TNPSC Thervupettagam

கணவனோடு முடிந்துவிடாது பெண்ணின் வாழ்க்கை

December 17 , 2023 368 days 328 0
  • வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்தே பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித்தனி நியதிகள், இலக்கணங்கள். பெண்ணின் இலக்கணம் அல்லது கடமையாகச் சொல்லப்பட்டவை எல்லாமே அவர்களைப் பிணைக்கும் சங்கிலிகள். ஆனால், அவற்றைத் தங்கள் அடையாளமாகவும் அழகுசேர்க்கும் அணிகலனாகவும் பெண்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் அவற்றுக்குப் பண்பாட்டு முலாம் பூசப்பட்டது.
  • இல்லறப் பெண்ணின் கடமையாக இதிகாசங்களிலும் புராணங்களிலும் சமய நூல்கள் சிலவற்றிலும் ‘சதி’ முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது பெண்களைக் கொல்லும் சதி என்பது தெரிந்தும் அதைக் கேள்விக்குட்படுத்தும் துணிவு அந்நாளில் பலருக்கும் இல்லை. எந்தக் காலம் என்று வரையறுக்க முடியாத காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழக்கத்தை அந்நாளில் அவ்வளவு எளிதாக யார் எதிர்த்துவிட முடியும்?
  • சதி’ என்கிற சொல்லுக்குக் கண்ணிய மான தியாகம், புகழ் என்று பொருள் விளக்கம் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில சமூகங்களில் கணவனின் இறப்புக்குப் பிறகு பெண்கள் கணவனின் உடலோடு சேர்த்து எரியூட்டப்பட்டுப் புனிதப்படுத்தப்படும் நிகழ்வே ‘சதி’. இறப்புக்குப் பிறகும் கணவனோடு சேர்ந்து வாழும் ஒப்பந்தமாகவும் இது பார்க்கப்பட்டது.

கணவன் கடவுளா?

  • கணவனையே கடவுளாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் ‘ஸ்த்ரீ தர்மம்’. பதி என்றால் கடவுள்; அப்படியென்றால் பதியான கணவன் கடவுள்தானே. சம்ஸ்கிருதத்தில் கணவன் ‘ஸ்வாமி’ என்றழைக்கப்படுகிறான். கணவனைக் கடவுளாகப் போற்றுவது ‘பதிவிரதம்’ என்றால் அந்தக் கடவுள் இவ்வுலகைவிட்டு நீங்கியபிறகு தானும் அவனோடு இறப்பது ‘சதிவிரதம்’.
  • ஒரு பெண் தன் கணவனின் இறப்புக்குப் பிறகு தானும் உயிரோடு அவனது சிதையில் வீழ்ந்து இறப்பதால் கணவனின் பாவங்களும் அவனுடைய குடும்பத்தாரது தீவினைகளும் அகன்றுவிடும் என்று நம்பப்பட்டது. காரணம், நெருப்பு புனிதமானதாகவும் ‘சதி’ என்பது பெண்களின் கடமையாகவும் பெண்கள் கருத வைக்கப்பட்டனர். காலந்தோறும் தீயிலோ அதற்கு நிகரான செயலிலோ ஈடுபட்டுத் தங்கள் பதிவிரதத்தை நிரூபிப்பது பெண்களின் கடமைதானே. அந்தக் கடமையிலிருந்து விலகும் பெண்களை வலுக்கட்டாயமாகச் சிதையில் தள்ளிக் கொன்ற கொடூரமும் நம் நாட்டில் அரங் கேறியுள்ளது. ‘சதி’யை, ‘இந்தியாவில் பொதுவெளியில் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்பட்ட சடங்கு’ எனத் தங்கள் பயண நூல்களில் அல்பிருனி, இபின் பதூதா போன்றோர் பதிவுசெய்துள்ளனர்.

