TNPSC Thervupettagam

கணினித் தொழில்நுட்பம் - சொல்லும் பொருளும்

December 23 , 2017 2539 days 3789 0
கணினித் தொழில்நுட்பம் - சொல்லும் பொருளும்

அண்மைய செய்திகளில் வெளிவந்த முக்கியமான கலைச்சொற்களின்   தொகுப்பு

- - - - - - - - - - - - -

 

1. பெருந்தரவுகள் (Big Data)

  • தரவுத்தள மேலாண்மைக் கருவிகள் அல்லது பாரம்பரிய தரவு செயலாக்க பயன்பாடுகளினால் செயல்முறைப்படுத்துவதற்கு கடினமாக உள்ள சேகரிக்கப்பட்ட பெரிய தரவுதளங்கள் மற்றும் சிக்கலான தரவுகளின் தொகுப்பே பெருந்தரவுகள் எனப்படும்.

விளக்கம்

  • வழக்கமான தரவு அமைப்புகளை செயல்முறைப்படுத்தும் திறனை அதிகரித்தல் மற்றும் வேறொரு முறையைப் பயன்படுத்தி தரவுகளிலிருந்து இலாபகரமான மதிப்பை பெற பெருந்தரவுகள் தேவைப்படுகின்றன.
  • தரவு ஈட்டல் (Data Capture), சேமிப்பு, ஆராய்தல், தரவு சீராக்கம் (Data Curation) , தரவு தேடல் மற்றும் பகிர்தல், தரவுப் பரிமாற்றம், காட்சிப்படுத்துதல், வினவுதல், தரவு புதுப்பித்தல் மற்றும் தகவல் தனியுரிமை ஆகியவை பெருந்தரவுகளை கையாளுகையின் போது சவாலாக உள்ளன.
  • சமூக வலைதளங்கள், வலைசேவை பதிவு, வாகனப் போக்குவரத்து உணரிகள், செயற்கைக்கோள் படங்கள், அலைபரப்பு ஒலிச்சேவைகள், வங்கிப் பரிமாற்றங்கள், இசைக்கோப்புகள், வலைபக்க தகவல்கள், அரசாங்க ஆவணங்கள், புவியிடங்காட்டி, வாகனங்களுக்கான தொலையளவியல், நிதிச் சந்தைத் தரவுகள் ஆகியவற்றிலிருந்து தரவு பெறப்படுகிறது.
  • இது நுகர்வோரின் குறிப்பிட்ட கேள்விகள், அவர்களின் கருத்துக்கள் மற்றும் பொருளின் தர அடையாளம் ஆகியவற்றிற்கு பதில் அளிக்கின்றன.
  • சமீபத்தில் முதன்முறையாக 2016-2017ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையானது பெருந்தரவுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது ஆகும். இதன்மூலம் பெருந்தரவுகள் சமீபத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

.

2. செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence)

  • செயற்கை நுண்ணறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு நுண் அறிவை உருவாக்குகின்ற முறை ஆகும். இது ஆங்கிலத்தில் ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence) என்றும் AI என்று சுருக்கமாகவும் குறிப்பிடப்படுகிறது. AI என்பது இயந்திரங்களால் காட்டப்படும் நுண்ணறிவுத் திறன் என்று எளிதாகக் கூறலாம்.

விளக்கம்

  • 1956 ஆண்டு மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஜான் மெக்கார்த்தியால் Artificial Intelligence என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.
  • இதன் செயல்முறையானது கற்றல் (தகவல்களைப் பெறுதல் மற்றும் தகவல்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள்), பகுத்தறிதல் (விதிகளைப் பயன்படுத்தி தோராயமான அல்லது திட்டவட்டமான முடிவை மேற்கொள்ளுதல்) மற்றும் தானே தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • செயற்கை நுண்ணறிவுத்திறனானது நிபுணத்துவ அமைப்பு, பேச்சுணரி (Speech recognition) மற்றும் இயந்திரக் காட்சித்திறன் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • சுகாதாரத்துறை, கல்வி, வணிகம், விண்வெளித் தொழில்நுட்பம், உற்பத்தி போன்ற அனைத்து துறையிலும் AI யின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
.

