.
- இலங்கை சுதந்திரம் பெறும்வரை இலங்கையில் யாழ் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கோடு இருந்தார்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு சிங்களர்கள் விழிப்புணர்வு பெற்றனர். சிங்களர்களின் மக்கள்தொகை இலங்கையில் 1 கோடியே 5 லட்சம். யாழ் தமிழர்களின் மக்கள்தொகை 35 லட்சம். இவர்களில் இஸ்லாமியர்களும் உள்ளனர். பெரும்பான்மையாக இருந்த சிங்களர்கள், சிறுபான்மை தமிழர்களை ஒதுக்கத் தொடங்கினர்.
- தமிழ்மொழி இலங்கையில் ஆட்சிமொழி நிலையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. தமிழர்களின் கோயில்கள் பல சிங்களர்களால் இடிக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் சிங்களர்களுக்கே அதிகம் கிடைத்தது. கல்விக்கூடங்களில்கூட தமிழர்களுக்கு இடம் கிடைப்பது சிரமமானது.
- சிங்களர்கள் மதத்தால் பெளத்தர்கள்; தமிழர்கள் மதத்தால் சைவ ஹிந்துக்கள். இனத்தாலும் மதத்தாலும் இருவேறாகிவிட்ட இவர்களை, இணைப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. இந்தியாவில் நேருஜியின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியின் ஆட்சி இரு ஆண்டுகள் மட்டுமே இருந்தது. அப்போது இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவுடன் சாஸ்திரி செய்துகொண்ட ஒப்பந்தப்படி, 9 லட்சத்து 75 ஆயிரம் மலையகத் தமிழர்கள் இருந்தார்கள்.
- அவர்களில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. மூன்று லட்சம் மலையகத் தமிழர்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்தது. அத்தமிழர்களுக்கு மட்டுமே குடியுரிமை தரப்பட்டது. மீதமுள்ள பதினொரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடற்றவர்களாக நீடிக்கும் நிலை உருவானது.
- இந்த நிலையில்தான் 1974-இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ - இந்திரா காந்தி ஒப்பந்தம் ஒன்று கையொப்பமானது. இலங்கைக்குச் சென்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, பண்டாரநாயகாவிடம் பாகிஸ்தான், இலங்கையில் விமானதளம் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கு, கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தருமானால், பாகிஸ்தானை விமானதளம் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று பண்டாரநாயகா கூறினார்.
- அதனால்தான், கச்சத்தீவு இலங்கைக்குத் தரப்பட்டதாக பிரதமர் இந்திரா காந்தி குறிப்பிட்டார். கச்சத்தீவு தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காகவே அது இலங்கைக்குத் தரப்பட்டதாகக் கூறினார். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது மிகப்பெரிய தவறு என்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருமே கவலையோடு அன்றைக்குப் பேசியது உண்மை.
- இதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களோ, உண்ணாவிரதப் போராட்டங்களோ, கண்டன ஊர்வலங்களோ, கடையடைப்புகள்ளோ, பதவி விலகல்களோ எதுவுமே அன்றைக்கு தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் நடைபெறவில்லை என்பதும், நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்து தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்குக் காட்டினார்கள் என்பதும் உண்மை. அந்த அழுத்தம் மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியையும் தரவில்லை. அநேகமாக மத்திய அரசும், மாநில அரசும் கச்சத்தீவை மறந்துவிட்டதாகவே ஆனது என்று சொன்னால் தவறில்லை.
- கச்சத்தீவு தமிழ்நாட்டின் பாரம்பரிய சொத்து. கி.பி. 1605-இல் மதுரை திருமலை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரசருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி அது. கச்சத்தீவு மட்டுமல்ல, பக்கத்தில் உள்ள குத்துக்கால் தீவு, மண்ணாலி தீவு, குருடி தீவு, நடுத்தீவு, பள்ளித் தீவு மற்றும் 69 கடற்கரை கிராமங்களும் ராமேசுவரம் தலைநகரமும் சேதுபதி மன்னருக்குத் தரப்பட்டன.
- ராமேஸ்வரம் கோயில் வழிபாட்டுக்குத் தேவையான மலர்கள் கச்சத்தீவு நந்தவனத்தில் இருந்துதான் வந்தன. கச்சத்தீவைச் சுற்றிலும் அன்றைக்கு மீன்பிடி தொழிலைவிட, சங்குகளை எடுக்கும் தொழில்தான் சிறப்பாக நடந்து வந்தது. விக்டோரியா மகாராணி தனது பிரகடனத்தில், கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாகவே குறிப்பிட்டிருந்தார் என்பதை, இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி. பியாரீஸின் கடிதத்திலேயே காணலாம்.
- இலங்கை வெளியிட்டுள்ள தேசப்படத்தில் கச்சத்தீவு என்ற நிலப்பகுதியே இல்லை. ஆனால், இந்திய தேசப் படத்தில் நமது பகுதியாக 1974 வரை கச்சத்தீவு இருந்தது. இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அந்நிய நாட்டுக்கு மத்திய அரசு கொடுக்க முடியாது. ஒரு மாநிலத்தின் பரப்பளவை மத்திய அரசு குறைக்கலாம், கூட்டலாம். ஆனால், ஒரு தேசத்தின் பரப்பளவைக் குறைக்க அல்லது கூட்ட மத்திய அரசுக்கு உரிமையில்லை. கச்சத்தீவைத் தாரைவார்த்த காரணத்தால், இந்திய தேசப் பரப்பளவு குறைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது.
- 1991 ஆகஸ்டு 15-இல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, "1974-இல் இலங்கைக்கு அநீதியாக வழங்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப் பெற இந்த நாளில் உறுதி பூணுவோம். இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால், அதற்காக போராடவும் தயாராவோம்' என்று வீரமுழக்கம் செய்தது நினைவுகூரத்தக்கது. அதன் பிறகு, இந்த ஆண்டு, ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று தான் பாரத பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டார்.
- இம்மாதம் (ஆகஸ்டு) 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. இலங்கை கடல்படை, தமிழக மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்வதும், சிறை வைப்பதும், சித்ரவதை செய்வதும் வழக்கமான நடவடிக்கைகளாக நீண்டு வருகிறது என்பதையும் பிரதமர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
- சென்ற வருடம் இலங்கைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு இந்தியா சார்பில் கட்டப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு அர்ப்பணித்தார். அத்துடன், இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவையும் மீட்க வேண்டும் என்று பிரதமர் கூறியபோது தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் வந்ததாகவே கருதப்பட்டது.
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது வெறும் ஒப்பந்தம் மட்டுமே தவிர, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அது வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டதும் தமிழக மீனவர்களுக்குத் தைரியத்தைக் கொடுத்துள்ளது. தமிழக முதல்வர் அது சட்டமல்ல; வெறும் ஒப்பந்தம் என்கிறார். பாரத பிரதமர் கச்சத்தீவை மீட்க குரல் கொடுத்திருக்கிறார். இத்தருணமோ இலங்கை பொருளாதார ரீதியில் பிற நாடுகளின் உதவிக்காக காத்துக் கொண்டிருக்கிற பரிதாபகரமான தேசமாகிவிட்டது. இந்தியா, ராணுவ ரீதியாக கச்சத்தீவை மீட்கப் போகிறதா, பேச்சுவார்த்தை மூலமாக மீட்கப் போகிறதா என்பதல்ல பிரச்னை, கச்சத்தீவை மீட்டாக வேண்டும்!
நன்றி: தினமணி (31– 08 – 2023)