- கடந்த ஓராண்டில் கச்சா எண்ணெய் விலை சுமார் 40% குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கடந்த ஓராண்டாக (2022 மே மாதம் முதல்) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102- ஐ ஒட்டியும் டீசல் ரூ.94-ஐ ஒட்டியுமே நிலவி வருகிறது.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இவற்றின் விலைகள் உயர்வது வழக்கம். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதிர்ச்சியால் கச்சா எண்ணெய் விலை உடனடியாக கடுமையாக உயர்ந்தது. ஆனாலும், ஜூன் 2022-ல் பீப்பாய் 112 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஓராண்டாக தொடர்ந்து இறங்கி, ஜூன் 2023-ல் 73 டாலர் என்கிற அளவுக்கு குறைந்திருக்கிறது. இது சுமார் 40% சரிவு ஆகும். ஆனாலும் இன்னும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
- இதுதவிர, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்திருக்கும் காரணத்தால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் பல தடைகளை விதித்தன. ஆனாலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முன்வந்தது. இதனால் பீப்பாய்க்கு 10 முதல் 12 டாலர் வரை குறைத்துக்கொடுக்கிறது ரஷ்யா.
- சவுதி அரேபியா, குவைத், ஈராக், மெக்சிகோ, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்காபோன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த அளவுகளை குறைத்து, இந்தியா இப்போது ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இதனாலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மூலப்பொருள் செலவுத் தொகை குறைந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் லாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன.
- பெட்ரோல், டீசல் விலை குறையவாய்ப்பிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்பு சொன்னார். ஆனால் கச்சா எண்ணெய் விலை இன்னும் கொஞ்சம் நிலையானதும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசுதானே குறைக்க வேண்டும். பிறகு அந்தத் துறைக்கான அமைச்சர் ஏன் இப்படிச் சொன்னார் என்று சிலருக்கு வியப்பாக இருக்கலாம்.
- 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங்பிரதமராக இருந்தபோது, முதன்முதலாக பெட்ரோல் விலையை அவற்றை சுத்திகரித்து விநியோகிக்கும் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களான (ஓஎம்சி-OMC) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகியவையே முடிவு செய்து கொள்ளஅனுமதி அளிக்கப்பட்டது.
- அதன் பின் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சாஎண்ணெய் விலை மாற்றங்களை ஒட்டி பெட்ரோல் விலைகள் தொடர்ந்து மாற ஆரம்பித்தன.
- பிறகு, 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல் விலைகளைப் போலவே டீசல் விலையையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தார். இறக்குமதி, சுத்தகரிப்பு மற்றும் விற்பனை செய்யும் ஓஎம்சி-கள் டீசல் விலையையும் முடிவுசெய்ய ஆரம்பித்தன.
- அவற்றின் விலையை அரசு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தபோது மத்தியஅரசுக்கு மானியம் என்ற வகையில் செலவு அதிகரித்துக் கொண்டேபோனது. அதைத் தவிர்க்க.அவை ‘டி கண்ட்ரோல்’ செய்யப்பட்டன.
- வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைப் போல, 1976-ல் Esso, Burmah-Shell மற்றும் Caltex ஆகிய இந்தியாவில் இயங்கிய 3 வெளிநாட்டு பெட்ரோல், டீசல் நிறுவனங்களும் அரசுடமை ஆக்கப்பட்டன. அவைதான் இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் என்ற தற்போதைய ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்கள்.
- பிறகு காலப்போக்கில் அந்த நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து தனியார்களுக்கு விற்கப் பட்ட காரணத்தால், அவை அரசுக்கு மட்டுமே சொந்தமான நிறுவனங்களாக இல்லாமல் போனது.
- தற்சமயம், ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் நிறுவனங்களின் மொத்த பங்குகளில் முறையே, 51.5%, 52.98% மற்றும் 54.9% பங்குகள் மட்டுமே மத்திய அரசுவசம் இருக்கின்றன. மீதிப் பங்குகளை, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பரஸ்பர நிதிகள், மக்களில் சிலர் வைத்திருக்கிறார்கள்.
- சரி பாதிக்கும் மேல் பங்குகளை அரசு வைத்திருந்தாலும் தனியார்களுக்கும் சொந்தமான நிறுவனங்கள் அரசின் நிர்பந்தம் காரணமாக விலையைக் குறைத்து நட்டப்பட்டால், முன்பு செய்ததைப் போலஅந்த நட்டத்தை அரசு ஈடு செய்ய வேண்டிவரும். எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓர் காலாண்டிலேயே சில ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளன.
- தவிர்க்கமுடியாத தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட எரிபொருட்களின் உயர்விலை எளிய மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களுக்கு நேரடியாக சிரமம் தருகிறது. மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இந்திய பொருளாதாரத்திற்கு அது வேறுவிதங்களிலும் சிரமங்களை கொடுக்கிறது.
- சில மாதங்களுக்கு முன்பே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்திருக்க முடியும். குறைந்த பட்சம், வேறு காரணங்களுக்காக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வதற்குள் இப்போதாவது அவசியம் குறைக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (19 – 06 – 2023)