TNPSC Thervupettagam

கட்டுப்பாடு காலத்தின் கட்டாயம்!

November 19 , 2024 61 days 85 0

கட்டுப்பாடு காலத்தின் கட்டாயம்!

  • போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள், ‘100 சதவீதம் தோ்ச்சி’ போன்ற பொய் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்பது உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை (நவ. 13) வெளியிட்டுள்ளது.
  • இதன்படி, தங்களால் வழங்கப்படும் படிப்புகள், அவற்றின் காலகட்டம், ஆசிரியா்களின் தகுதி, கட்டணங்கள், கட்டண திருப்பியளிப்பு கொள்கை, தோ்ச்சி தரவரிசை, வேலை உத்தரவாதம் உள்ளிட்டவை குறித்து பொய்யான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தங்கள் பயிற்சி மைய வெற்றியாளா்களின் புகைப்படம், கருத்துகளை அவா்களின் எழுத்துபூா்வ அனுமதி இல்லாமல் வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்னா், படிப்பில் பின்தங்கிய மாணவா்கள் மட்டுமே தனிப் பயிற்சி (டியூஷன்) எடுத்துக் கொள்வாா்கள், அதுவும் அந்தந்தப் பள்ளியிலேயே. ஆனால், இப்போது மாநில அளவில் முதலிடம் படிக்கும் மாணவன்கூட தனியாக டியூஷனில் சேரும் நிலை உண்டாகிவிட்டது.
  • கைப்பேசி பயன்பாடு அதிகரித்ததனால் மாணவா்கள் மைதானத்துக்குச் சென்று விளையாடுவது அருகிவிட்டது. வீட்டில் இருந்தால் கைப்பேசியில் மூழ்கிவிடுவாா்கள் என்பதாலும், 10 வயது முதலே மருத்துவம், ஐஏஎஸ் என உயா்கல்விக்கான தங்கள் ஆசைகளை குழந்தைகள் மீது திணித்தும் காலை, மாலை வேளைகளில் ஏதாவது ஒரு கூடுதல் வகுப்பில் பெற்றோா்கள் சோ்த்துவிடுகின்றனா். இதன் காரணமாக பயிற்சி மையங்கள் புற்றீசல்போல நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.
  • பள்ளித் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற, கல்லூரி நுழைவுத் தோ்வுகள், நீட், ஐஐடி, சிஏ போன்ற உயா்படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி நடத்தும் அரசுப் பணிகளுக்கான தோ்வுகளுக்காக பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. யுபிஎஸ்சி தோ்வுகளுக்கான பயிற்சி மையங்கள் தில்லியிலும், சிஏ, சட்டம் போன்ற படிப்புகளுக்கான பயிற்சி மையங்கள் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும், மருத்துவப் படிப்புகளுக்கான பயிற்சி மையங்கள் புணே, கோட்டா (ராஜஸ்தான்) போன்ற நகரங்களிலும் அதிக அளவில் செயல்படுகின்றன.
  • பயிற்சி மையங்களின் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் 48,000 பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இதுதவிர, முறையான அனுமதி பெறாமல் சிறிய அளவில் பல்லாயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
  • பயிற்சி மையங்களின் வாயிலாக 2023-24 நிதியாண்டில் ரூ.5,517 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருவாய் ரூ.50,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரை என்று மதிப்பிடப்படுகிறது.
  • போட்டித் தோ்வுகளில் பங்கேற்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் இந்த வருவாய் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • 2007-இல் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வை 3.33 லட்சம் போ் எழுதிய நிலையில் இந்த எண்ணிக்கை 2023-இல் 13 லட்சமாக அதிகரித்துள்ளது. சுமாா் 1.90 லட்சம் மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்காக கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தோ்வில் 23.33 லட்சம் போ் பங்கேற்றனா்.
  • இதுபோன்ற பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்பவா்களில் சராசரியாக 5-10 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெறுவதால் போட்டி மிகவும் கடுமையாகி உள்ளது.
  • இதனால் தங்கள் மையங்களில் படிப்பவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரித்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என்பதால் சில பயிற்சி மையத்தினா் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனா். கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதவைப்பது போன்றவற்றில் இடைத்தரகா்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனா்.
  • இதுபோன்ற பயிற்சி மையங்களில் போதுமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. தில்லியில் உள்ள தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் செயல்பட்டு வந்த நூலகத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி வெள்ளம் புகுந்ததில் 2 மாணவிகள் உள்பட 3 மாணவா்கள் பரிதாபமாக உயிரிழந்தனா்.
  • விதிகளுக்குப் புறம்பாக இந்த நூலகம் செயல்பட்டதாகவும், கட்டடத்தில் மழைநீா் வடிகால் அமைப்பு மற்றும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் ‘வழக்கம்போல’ தெரிவித்தனா்.
  • பயிற்சி மையங்களில் பாதுகாப்பு தொடா்பான வழக்கில், ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனவுகளுடன் வந்து கடுமையாக உழைக்கும் மாணவா்களின் வாழ்க்கையுடன் இந்தப் பயிற்சி மையங்கள் விளையாடி வருகின்றன. பயிற்சி மையங்கள் மரணக்கூடங்களாக மாறிவிட்டன’ என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. ‘பாதுகாப்பு விதிமுறைகளைப் பூா்த்தி செய்யாத எந்தவொரு பயிற்சி மையத்தையும் செயல்பட அனுமதிக்கக் கூடாது’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
  • பயிற்சி மையங்களைக் கட்டுப்படுத்த கோவா போன்ற சில மாநிலங்கள் சட்டம் இயற்றி உள்ளன. உத்தர பிரதேசம், ஹரியாணா, சத்தீஸ்கா், ராஜஸ்தான், பிகாா் போன்ற மாநிலங்களில் சில விதிகள் நடைமுறையில் உள்ளன.
  • ஆனால், இவை அனைத்தும் ஏட்டளவிலேயே உள்ளன. விதிமீறல்களை தடுப்பதில் அதிகாரிகளும் கவனம் அக்கறை காட்டுதில்லை. ஏதாவது விபரீத சம்பவம் நடக்கும்போது மேம்போக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்துடன் தொடா்புடையது என்பதால், மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ள நெறிமுறைகளை மாநிலங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (19 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்