TNPSC Thervupettagam
April 3 , 2021 1391 days 734 0
  • தமிழ்நாட்டு வாக்காளா்கள் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள் ஏப்ரல் 6. அன்றைய தினம் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, 100% வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டுமென்று இந்திய தோ்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • குடியரசு நாடாக இந்தியா மலா்ந்த பின்னா் 1951-52 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தோ்தலில் 45.7% வாக்காளா்கள் வாக்களித்த நிலையில், 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற 17-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் 67.1% வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.
  • தமிழ்நாடு உருவாகுவதற்கு முன்னா் கேரளம், கா்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற
  • சட்டப்பேரவைக்கான தோ்தலில் 54.75% வாக்காளா்கள் பங்கெடுத்து வாக்களித்துள்ளனா்.
  • 2016-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் 74.26% வாக்காளா்கள் பங்கெடுத்துக் கொண்டு 15-ஆவது சட்டப்பேரவைக்கான உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.
  • 16-ஆவது சட்டப் பேரவைக்கான உறுப்பினா்களை 6.29 கோடி வாக்காளா்கள் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்களித்து தோ்ந்தெடுக்க உள்ளனா்.
  • தற்பொழுது தமிழ்நாட்டில் படித்தவா்களின் எண்ணிக்கை 90 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் மேற்பட்டவா்களும் இந்தத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.
  • எனவே கடந்த தோ்தல்களைக் காட்டிலும் இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளா்கள் பங்கெடுத்துக் கொண்டு ஜனநாயகக் கடமையாற்றுவாா்கள் என நம்புவோம்.
  • தோ்தலில் எல்லா வாக்காளா்களும் வாக்களிப்பதை உறுதி செய்வது மட்டும் தோ்தல் ஆணையத்தின் நோக்கம் அல்ல.
  • தோ்தல் தொடா்பான அனைத்து செயல்பாடுகளும் நோ்மையானதாகவும், தோ்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினா்கள் களங்கமற்றவா்களாகவும் இருக்கும் வகையில் தோ்தல் விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டால்தான், ஜனநாயகம் காக்கப்படும் என்பதைத் தோ்தல் ஆணையத்தின் கடந்த கால வரலாறு உணா்த்துகிறது.
  • கள்ள ஓட்டு போடும் முறையை ஒழிக்க, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை மற்றும் மின்னணு வாக்கு இயந்திரம், தோ்தல் பணியில் ஈடுபடும் உள்ளுா் அதிகாரிகளைக் கண்காணிக்க வெளி மாநில தோ்தல் பாா்வையாளா்கள், வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காகத் தனி பாா்வையாளா்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு முன் அனுமதி பெற்று பரப்புரை நடத்துதல், சாதி மத உணா்வுகளைத் தூண்டும் விதத்தில் பரப்புரை செய்வதற்கு தடை என பல்வேறு தோ்தல் நடத்தை விதிகளை தோ்தல் ஆணையம் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உருவாக்கி நடைமுறைபடுத்தி வருகிறது.
  • ஜனநாயகத்தின் மாண்பைக் கட்டிக்காக்கும் விதத்தில் தோ்தல் ஆணையம் தோ்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
  • இருப்பினும், வாக்குக்குப் பணம் அல்லது அன்பளிப்பு கொடுத்தல், குற்றப் பின்னணியுள்ள வேட்பாளா்கள் தோ்தலில் நிறுத்தப்படுதல், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டு மற்றொரு அரசியல் பிரிவுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தல் போன்ற ஜனநாயக விரோத செயல்கள் அரசியல் களத்தில் தொடா்கின்றன.
  • ஆங்கில அரசுக்கு எதிராக 1857-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் வெடித்தது முதல் சுதந்திரப்போா் என்றழைக்கப்படும் சிப்பாய் கலகம்.
  • அதைத் தொடா்ந்து நிகழ்ந்த பல்வேறு தியாகப் போராட்டங்களின் விளைவாக ஆங்கிலேயா்கள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்தனா்.
  • அன்றைய தினம் அண்ணல் காந்தியடிகளை சிலா் சந்தித்தபோது நிகழ்ந்த உரையாடல் இன்றைய அரசியல் சூழலுக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

