கடமை தவறுவது அழகா அதிகாரிகளே?
- “மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும்” என அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய வார்த்தைகள் இவை. ஆனால், அவரது வார்த்தைகளுக்கும் உண்மை நிலவரத்துக்கும் நிறைய இடைவெளி இருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
- 2023 ஏப்ரல் மாதம் 17 இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட ஒரு மனுவுக்கு, 2024 ஜூலை 1இல் பெருநகர சென்னை மாநகராட்சிக் கூடுதல் தலைமைச் செயலர்/ஆணையரிடமிருந்து தட்டச்சு செய்யப்பட்ட பதில் கடிதம் தபால் மூலம் கிடைக்கப்பெற்றது.
அது என்ன மனு?
- புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் 2023 ஏப்ரல் 6ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தலித் பெண் ஜனகவள்ளி உடனடியாக உரிய மருத்துவ உதவி கிடைக்காததால் மருத்துவமனையில் உயிரிழந்தார். நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனகவள்ளியின் கணவர் தனது முதல் குழந்தையைத் தோளில் ஏந்திக் கண்ணீர்க் கதறலோடு வேண்டுகோள் விடுத்தார்.
- அத்துடன், அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்ய வைப்பதற்காகப் பலமுறை ரிப்பன் மாளிகையின் படிக்கட்டுகள் ஏறி, ஆணையரைச் சந்தித்து, மனு கொடுத்து மன்றாட வேண்டி இருந்தது. குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், இறந்த பெண்ணின் தாய், கணவர் உள்ளிட்ட குடும்பத்தாரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடினார்கள்.
- அவர்கள் ஒரு நாள் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அதன் பின்பே விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. விசாரணையின் முடிவில், ‘ஜனகவள்ளி மருத்துவமனையில் உயிரிழக்கவில்லை; உடல்நிலை பாதிக்கப்பட்டதால் புளியந்தோப்பிலிருந்து எழும்பூர் பிரசவ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்போது, போக்குவரத்து சமயத்தில் உயிர் பிரிந்தது’ என அரசுத் தரப்பு தெரிவித்தது.
- அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்காததால் இறந்த ஜனகவள்ளி குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டும், அவரது கணவருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று முறையிட்டு, மனுக்கள் கொடுத்து, போராடிய பின்பு, பெருநகர சென்னை மாநகராட்சி அக்குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஆணை கோரியது.
- தமிழ்நாடு அரசு இதற்கு அளித்துள்ள பதில் கொடுமையிலும் கொடுமை. ‘பாம்பு கடித்து இறத்தல், நீரில் மூழ்கி இறத்தல், வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் இறத்தல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
- மேற்குறிப்பிட்ட நிதி உதவி பெறுவதற்குக் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 48,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமானச் சான்றிதழில் உயிரிழந்த திருமதி ஜனகவள்ளி என்பவரின் கணவர் திரு. ம.கோடீஸ்வரன் என்பவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 96 ஆயிரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு, ஜனகவள்ளி என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்க வழிவகையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ எனத் தட்டச்சு செய்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- கடமையைத் தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர்க் கால்வாய்ப் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர் கனகராஜ் உடலில் மின்சாரம் பாய்ந்ததால் பணியிடத்திலேயே மரணம் அடைந்தார். இதுதொடர்பாகப் பலமுறை மாநகராட்சி ஆணையர்களைச் சந்தித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- காரணம், இறந்தவர் ஒப்பந்தப் பணியாளர் என்பதால், பணியிடத்தில் உயிர் போனதற்கு மாநகராட்சி பொறுப்பு ஏற்க முடியாது எனச் சொல்லப்பட்டது. ஆனால், ஒப்பந்தப் பணியாளர் சட்டப்படி முதன்மை முதலாளிக்கு (Principal Employer) பொறுப்பு இருக்கிறது. இதை எழுத்துபூர்வமாக எழுதிக் கோரிக்கை விடுத்த பின்பும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்கவில்லை.
