TNPSC Thervupettagam

கடைப் பணியாளர்களுக்கு அமரும் வசதிகள்: கேரள வழியில் தமிழ்நாடு

September 14 , 2021 1053 days 467 0
  • விற்பனையகப் பணியாளர்கள் பணி நேரத்தில் அமர்வதற்கான வசதிகள் கண்டிப்பாகச் செய்துதரப்பட வேண்டும் என்று கேரளத்தையடுத்துத் தமிழ்நாடு அரசும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது.
  • வருடாந்திர நிதிநிலை அறிக்கைக்கான சட்டமன்றக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947-ல் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது தொழிலாளர் உரிமைகளுக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
  • எனினும், அவ்வாறு வசதிகளைச் செய்துதராத கடை உரிமையாளர்களுக்கு இச்சட்டத் திருத்தம் எவ்வகையான தண்டனையையும் விதிக்கவில்லை. கடை உரிமையாளர்களுக்கான பொது அறிவுறுத்தலாகவே இந்தச் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது.
  • விதிமுறைகளை மீறினால் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையிலேயே தொழிலாளர் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவது என்பது விற்பனையக உரிமையாளர்களின் விருப்பத் தேர்வாகவே இருக்க முடியும்.
  • நாள் முழுவதும் நின்றுகொண்டே பணியாற்ற வேண்டியிருக்கும் தொழிலாளர்களுக்கு அமர்வதற்கான வசதிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என்ற வகையில் இச்சட்டத் திருத்தம் வரவேற்புக்குரியதே.
  • கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களைப் பணியாளர்கள் நின்றவாறு வரவேற்பதை மரியாதையாக நினைக்கும் வழக்கமும் இருக்கிறது. அதன் காரணமாகவே உரிமையாளர்களும் தங்களது பணியாளர்களை அமரக் கூடாது என்று வற்புறுத்துகிறார்கள்.
  • எனவே, இத்திருத்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திட வாடிக்கையாளர்களிடமும் மனமாற்றங்கள் வர வேண்டும். தமிழ்நாட்டில் திடீர் அறிவிப்பாக நிறைவேறியிருக்கும் இச்சட்டம், முதன்முதலில் கேரளாவில் 2018-ல் இயற்றப்படுவதற்கு அங்குள்ள பெண் தொழிலாளர்கள் 2009-லிருந்து தொடர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது என்பதும் தற்போது நினைவுகூரப்பட வேண்டியது.
  • அமர்வதற்கான உரிமையை மட்டுமல்ல, பணியிடங்களில் பெண்களுக்குக் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தே அவர்கள் போராடினார்கள்.
  • தொழிலாளர் உரிமைகளின் லட்சிய பூமியாகக் கருதப்படும் கேரளத்திலேயே இந்தக் கோரிக்கைகள் நிறைவேற ஏறக்குறைய பத்தாண்டுகள் போராட வேண்டியிருந்தது. தமிழ்நாடு உடனே அச்சட்டத்தின் தேவையை உணர்ந்து தயக்கமின்றி நடைமுறைப் படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
  • தற்போது தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத் திருத்தம் அமர்வதற்கான உரிமையைத்தான் அளித்துள்ளதே தவிர, கேரளத்தைப் போல அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிப்பறை வசதிகளையும் கட்டாயமாக்கவில்லை.
  • தமிழ்நாட்டிலும் நாள் முழுக்கக் கால்கள் கடுக்க நின்றுகொண்டே பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதால் சிறுநீர்த் தொற்று பிரச்சினைகளுக்கு ஆளாவது தொடரத்தான் செய்கிறது. எனவே, கழிப்பறைகளைக் கட்டாயமாக்குவதற்கான சட்டரீதியான முயற்சிகளும் விரைவில் எடுக்கப்பட வேண்டும்.
  • தொழிற்சாலைகள் சட்டத்தைப் பெரிதும் தழுவி இயற்றப்பட்டுள்ள தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டமானது, விற்பனையகங்களுக்கான பிரத்யேக சிக்கல்களைக் கருத்தில் கொள்ளவில்லை.
  • சந்தைப் பகுதிகளில் சின்னஞ்சிறிய அளவில் கடைகள் நடத்துவோருக்குப் பொதுவான சுகாதார வசதிகளை அளிப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பேற்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்