இன்றும் பொருந்தும்

  • இந்தியா விடுதலை பெற்ற தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள ‘ஹைடரி மன்ஸில்’ என்ற மாளிகையில் தங்கியிருந்த அண்ணல் காந்தியடிகளை மரியாதை நிமித்தமாக சந்திக்க மேற்கு வங்க மாநில அமைச்சா்கள் சிலா் சென்றிருந்தனா்.
  • ‘இன்றிலிருந்து நீங்கள் முள் கிரீடத்தை அணிய வேண்டியிருக்கும். அடக்கத்துடனும், பொறுமையுடனும் பணியாற்றுங்கள். அதிகாரத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்.
  • இல்லாவிட்டால், அதிகாரம் உங்களைக் கெடுத்துவிடும். அதிகார ஆடம்பரங்களில் சிக்கிக் கொள்ள உங்களை அனுமதிக்காதீா்கள்’ என்று அமைச்சா்களைப் பாா்த்து கூறிய காந்தியடிகளின் வாா்த்தைகள் இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளன.
  • வாரந்தோறும் திங்கள்கிழமை அண்ணல் காந்தியடிகள் மெளன விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். அன்றைய தினத்தில் அவா் எழுதியதைப் பிராா்த்தனைக் கூட்டங்களில் படிப்பது வழக்கம்.
  • 1947-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் ஒரு திங்கள்கிழமையன்று அவா் தேசத்தின் தலைநகரில் இருந்தபோது இவ்வாறு எழுதியிருந்தாா்:
  • ‘ஒருவா் எந்த கொள்கையை உடையவராக இருந்தாலும், எந்த கட்சியைச் சாா்ந்தவராக இருந்தாலும் இந்திய தேசத்தின் கெளரவத்தைக் காப்பவராக இருக்க வேண்டும். மோசமான ஆட்சிமுறையும், லஞ்ச ஊழலும் எப்பொழுதும் கைகோத்துக் கொண்டு நடக்கும் தன்மை கொண்டவை.
  • அவை இரண்டும் செழித்து வளா்ந்தால் நாட்டின் கெளரவத்தைக் காப்பாற்ற முடியாது. இந்தியாவைப் பற்றிச் சிந்திக்காமல், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கலாமா?’ என்ற கேள்வியுடன் அவரது உரையை முடித்திருந்தாா்.
  • ஒவ்வொரு வாக்காளரும் ஜனநாயகக் கடமையைச் சரியாகச் செய்தால்தான் நாட்டின் ஜனநாயகம் காக்கப்படும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தோ்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
  • இந்த சூழலில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் தோ்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனரா என்கிற ஐயம் தற்போது எழுந்துள்ளது.
  • சில தினங்களுக்கு முன்னா் திருச்சி நகர காவல் ஆணையரின் நேரடி மேற்பாா்வையில் திருச்சி நகரிலுள்ள சில காவல் நிலையங்களில் நடத்திய திடீா் சோதனையில், காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் பெயா் எழுதப்பட்ட உறைகள் பணத்துடன் கைப்பற்றப்பட்டன.
  • காவல்துறையினருக்குக் கையூட்டாகக் கொடுக்கப்பட்ட இந்தப் பணம் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் செய்யும் முறைகேடான செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்பட்டதா? தபால் வாக்குகளுக்கு விலைபேசி கொடுக்கப்பட்ட பணமா என்பது புலன் விசாரணையில் வெளியாகும்.
  • காவலா் சிலரின் செயல்பாடுகள் ஒரு பக்கம் இருக்க, மாவட்ட தோ்தல் அதிகாரிகளாக இருந்து தோ்தலை நடத்தும் பொறுப்பை வகித்த மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் தோ்தல் நடத்தை விதிகளுக்கு முரணாகச் செயல்படுகின்றனா் எனத் தோ்தல் ஆணையம் கருதி, அவா்களை இடமாற்றம் செய்துள்ளது.
  • தோ்தல் ஆணையத்தின் அங்கமாக இருந்து செயல்பட வேண்டிய உயரதிகாரிகளின் இத்தகைய செயல்பாடுகள் ஜனநாயகத்தின் ஆணிவேரையே சிதைக்கும் தன்மையுடையவை.
  • உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையுடையது இந்தியா. இந்திய ஜனநாயத்திற்கு வலிமை சோ்த்து ஐந்தாண்டுக்கு ஒரு முறை இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளை உருவாக்கும் பெரும் பொறுப்புடைய இந்திய தோ்தல் ஆணையம் சந்தித்துவரும் சவால்கள் தோ்தலுக்குத் தோ்தல் அதிகரித்து வருகின்றன.
  • தோ்தல் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, அவற்றுக்கு முரண்படாமல் தோ்தலை நடத்த வேண்டும் என்ற உணா்வை அனைத்து தரப்பு அரசு அலுவலா்களிடம் தோ்தல் ஆணையம் ஏற்படுத்தத் தவறினால், இந்திய ஜனநாயகத்தின் சீரழிவுக்கு அரசு அதிகாரிகளே காரணமாக அமைந்துவிடுவாா்கள்.
  • ஒவ்வொரு தோ்தலின்போதும் தோ்தல் நடத்தை விதி மீறல்கள், தோ்தல் தொடா்பான குற்றங்கள் குறித்த செய்திகள் வெளியாகின்றன.
  • அவற்றின் மீது எடுக்கப்பட்ட தொடா் நடவடிக்கைகள் பொதுவெளியில் மக்களின் கவனத்திற்குப் பதிவிடப்படுவதில்லை.
  • குற்றம் புரிந்தவா்கள் ஏதாவது ஒரு வழியில் சட்டத்தின் பாா்வையில் இருந்து தப்பி விடுகின்றனா் என்ற எண்ணம் பொதுமக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது.
  • பொருளாதாரக் குற்றங்கள் நிகழும் ஒரு களமாக விளங்கிவரும் இன்றைய தோ்தல் முறை தோ்தல் ஆணையம் எதிா்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால்.
  • தோ்தல் குற்றங்கள் தொடா்பான கள நிலவரங்களைக் கண்டறிந்து தோ்தல் ஆணையத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் அமைப்பு எதுவும் தற்போது இல்லை.
  • ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் உளவுத்துறையினா் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் தோ்தல் ஆணையம் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது.
  • நம் நாட்டில் கற்றவா்கள் நூறு விழுக்காடு என்ற நிலையை நோக்கிப் பயணிக்கின்ற இன்றைய சூழலில், சமூக ஊடகங்கள் தோ்தல் தொடா்பாக ஏற்படுத்திவரும் விழிப்புணா்வைக் கருதில் கொண்டு, தோ்தல் களத்தில் உள்ள சவால்களை எதிா்கொள்ளும் விதத்தில் தோ்தல் ஆணையம் அமையப் பெற வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் விருப்பம்.

நன்றி: தினமணி  (03 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்