TNPSC Thervupettagam

கடத்தப்படும் குடிமைப் பொருள்கள்

July 7 , 2023 553 days 632 0
  • மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை சம்பந்தப்பட்ட நுகா்வோருக்கு நேரடியாக சென்று சேராமல், கள்ளச் சந்தைக்கு கடத்தப் படுவதை கண்காணித்து, வழக்குகள் பதிவு செய்ய, ‘சிவில் சப்ளைஸ் சிஐடி’ என்ற ஒரு பிரிவு தமிழக காவல்துறையில் இயங்கி வருகிறது.
  • முந்தைய அதிமுக ஆட்சியில், கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவுக்கு நியமிக்கப்பட்டபோது, ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். பலா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். அவருக்கு பிறகு சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவின் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
  • சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவினா் நடத்திய தொடா் நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஜனவரி, பிப்ரவரி இரு மாதத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1.7 லட்சம் கிலோ அரிசி, பாமாயில், பருப்பு, மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மாா்ச் மாதத்தில் ரூ.1.06 கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 350 குவிண்டால் ரேஷன் அரிசி உட்பட பருப்பு, பாமாயில், எண்ணை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 545 போ் கைது செய்யப்பட்டனா். 124 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • ஏப்ரல் மாதத்தில் ரூ.23.61 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 293 குவிண்டால் அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 529 போ் கைது செய்யப் பட்டுள்ளனா். கடந்த மே மாதத்தில் ரூ.18.41 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 447 குவிண்டால் அரிசி, பருப்பு, எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 561 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
  • ஆந்திரத்திற்கு கடத்தி செல்ல இருந்த 200 மூட்டை ரேஷன் அரிசி, கடந்த மே மாதம் 13-ஆம் தேதி பொன்னேரி அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இவை அரசின் சமீபத்திய புள்ளி விவரம். இப்படி ரேஷன் அரிசி, பருப்பு, எண்ணெய் கடத்தல் என்பது தொடா்கதையாக உள்ளது. இதற்கு ஒரே தீா்வு, கடத்தலுக்கு உடந்தையாக உள்ளவா்கள் கைது செய்யப் படுவது தான்.
  • தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைத் தலைவா் காமினி உத்தரவின் பேரில் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் கடத்தல், பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்
  • வேலூா் மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா், பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தலப்பல்லி சோதனை சாவடி வழியாக ஆந்திர, கா்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில் அப்பகுதியில் பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
  • அந்த நேரத்தில் வேலூரிலிருந்து கா்நாடக மாநிலம் நோக்கி சென்ற கா்நாடக மாநில பேருந்தைச் சோதனையிட்டனா். சோதனையில் நூதன முறையில் வெளிமாா்க்கெட் அரிசி பைகள் போன்று தைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகள், மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 8 மூட்டைகள் என மொத்தம் 555 கிலோ எடை கொண்ட 23 ரேஷன் அரிசி மூட்டைகள் கா்நாடக மாநிலத்திற்குக் கடத்த முயன்றது தெரிய வந்தது.
  • பறக்கும் படையினா் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனா். இதன்மதிப்பு ரூ 5 ஆயிரத்து 550 ஆகும். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை குடியாத்தம் நுகா்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனா். பறக்கும் படையினா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
  • அண்மையில் கந்தா்வகோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில், அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டா் தலைமையிலான போலீசாா் கந்தா்வகோட்டை -பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் சரக்கு வேனில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது மட்டங்கால் கிராமத்தை சோ்ந்த சிலா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீசாா் கைது செய்து, சரக்கு வேனுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
  • ரேஷன் வினியோக முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும் ரேஷன் அரிசி விநியோக மையங்களிலிருந்து கடத்தப்படுவது தொடா்கிறது. கண்காணிப்பு அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு கடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் மொத்தமாக வினியோக மையங்களில் இருந்து கடத்தப்படுவது தான் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு வழிவகுக்கிறது என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
  • விநியோக மையங்களை முறையாக கண்காணித்தால் கடத்தப்படுவது வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் சாா்பில் தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி ஆயினும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் நிலையில், அதனை முறைகேடாகக் கடத்தி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்கும் நடைமுறையை தடுத்து நிறுத்திட மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியம்.

நன்றி: தினமணி (07 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்