- கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருளாதார சேவைகளில் வங்கிச் சேவையும் ஒன்றாகும். பொருளாதார இயக்கத்தின் அச்சாணியான வங்கிகளின் செயல்பாடுகளை நோய்த்தொற்று காலத்தில், தேவையான வகையில் முறைப்படுத்தி வழிநடத்த, பல அவசரகால நடவடிக்கைகள் ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்டன.
- பல்வேறு பொருளாதார நிகழ்வுகளின் தொடர் ஓட்டத்தைப் பாதுகாத்து உறுதி செய்வது, வங்கி வாடிக்கையாளர்களின் அன்றாட பண தேவைகளை பூர்த்தி செய்வது, கடனாளிகள், கடனை திருப்பி செலுத்தும் வழிமுறைகளை மாற்றி அமைப்பது போன்ற செயல்பாடுகள், இந்த நடவடிக்கைகளின் முக்கிய அங்கங்களாக, ரிசர்வ் வங்கியால் முன்னிறுத்தப்பட்டன.
- இருநூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய தனிமைப்படுத்தப்பட்ட குழு, முழு பொது முடக்க காலத்தில், இந்த பிரத்யேகப் பணிகளைத் தளர்வின்றி தொடர்ந்து நிறைவேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வாராக்கடன்
- தொடர் பொது முடக்கத்தால், வங்கியில் கடன் பெற்ற தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதனால், அவற்றின் பண சுழற்சி முறை நின்று போனது.
- அத்துடன், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் மாதாந்திர வருமானமும் கேள்விக்குறியானது. இதன் எதிரொலியாக, வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்களும், வருமானம் தடைப்பட்ட மற்ற கடனாளிகளும், வங்கியிலிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான தவணைகளை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை உருவானது. இது போன்ற சூழ்நிலை, பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
- தொண்ணூறு நாள்களுக்கு மேல், திருப்பி செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் கடன் கணக்குகள், வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துவிடும். அதனால், கடன் வழங்கிய வங்கி, கடனாளி ஆகிய இருவரும் பல இடர்ப்பாடுகளை சந்திக்க நேரிடும்.
- வங்கியைப் பொருத்தவரை, வாராக்கடனால் ஏற்படும் பாதிப்பு, லாபக் கணக்கு முதல் மூலதனக் கணக்குவரை நீளும்.
- கடனாளியைப் பொருத்தவரை, கடனை உரிய காலத்தில் கட்டத்தவறியவர் என்ற எதிர்மறை குறிப்பு, "சிபில்' போன்ற கடன் தர நிர்ணய அமைப்புகளின் பட்டியலில் பதிவேற்றம் ஆகும். அதனால், நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறும் வாய்ப்பைக் கடனாளி இழக்க நேரிடும்.
- இதுபோன்ற எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க, தொழில் கடன், தனி நபர் கடன்களுக்கான வசூல் முறையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மொராட்டோரியம்
- இந்த சூழ்நிலையில், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் வழங்கிய கடன் தவணை வசூல் தேதிகளை தள்ளிப் போடவேண்டிய (மொராட்டோரியம்) அவசியம் ஏற்பட்டது.
- முதல் கட்டத்தில், கடந்த மார்ச் 1}ஆம் தேதி அன்று வசூல் நிலையில் இருந்த கடன்கள் அனைத்திற்கும், வசூல் தேதி மே மாத இறுதிவரை தள்ளிப் போடப்பட்டது.
- எதிர்பார்த்தபடி, நிலைமை சீராகாததால், இரண்டாம் கட்ட நடவடிக்கையில், கடன் வசூல் தேதி ஆகஸ்ட் மாத இறுதிவரை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
- தவணை செலுத்துவதற்கான வசூல் தேதி தள்ளிப் போடப்பட்டாலும், அதற்குரிய வட்டி தொகை, கடன் நிலுவைத் தொகையோடு சேர்ந்து கொண்டுதான் இருக்கும்.
- காலம் தாழ்த்தி கடனைத் திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்டிருக்கும் இந்தச் சலுகை, குறுகிய கால நோக்கு கொண்டதாகும். கடனாளிகளின் பொருளாதார நிலைமை சீரடையும் வரை, கொவைட் 19-ஆல், வியாபார ரீதியாக பாதிப்படைந்த சில கடனாளிகளால் ஆகஸ்ட் 31}க்கு பிறகும்கூட, கடன் தவணைகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
- இந்த நிலைமையை சமாளிக்கத் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி, மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தது.
- அதன் எதிரொலியாக, கடனாளிகளின் கடன் தவணைகளை தள்ளிப்போடும் நீண்ட கால திட்டத்திற்கான வழிமுறைகள், ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை அறிக்கை மூலம் அண்மையில் வெளியிடப்பட்டன.
கடன் மறு சீரமைப்பு
- "ஒரு முறை கடன் மறு சீரமைப்பு' என்ற இந்தத் திட்டத்தின்படி, கொவைட் 19 சூழ்நிலையால், வியாபாரம் பாதித்த பெரிய தொழில் நிறுவனங்களும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் பெரிதும் பயனடையும் என்பதில் ஐயமில்லை.
- கடன் மறு சீரமைப்பு வழிமுறைக்கு உள்படுத்தப்பட்ட கடன் கணக்குகளுக்கு, வட்டி விகிதக் குறைப்பு, நிலுவையில் இருக்கும் கடன் தொகைக்கான தவணை காலம் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிப்பு ஆகிய சாத்தியக்கூறுகள், வங்கிகளால் பரிசீலிக்கப்படும்.
- பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கணக்குகள், வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படமாட்டாது என்பது, வங்கி மற்றும் கடனாளிக்கு சாதகமான ஒரு நடவடிக்கை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
- ஆகஸ்ட் 31 வரை, கடன் தவணை தள்ளி வைப்புக்கு உள்படுத்தப்பட்ட கணக்குகளில், 50 சதவீதம்வரை, கடன் மறு சீரமைப்புத் திட்டத்திற்குள் புகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
- அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு உதவும் திட்டம் என்று கருதப்பட்டாலும், இந்த திட்டத்திற்குள் பல விபரீதங்கள் ஒளிந்திருக்கின்றன என்றும் கருதப்படுகிறது.
- வங்கிகளைப் பொருத்தவரை, மறு சீரமைப்பு கடன் தொகையில் 10 சதவீதம் லாபக் கணக்கிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- இதனால், நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலைமை மேலும் பலவீனமடையும்.
- கடன் பராமரிப்பு, மேற்பார்வை, வசூல் ஆகியவற்றில் திறன் குறைந்த சில வங்கிகளின் வாராக்கடன்கள், இதன் மூலம், மேலும் பல மடங்கு அதிகரித்து, அவற்றின் மூலதன தேவைக்கு மத்திய அரசை நாட நேரிடும். அந்தத் தொகையை, வரியாக பொதுமக்கள் சுமக்க நேரிடும்.
- ஆனால், ஒரு விஷயம். ஏற்கெனவே நன்கு இயங்கி, கொவைட் 19 சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த வசதி பொருந்தும்.
- அது போன்ற நிறுவனங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட வங்கிகளையே சாரும். ஒரு கடன் கணக்கு, வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, தகுதியற்ற கடன் கணக்குகள், மறு சீரமைப்புப் பட்டியலில் தவறாக சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
வலி நிவாரணி
- இது போன்ற பெரும் தவறுகள், 2009’ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட "கடன் மறு சீரமைப்பு' திட்டத்தின்போது நிகழ்ந்தது என்பதுதான், மேலே குறிப்பிட்ட கருத்துக்கு காரணமாகும்.
- இந்தக் காலகட்டத்தில் உயிரோட்டம் இல்லாத, பல லட்சம் கோடி அளவிலான தரமற்ற கடன்கள், மறுசீரமைப்புத் திட்டத்திற்குள் புகுத்தப்பட்டன. இதனால், கடனாளிகளின் கடன் வரலாறு புனிதம் அடைந்து, அவர்கள் மேற்கொண்டு கடன் பெறும் வசதியைப் பெற்றார்கள்.
- அத்தகையவர்களின் பெருமளவிலான கடன் தொகைகள், 2017ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்ட பிரத்யேக ஆய்வில் வெளிக்கொணரப்பட்டு, அவை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டன என்பது வரலாறு ஆகும்.
- "கடன் மறு சீரமைப்புத் திட்ட'த்தை அமல்படுத்துவதில் 2009ஆம் ஆண்டில் நடந்த தவறுகள் மீண்டும் அரங்கேறிவிடக்கூடாது என்பதில் வங்கி நிர்வாகங்களும், ரிசர்வ் வங்கியும் மிக கவனமாக இருக்க வேண்டும்.
- "கடன் சீரமைப்பு' என்ற வலி நிவாரணி, மற்றொரு பெரிய வலிக்கு வழி வகுத்துவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் கருத்தாகும்.
- ஏற்கெனவே, எட்டு லட்சம் கோடி அளவிலான வாராக்கடன் என்ற எரிமலையின் மீது அமர்ந்திருக்கும் பொதுத் துறை வங்கிகளுக்கு, இது ஒரு சவாலான தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
- சமீபத்தில், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட, "நிதி அமைப்புகளின் பொருளாதார ஸ்திரத் தன்மை' பற்றிய அறிக்கையில், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன்களின் அளவு, தற்போதைய 11.3
- சதவீதத்திலிருந்து, 15.2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால், சில வங்கிகளின் மூலதன தேய்வு, அவற்றின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கும் நிலை உருவாகலாம்.
- இது போன்ற நிலைமைகளை திறம்பட சமாளிக்க, நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளும் வங்கி நிர்வாகங்களிடமிருந்து, அபரிமிதமான திறமையும், பொறுப்புணர்வும் எதிர்பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.
- நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வங்கி சீர்திருத்தங்களை அமல் படுத்துவதற்கான தக்க தருணம், இதை விட வேறில்லை. அதற்கான முதல் படி, வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்துவதாகும்.
- தற்போதைய வழிமுறைப்படி, பொதுத் துறை வங்கிகளின் தலைமை நிர்வாகியின் பதவிக்காலம் மூன்றாண்டுகள்தான். இந்த குறுகிய கால அளவு, நீட்டிக்கப்பட வேண்டியதுடன், அவர்களின் செயல் ஆற்றலுக்கு ஏற்ப, ஊக்கத் தொகையும் அளிக்கப்பட வேண்டும். வங்கித் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டும்தான் இயக்குநர்களாக நியமிக்கப்பட வேண்டும். இயக்குநர் குழுவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் பொருளாதார அடித்தளமான வங்கிகள் வலுப்பெற வேண்டுமானால், பலமான நிர்வாகக் கட்டமைப்பு மிகவும் அவசியம்.
நன்றி: தினமணி (22-08-2020)