3. நரம்பு பின்னலமைப்பு (Neural Network)

  • நரம்பு பின்னலமைப்பு (Neural Network) என்பது தரவுகளின் தொகுப்பிலுள்ள அடிப்படை உறவுகளை அடையாளம் காணுவதற்கு மனித மூளை செயல்படுவதைப் போலவே, தொடர் வழிமுறைகளை பயன்படுத்தி அடையாளம் காண முயற்சிக்கும் செயல்முறை ஆகும்.

விளக்கம்

  • நரம்பு பின்னலமைப்பு என்பது உள்ளீடுகளின் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்படும் திறன் கொண்டது. அதனால் இந்த வலையமைப்பானது மறு வடிவமைப்புக்கு அவசியமின்றி உள்ளீடுகளுக்கு (Input) தகுந்தாற்போல் வெளியீடுகளை (Output) அளிக்கிறது.
  • நரம்பு பின்னலமைப்பானது மனித மூளையின் நரம்பணு வலையமைப்பை ஒத்துள்ளது. “நியூரான்” என்ற நரம்பு பின்னலமைப்பின் எளிய கணினி செயல்பாடானது தகவல்களைப் பெறுதல் மற்றும் செயல்படுத்துதல் பணியை அதன் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு செயல்படுத்துகிறது.
  • இதற்கு செயற்கை நரம்பு பின்னலமைப்பு (Artificial Neural Networks – ANN) என்று பெயர்.

.

4. QR குறியீடு: (விரைவு எதிர்வினைக் குறியீடு)

  • QR குறியீடு என்பது குறிப்பிட்ட தகவல்கள் / செயல்பாடுகளை உள்ளடக்கிய இருபரிமாண அணிவரிசைக் குறியீடு ஆகும்.

விளக்கம்

  • QR குறியீடானது முதன் முதலில் ஜப்பானில் உள்ள வாகனத் தொழிற்துறையில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டது.
  • பட்டைக் குறியீடு (Barcode) என்பது இயந்திரத்தால் வாசிக்கக்கூடிய ஒளியியல் அடையாளக் குறியீடாகும். இது இணைக்கப்பட்டுள்ள பொருளைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது.
  • QR குறியீடானது நான்கு வரையறுக்கப்பட்ட குறியீடுகளினால் (எண்கள், எழுத்தெண், பிட்/பைட் மற்றும் கான்ஜி) தகவல்களை திறம்பட சேமிக்கின்றது.
  • சமீபத்தில் பாரத் QR குறியீடு எனும் குறியீடு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக தொடங்கப்பட்டது.
  • பாரத் QR குறியீடானது நான்கு முக்கிய பணம் செலுத்தும் நிறுவனங்களான மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விசா மற்றும் தேசிய நிதிப்பரிவர்த்தனை வாரியம் (National Payment Corporation Of India - NPCI) ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

.

5. பொருட்களின் இணையம் (Internet of Things)

  • பொருட்களின் இணையம் என்பது இயற்பொருட்களின் பிணைப்பாகும் அல்லது மின்னணுவியல், மென்பொருள், உணரிகள் மற்றும் இணைய அணுக்கம் பதிக்கப்பட்ட இயற்பொருட்களின் இணையமாகும். இந்த இணையம் மூலம் இயற்பொருட்கள் மற்றும் மனிதர்களிடையே தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

விளக்கம்

  • இது மனித செயல்பாடுகளின் அவசியமின்றி இயந்திரங்களுக்கிடையே (Machine to Machine communication) தகவல்கள் பரிமாறிக்கொள்ளும் முறையாகும்.
  • தகவல் பரிமாற்றமானது கம்பி முறை அல்லது கம்பியற்ற முறையால் நடைபெறுகிறது.
  • தானியங்கிகள், ஸ்மார்ட் நகரம், தொழில்துறை உற்பத்தி, சுகாதார அமைப்பு மற்றும் வாகன தொழில் ஆகியற்றில் இதன் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.

.

6. மெய்நிகர் உண்மைத் தோற்றம் (Virtual Reality)

 

  • மெய்நிகர் உண்மைத் தோற்றம் என்பது கணினித் தொழில் நுட்பம் ஆகும். இது கணினி மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், ஒலிகள் மற்றும் பிற புலன் உணர்வுகளை கொண்டு மெய்யுருவம் போன்ற சூழலை உருவாக்குதல் ஆகும்.