யாருக்கு விடுதலை

  • சதி’ வழக்கம் எப்போது தொடங்கியது என்பதற்கு அறுதியிட்டுச் சொல்லக்கூடிய வரலாற்று ஆவணங்கள் இல்லாத நிலையில் பொ.ஆ.மு. (கி.மு) நான்காம் நூற்றாண்டிலேயே இந்த வழக்கம் நடைமுறையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கைம்பெண்கள் செய்ய வேண்டிய கடமையாக ரிக் வேதம் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி கிட்டத்தட்ட ‘சதி’ நடைமுறையைப் பிரதிபலிக்கிறது. ‘கணவன் இறந்தபின் அந்தப் பெண் அழக்கூடாது. வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு நகைகளை அணிந்து கொண்டு துயரங்களில் இருந்து விடுதலை பெற்றுக் கணவன் இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும்’ என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் கணவன் இருக்கும் இடம் அவனது சிதை என்றே கொள்ளப்படுகிறது. ‘சதி’ நடைமுறை மக்களிடையே இருந்ததை அதர்வண வேதமும் உறுதிப்படுத்துகிறது.
  • இந்தியாவில் பொ.ஆ (கி.பி) 13ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை இது அதிக அளவில் நடைபெற்றிருக்கிறது. நேபாளத்திலும் இன்றைய ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் ‘சதி’ நடைமுறையில் இருந்தது. தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளிலும் ‘சதி’ கடைப்பிடிக்கப்பட்டது. காக்கத்தியர்கள் ஆட்சிக் காலத்தில் ஏராளமான சதி சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பொன்னுருவில் கிடைத்த கல்வெட்டுத் தகவல் உறுதிப்படுத்துகிறது. இந்தியா வில் மட்டுமல்லாமல் கிரேக்கம், எகிப்து, சீனா, அமெரிக்க இந்தியர்கள் மத்தியிலும் அந்நாளில் ‘சதி’ வழக்கம் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
  • ஆண் தோற்றால் பெண்ணுக்குத் தண்டனை: கணவனுக்காகத் தன்னை அழித்துக் கொண்ட முதல் பெண் ‘சதி மாதா’ என நம்பப்படுகிறது. இதையொட்டி பல்வேறு புராணக் கதைகள் நாடு முழுவதும் நிலவுகின்றன. சதிக்கு நிகரான ஜோஹர் (Jauhar) வழக்கமும் அந்நாளில் வட இந்திய அரச வம்சத்தினரிடையே நிலவியது. குறிப்பாக ராஜபுத்திர வம்சத்தின் அடையாளமாக இது விளங்கியது. போரில் தங்கள் நாட்டு மன்னர்கள் தோல்வியுற்றால் தோற்றுவிட்ட நாட்டைச் சேர்ந்த பெண்கள் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காகக் கூட்டமாகத் தீயில் விழுந்து தங்களை அழித்துக்கொள்வது உண்டு. ஜோஹர் எனப்படும் இதுவும் ஒரு வகையில் ‘சதி’யே. கண்ணியமான வாழ்க்கை மறுக்கப்படுகிறபோது உயிரை மாய்த்துக்கொள்வது மேல் என்று அந்தப் பெண்கள் கருதினார்கள். போர்க்களத்தில் வெற்றிபெறுகிறவர்கள் தோல்வியுற்ற நாட்டுடன் சேர்த்து அந்த நாட்டுப் பெண்களையும் தங்கள் உடைமையாகப் பாவிக்கும் செயலின் மிக மோசமான விளைவுகளுள் ஒன்றுதான் பெண்கள் தங்களைத் தீயிலிட்டு அழித்துக்கொள்வது.
  • உடைமைச் சமூகத்தின் இழிவுகளின் தொடர்ச்சியாகவும் ‘சதி’யைப் புரிந்து கொள்ளலாம். அந்தக் காலத்தில் மன்னர்கள் இறந்துவிட்டால் அவர்களது உடைமைகளையும் அவர்களுக்குச் சேவகம் செய்தவர்களையும் அவர்க ளோடு சேர்த்துப் புதைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன்படிதான் கணவன் இறந்ததும் அவனுடைய உடைமைப் பொருளான பெண்ணும் தீயுனுள் தள்ளப்பட்டாள். பெண்கள் விரும்பித்தான் தங்களை மாய்த்துக்கொண்டார்கள் என்று சொல்லப்பட்டாலும் சமூக நிர்பந்தமே அவர்களை இறப்பை நோக்கித் தள்ளியது. பெண்கள் தங்களையே அழித்துக்கொள்ளும் ‘சதி’ என்பது அவர்களின் வாழ்வுரிமைக்கு எதிரானது.
  • மதரீதியான நம்பிக்கை, சமூக அழுத்தம், கல்வியறிவின்மை போன்றவையே அன்றைக்கு நிலவிய ‘சதி’க்குக் காரணம். கணவனுக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே இல்லை என்று சொல்லி அவர்களைக் கொல்லும் வழக்கத்துக்கு எதிராக இந்தியாவில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. பெண்களின் வாழ்வுரிமைக்கான குரலாக ஒலித்த அந்தக் குரல் யாருடையது?

பிக்காசோவின் ஓவியப் பெண்

  • உலகப் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் பாப்லோ பிக்காசோ. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். ‘வயோதிக கிடார் கலைஞன்’, ‘அவினானின் இளம்பெண்கள்’ உள்ளிட்ட இவரது ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை. இவரது ‘குவர்னிகா’ ஓவியம், ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரத்தின் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சிதைத்ததைப் பதிவுசெய்தது. பிக்காசோ டிசம்பர் 16இல் வரைந்த ஓவியம்தான் ‘சிவப்பு கைப்பிடி நாற்காலி’ (Red arm chair). இது பிக்காசோவின் பெண் உறவுகள் குறித்த ஒரு ஓவியம். ‘பெண்ணின் தலை’, ‘சிவப்புப் பின்புலத்தில் தலை’, ‘முத்தம்’ ஆகிய ஓவியங்களின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய ஓவியம். ஒரு சிவப்புக் கைப்பிடி நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண் இதுதான் இந்த ஓவியம். இந்த ஓவியத்தின் பெண் சரிவரக் காணமுடியாதபடி அரூபியாக இருக்கிறார். இது அவர் திட்டமிட்டதாக இருக்கலாம். அவரைப் பிரிந்து சென்ற அவரது முதல் மனைவி ஓல்கா கோக்லோவாவின் முகத்தை இந்த ஓவியப் பெண்ணின் முகம் ஒத்திருப்பதாகவும் சொல்வதுண்டு.

நன்றி: இந்து தமிழ் திசை (17– 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்