TNPSC Thervupettagam

கடவுள் உண்டு, இல்லை

June 20 , 2024 29 days 92 0
  • நாத்திகம் என்பது கடவுள் என்பவர் இல்லை என்பதாகும். கடவுளை ஒப்புக்கொள்ள மறுப்பது என்பதுதான் பகுத்தறிவு என்று பேசப்படுகிறது. பொதுவாக, அனைத்து மதங்களுமே நாத்திகத்தை எதிர்ப்பவை. கடவுள்தான் இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர் என்கின்றன மதங்கள். ஆனால், அப்படிப்பட்ட மூலப் படைப்பாளி என்று ஒருவர் இல்லவே இல்லை என்கிறார்கள் நாத்திகவாதிகள் அல்லது நிரீஸ்வரவாதிகள்.
  • அதேசமயம் கடவுள் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்பவர்களும் உண்டு. அவர்கள் கடவுளை ஏற்போரும் அல்லர்; எதிர்ப்போரும் அல்லர். இவர்களை "அக்னாஸ்டிக்" என்பார்கள்.
  • சார்புநிலைத் தத்துவத்தைக் கண்டறிந்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆரம்பத்தில் கடவுள் மறுப்பாளராக இருந்தவர். பின்னர், தனது கடைசிக் காலத்தில் கடவுளை ஒப்புக்கொண்டார் எனப்படுகிறது. ஐன்ஸ்டீனுக்குப் பிறகு வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி கடவுளை ஒப்புக்கொள்ளவே இல்லை.
  • விடுதலைப் போராட்ட வீரரான வி.டி.சாவர்க்கர் அந்தமானில் 14 வருடம் சிறைவாசம் இருந்தவர் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், அவர் ஒரு நாத்திகர் என்பது பலருக்கும் தெரியாது. "ஹிந்து' என்பதை மதமாக அல்லாமல், கலாசார அடையாளமாக அவர் கருதி வந்தார். ஜவாஹர்லால் நேரு ஒரு நாத்திகர் என்பதும் பரவலாகத் தெரியாது.
  • உலக மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதத்தினர் தங்களை நாத்திகர் என்று கூறிக்கொள்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இவர்களைத் தவிர ஏனையோர் பல்வேறு மதங்களைச் சேர்ந்தோராகவும் ஏதாவதொரு கடவுள் மீது நம்பிக்கை உடையவராகவும் உள்ளனர்.
  • கடவுள் மறுப்பு, கடவுள் பற்றிய சிந்தனையின்மை, கடவுள் ஏற்பு எனப் பல்வேறு சிந்தனைகள் ஆதிதொட்டே இருந்து வந்துள்ளன. எல்லா மதங்களுக்கும் மூத்த மதமாக ஹிந்து மதம் பேசப்படுகிறது. ஹிந்து மதத்தின் இதிகாசமான ராமாயணத்தில் ஜாபாலி என்ற ஞானி பற்றிய குறிப்பு உள்ளது. அவர் கடவுள் மறுப்பாளராக இருந்துள்ளார்.
  • அத்தகையவர்கள் "சார்வாகர்' அல்லது "லோகாயதர்', "லோகாயதவாதிகள்' என்று அழைக்கப்பட்டனர். சார்வாகர்களின் மூல நூல்கள் எதுவும் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சார்வாகர்கள், லோகாயதர்களைப் பற்றி தொடக்க கால ஜைன, புத்த அறிஞர்கள் எழுதிய நூல்களில் சார்வாகம், லோகாயதம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதுபோன்ற இரண்டாம் நிலை தரவுகளிலிருந்து கடவுள் மறுப்பு சிந்தனை குறித்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே கடவுள் மறுப்புக் கொள்கை இருந்துள்ளது. அதுவும் இந்தியாவில், அதுவும் ஹிந்து மதத்தில்.
  • சார்வாகர்களின் கொள்கை மிகவும் புரட்சிகரமானது மட்டுமல்ல, தர்க்க இயலின்படி நிறுவப்பட்டுள்ள தத்துவமாகவும் பேசப்படுகிறது. சார்வாகர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தானே நடக்கிறதே தவிர, அது நடப்பதற்கு ஒரு காரணம் அவசியமில்லை என்கின்றனர். அதற்கு உதாரணமாக, நெருப்பு - புகை இரண்டையும் எடுத்துக் காட்டுகிறார்கள். புகையிருந்தால் அங்கு நெருப்பு இருக்கும் என்போம். "நெருப்பில்லாமல் புகையாது' என்பது பிரபலமான கூற்று.
