- கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் போது, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாரத மாதாவின் அங்கமாகிய கச்சத்தீவு இலங்கைக்குக் கையளிக்கப்பட்டது” எனும் விமர்சனத்தை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழகத் தலைவர்கள் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
- இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்சினை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இருக்கிறது. 1920களில், ராமநாதபுரம் ராஜாவுக்குக் கச்சத்தீவில் உள்ள அதிகாரத்தைக் காரணம் காட்டி, பிரிட்டிஷ் இந்திய அதிகாரிகள் இந்தியாவுக்குக் கச்சத்தீவில் உள்ள உரிமையை நிறுவியிருக்கிறார்கள். அப்போது கச்சத்தீவுப் பகுதியை இந்திய, இலங்கை மீனவர்கள் இருவருமே பயன்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தொடர்ந்து இலங்கை தரப்பு கச்சத்தீவு உரிமையை வலியுறுத்திவந்தது.
- இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில், தெற்காசியப் பிராந்திய அரசியல் காரணங்களுக்காக இந்தத் தீவு 1974இல் இலங்கைக்குக் கையளிக்கப்பட்டது. அப்போதும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சியில் இருந்தது. இலங்கையில் தனது அரசின் செல்வாக்கைத் திடப்படுத்திக் கொள்ள இலங்கையின் நீண்ட நாள் கோரிக்கையான கச்சத்தீவு உரிமையை இந்திரா காந்தி விட்டுக்கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். இந்த ஒப்பந்தம் நிகழ்ந்த அதே ஆண்டில்தான் ‘சிரிக்கும் புத்தர்’ அணுகுண்டுச் சோதனையை இந்திரா தலைமையிலான அரசு மேற்கொண்டது.
- இதனால் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு அன்று அவசியமானதாக இருந்தது. கச்சத்தீவைக் கையளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. நேரடியாக அதற்கான ஒப்பந்தம்தான் விவாதத்துக்கு வந்தது. அதேவேளையில், அந்த ஒப்பந்தத்தின்படி அங்கு தமிழக மீனவர்களுக்கு ஏற்கெனவே உள்ள உரிமைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், புனித அந்தோணியார் கோயில் வழிபாட்டு உரிமையும் உண்டு எனச் சொல்லப்பட்டது.
- ஆனால், 1976இல் நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லைகளை வரையறுக்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், தொடர்வதாகச் சொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சாசனக் கூறு 368க்குப் பாதகமானதாக இந்தக் கச்சத்தீவு ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது; சர்வதேசக் கடல் எல்லைகளை வகுக்கும் ஐநாவின் 1958 ஜெனீவா ஒப்பந்தத்தையும் மீறிய செயல்பாடாகவும் கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைகள் சரிசமமாகப் பிரிக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறது ஐநா ஒப்பந்தம். ஆனால், கச்சத்தீவு தலைமன்னாரிலிருந்து 18 கடல் மைல் தொலைவிலும் ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் உள்ளது.
- கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் நவீன மீன்பிடி முறையால் மீன் வளம் பாதிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதற்கு அப்பாற்பட்டு இலங்கை இனப் போர்க் காலக்கட்டத்தில் தமிழர்கள் மீதான துவேஷத்தின் காரணமாகத் தமிழக மீனவர்களும் பலியானார்கள். மீனவர்களுக்கு எதிரான இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு பெரும்பாலும் கச்சத்தீவு பகுதியிலேயே நடத்தப்பட்டதாகச் சொல்லப் படுகிறது.
- எல்லாவற்றுக்கும் மேல் இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு நிலத்தை மீட்க வேண்டும் என்பது அரசின் கடமையாகும். தமிழக அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தப் பிரச்சினையை மாநில, மத்திய அரசுகள் அணுகி ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழக உரிமையை நிலைநாட்ட வேண்டும்!
நன்றி : இந்து தமிழ் திசை (24– 08 – 2023)