இன்னும் ஒரு நிகழ்வு:
- தீவிரக் குடிப் பழக்கத்துக்கு உள்ளான இளைஞர் வசந்தகுமாரை அவரது குடும்பத்தினர் ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அதன் ஊழியர்கள் மருத்துவ வழிகாட்டுதல்கள் எவற்றையும் கடைப்பிடிக்காமல், பலவந்தமாக வசந்தகுமாரை வாகனத்தில் ஏற்றி மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
- அடுத்த பத்தே நாளில் ரத்தக் காயங்களோடு சடலமாக வசந்தகுமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். காவல் துறை வழக்குப் பதிவுசெய்தது. தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்படும் இத்தகைய மரணங்கள் குறித்து இயல்பாகவே விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநில மனநல இயக்குநரகம் எதுவும் செய்யவில்லை.
- ஜூன் 12ஆம் தேதி நேரடியாக இயக்குநரைச் சந்தித்து மனு அளித்தபோது, மூன்று நாளில் ஆய்வு நடத்திப் பதிலளிப்பதாகத் தெரிவித்தார். ஜூலை 8இல் நேரடியாகச் சந்தித்துக் கேட்டபோது, இன்னும் ஆய்வு செய்யவில்லை எனப் பதிலளித்தார். மீண்டும் 12இல் சந்தித்துக் கேட்டபோது, “ஆய்வு நடத்திவிட்டோம்; அறிக்கையை இன்னும் சில தினங்களில் அனுப்பிவைப்போம்” என்றார். இன்னும் அறிக்கை வந்து சேரவில்லை.
- இதுதான் நமது அரசு நிர்வாகத்தின் நிலை. அதிகார வர்க்கத்தைச் சட்டத்தின்படி செயல்பட வைப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதியும், பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர்கள் - தவறிழைப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கையும் தேவை. இல்லையெனில், மனித உயிர்கள் அநியாயமாகப் பலியாவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
இது நியாயமா?
- ஜனநாயகக் கட்டமைப்பில் அரசு நிர்வாக அமைப்புகள் இயல்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடைபெறுவதற்கே அதிகாரிகளைப் பலமுறை சந்தித்து, மனு கொடுத்து, போராட்டம் நடத்தி, போலீஸின் அடக்குமுறையையும் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டிய சூழல் இருப்பது நியாயம்தானா? இதைச் சரி செய்வதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?
- பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பல்லவா? அவ்வாறு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் மட்டும்தானா? அவர்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி மக்கள் முன்னால் அறிமுகப்படுத்தும் கட்சிக்கு, ஆட்சிக்குப் பொறுப்பில்லையா?
- கொத்துக் கொத்தாக உயிரிழந்தால், அது ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாக மாறினால், அதற்கு ஏற்ப நிவாரண நிதி அளிக்க இந்த அரசு தயாராக உள்ளது. ஆனால், அரசு மருத்துவமனையில் ஓர் உயிர் போனால், அதுவும் ஊடக வெளிச்சத்துக்கு அப்பால் என்றால், 18 மாதங்கள் கழித்துச் சாவகாசமாக எதுவும் செய்ய முடியாது என உறுதியாகத் தட்டச்சு செய்து கடிதம் அனுப்ப முடிகிறது.
- அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் இப்படியான அப்பாவி உயிர்கள் மடிந்துகொண்டிருக்கும் செய்திகள், ஊடகங்களில் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில நியாயம் கேட்டு நீதிக்காக அரசு அலுவலகங்களை நாடினால், பதில் அளிக்க வேண்டிய அரசு அமைப்புகள் உயிரற்ற நிர்வாக இயந்திரங்களாக உள்ளன.
- அதன் கொடும்பற்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் ஏழை எளிய மக்களே. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” எனச் சொன்ன அறிஞர் அண்ணாவின் அரசாக, தமிழக அரசின் நிர்வாக அமைப்பு செயல்படுவது உண்மை என்றால், இந்த அவலங்கள் இனியும் தொடர அனுமதிக்கலாமா?
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 08 – 2024)