  • சார்வாகர்கள் இக்கருத்தை மறுக்கின்றனர். நெருப்புக்கும் புகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; ஒன்றுக்கொன்று இவை சார்புள்ளவையும் அல்ல என்கின்றனர். சார்புள்ளவை என்பது நமது கற்பனை அல்லது நமது அனுமானம் மட்டுமே. அது உறுதியானது அல்ல. முள்ளில் கூர்மை, கரும்பில் இனிமை, வேம்பில் கசப்பு - இவை எல்லாமே அவற்றின் இயல்புகள். தற்செயலாகச் சேர்ந்துள்ளவை.
  • இவை அனைத்தையுமே நமது பார்வைப் புலனுக்கு அப்பாற்பட்ட கடவுள் என்ற ஒருவர்தான் படைத்தார் என்பது ஓர் அனுமானம் மட்டுமே; உறுதிபூர்வமானது அல்ல. அவ்வகையில் இந்த உலகமேகூட ஒரு தற்செயல்தானே தவிர, இதை யாரோ ஒருவர் படைத்தார் என்பது ஓர் அனுமானம் மட்டுமே. அவ்வாறு நாம் கருதிக்கொள்கிறோம், அவ்வளவுதான்.
  • எது நமது கண்களுக்குக் காட்சிப்படுகிறதோ, அதை மட்டுமே ஒப்புக்கொள்ள வேண்டும். அதேபோல உணரப்படுவதையும் ஒப்புக் கொள்ளலாம் என்பது சார்வாகர்களின் கொள்கை. நிலம், நீர், நெருப்பு இம்மூன்றும் கண்களுக்குத் தெரிகின்றன. காற்றை உணர முடிகிறது. இந்த நான்கை மட்டுமே ஒப்புக்கொண்டு, பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படுகிற கருத்தை பழைய சார்வாகர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
  • முக்கியமான வியக்கத்தக்க ஒரு சிந்தனையை பிருகஸ்பதி என்கிற ஞானி கூறியுள்ளார். பொருளிலிருந்தே உயிர் என்பது தோன்றியது என்கிறார். பொருளுக்கு உயிர் இல்லை என்பதுதான் நமது ஆதிக்கருத்தாக இருந்து வந்துள்ளது. ஆனால், ஞானி பிருகஸ்பதி என்பவர் பொருளே முதல் என்கிறார். சார்வாக தத்துவச் சிந்தனையைத் தோற்றுவித்தவர் இவர்தான் எனச் சிலர் கருதுகின்றனர்.
  • நாமோ, ஆன்மாவே நமது ஆரம்பம் என்பவர்கள். இதுவே இந்தியாவின் சிந்தனை மரபாகவும் இருந்துள்ளது. அதே காலகட்டத்தில் நமது இந்தியாவின் இன்னொரு சிந்தனை ஆன்மாவை மறுத்து பொருளே முதலானது என்கிறது. பொருளே முதல் என்பதும், கடவுள் இல்லை என்பதும் சார்வாகர்களின் கொள்கையாகும். சார்வாகரின் கொள்கையில் முக்கியமானது காட்சிதான். அனுமானிப்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. அவை ஐயப்படத்தக்கவை என்பது அவர்களின் கருத்து. அது உண்மையை அறிய உகந்தது அல்ல என்கின்றனர்.
  • காரண - காரியங்களை சார்வாகர்கள் நம்புவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் தானே நடக்கிறது என்பதே அவர்களின் முடிவு. ஆன்மா என்ற ஒன்று இல்லை. காரணம், அது உடல் சார்ந்தது அல்ல. ஆன்மாவை ஒப்புக்கொள்ள வேண்டுமாயின், ஆன்மாவை உடல் என்றேதான் கூறவேண்டுமே தவிர, அது உடலுக்கு அப்பாற்பட்டதல்ல என்கின்றனர்.
  • உடலை உருவாக்கிடும் பொருள்கள் பல உள்ளன. உடலை எரித்தால் சாம்பலாகி விடுகிறது. எரிக்கப்பட்ட நிலையில் அவை நிலத்தின் மூலக்கூறுகளுடன் சேர்ந்துவிடுகின்றன என்கிறார்கள். அதனால் மறுபிறப்பு என்பதோ, வினைக்கேற்ற தண்டனை என்பதோ, பாவ புண்ணியம் என்பதோ இல்லை. மொத்தத்தில் கடவுள் என்கிற படைப்பாளியே இல்லை. அப்படி ஒருவர் இருப்பாரானால், கேட்பவர்களுக்கெல்லாம் அவர்கள் கேட்பதை அவர் வழங்க முடியும். அப்படி நடப்பதாக இல்லை. இந்த உலகத்தை அவர் படைத்தார் என்பது தவறு.
  • சார்வாகர்களுக்கு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் இல்லை. அவற்றை வஞ்சகர்களின் கற்பனை என்கின்றனர். உண்மையில் சொர்க்கம் என்பது இன்பம் மட்டுமே. நரகம் என்பது துன்பம் மட்டுமே.
  • சார்வாகர்கள் வாழ்ந்த காலம் கிறிஸ்துவுக்கு முன்பு பல்லாயிரம் ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. ஜைன, பெüத்த மதங்களும், அன்றைய ஹிந்து மதமும் லோகாயதத்தைப் பேசியுள்ளன என்பதை அறிய முடிகிறது என்று பாரத ரத்னா டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தமது "கீழை மேலைநாடுகளின் மெய்ப்பொருள் வரலாறு' எனும் நூலில் விரிவாகக் கூறுகின்றார்.
  • கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜிதகேசகம்பலியின் நூல்கள் சார்வாக தத்துவத்தைக் குறிப்பிடுகிறது. மேலும் பல சார்வாகர்கள் பற்றியும் நமக்குத் தெரியவந்துள்ளது. இத்தகைய சிந்தனைவாதிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்தில் வாழ்ந்துள்ளனர். அது மட்டுமல்ல, ஹிந்து மதம் அவர்களை அங்கீகரித்தும் உள்ளது.
  • நாத்திகராக இருப்பதற்கு தேர்ந்த ஞானம் தேவை. கடவுளை மறுப்பதற்கு சிறந்த சிந்தனையோட்டம் அவசியம். அறிவாளிகளால்தான் நாத்திகராக இருக்க முடியும். நாத்திகத்தைப் பற்றி நமக்குத் தெரியப் பேசியவர்கள், நாத்திகத்தைப் பற்றிப் பேசாமல் ஆத்திகத்தை மறுத்தே அதிகம் பேசினார்கள்.
  • குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கு எதிராக பிற ஜாதியினரைத் தூண்டிவிடுவதற்கே இவர்களின் நாத்திகம் உபயோகப்பட்டதே தவிர, பூர்ணமான சிந்தனைபூர்வமாக மக்களைத் தயாரிக்கத் தவறிவிட்டதென்றே கூறலாம். கடவுள் இருப்பதாகக் கூறுவதும் அல்லது இல்லை என்று கூறுவதும் இருவேறு சிந்தனைக் கிளைகள் மட்டுமே. ஆத்திகத்துக்கு உள்ள அனைத்தும் நாத்திகத்துக்கும் உரியவையே. இவற்றை சுதந்திரமான சிந்தனைகளாகப் பார்க்க வேண்டுமே தவிர, அவற்றை தாழ்வு, உயர்வு என்கிற தராசில் வைத்துப் பார்க்கக் கூடாது. ஆத்திக - நாத்திக சிந்தனைகளில் ஆரிய - திராவிட இனங்களாக இந்திய மக்களைப் பாகுபடுத்தி காணக் கூடாது.
  • சமயச் சடங்குகளில் மூடநம்பிக்கைகள் இருக்கலாம். கடவுளை சடங்குகளுக்குள் காண்பதைவிட, அவற்றைக் கடந்து காண்பதுதான் மெய்யான முற்போக்குச் சிந்தனை. கடவுள் மறுப்பு முற்போக்கு என்றும், கடவுளை ஏற்பது பிற்போக்கு என்றும் நவீனகால அரசியல் தளத்தில் பேசப்படுகிறது.
  • அமெரிக்காவின் நாணயமான டாலரில் "கடவுளை நம்புகிறோம்' என்று அச்சிடப்பட்டுள்ளதை அமெரிக்காவில் யாரும் எதிர்ப்பதில்லை.
  • கடவுளை சத்தியம் என்று கூறிவந்த மகாத்மா காந்தி, பின்னர் "சத்தியமே கடவுள்' என்று பேசிவந்தார். "கடவுளை சத்தியம் என்றால், கடவுளை மறுப்பவர்கள் சத்தியத்தையும் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுக்காதவர்கள் கூடவே கடவுளையும் மறுக்காமல் போகலாமே' என்று அவர் விளக்கமளித்தது குறித்துச் சிந்திக்கலாம்

நன்றி: தினமணி (20 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்