விளக்கம்

  • ஒரு நபர் மெய்நிகர் உண்மைத் தோற்ற உபகரணங்களைப் பயன்படுத்தி செயற்கையான உலகை பார்ப்பதோடு அவற்றின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பொருட்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
  • பார்த்தல், தொடுதல், கேட்டல் மற்றும் நுகர்தல் போன்ற உணர்வுகளை செயற்கை முறையில் மெய்நிகர் உண்மைத் தோற்ற தொழில்நுட்பம் உணரச் செய்கிறது.
  • மெய்நிகர் உண்மைத் தோற்றத்தின் பயன்பாடுகள் - சுகாதாரம், உளவியல் சிகிச்சை, பாதுகாப்பான வளையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், நினைவாற்றல் சிகிச்சை, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பயிற்சி அளித்தல், பேச்சு பயிற்சி மற்றும் ஆளுமைப் பயிற்சி.

.

7. இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality)

  • டிஜிட்டல் தகவல்களை பயனீட்டாளரின் தற்போதைய சூழலுடன் ஒருங்கிணைப்பது இணைப்பு நிஜமாக்கம் அல்லது ஒன்றுபடு நிஜமாக்கம் எனப்படும்.
  • மெய்நிகர் உண்மைத் தோற்றம் போல இது முழுவதும் செயற்கைச் சூழுலை உருவாக்குவது இல்லை. இணைப்பு நிஜமாக்கமானது ஏற்கனவே உள்ள சூழலில் அதன் மேல் புதிய தகவல்களை சேர்ப்பதாகும்.

விளக்கம்

  • முப்பரிமாணம் (3D): உங்களால் உலகினை முப்பரிமாணத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் = ஷாருக்கான் உங்கள் முன் நிற்பது போல காணலாம்.
  • மெய்நிகர் உண்மைத் தோற்றம் (VR): உங்களால் முப்பரிமாண உலகை உணர முடியும் = உங்களால் ஷாருக்கானுடன் பேசவும் நடனமாடவும் முடியும்.
  • ஒன்றுபட்ட நிஜமாக்கம் (Merged Reality): உங்களால் உண்மையான மற்றும் போலியான முப்பரிமாண உலகை ஒன்றிணைக்க முடியும் = தொழில்நுட்பம் மூலம் ஷாருக்கான் உருவத்தினை (Virtual) உங்கள் அறைக்கு (Real) கொண்டு வரமுடியும். உதாரணம்: கடற்பயணம் - மேம்படுத்தப்பட்ட புவியிடங்காட்டியானது இணைப்பு நிஜமாக்கத்தைப் பயன்படுத்தி ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு சென்றடைவதை எளிதாக்கும். அலைபேசி புகைப்பட கருவிகளை புவியிடங்காட்டியுடன் இணைப்பதன் மூலம், பயனீட்டாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையின் தற்போதைய நிலையை தனது வாகனத்தின் திரையில் காணலாம். இது வாகனம் நகர்ந்து செல்வதுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
  • எ.கா: போக்கிமான் கோ கைபேசி விளையாட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹோலோ லென்ஸ், நோக்கியா நிறுவனத்தின் சிட்டி லென்ஸ், இஸ்ரோவின் SAAKAR செயலி.

.

8. மேகக் கணிமை:- (Cloud Computer)

  • மேகக் கணிமை என்பது கணினி உலகில் பொதுவாக ‘மேகம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் தேவைக்கேற்ப சேமிக்கப்பட்ட வளங்கள்/சேவைகள் ஆகியவற்றை தரவு நிறுவனங்களிலிருந்து இணையம் மூலமாக பெற்று பயன்படுத்துதல் ஆகும்.

விளக்கம்

  • சில கணினி வளங்கள் மற்றும் அச்சேவை வழங்குனர் பற்றிய அட்டவணை.

வகை நோக்கம் வழங்குநர் (உதாரணம்)
அடிப்படை வசதிகள் சேவை (மற்றும்) உள்கட்டமைப்பு சேவை (Iaas) முழு அமைப்புகளும் (மெய்நிகர் இயந்திரங்கள்) பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும். ஒதுக்கப்பட்ட வளங்களுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி இணைய சேவை வழங்குநர் மூலம் பயனீட்டாளர் பயன்படுத்திக்கொள்ளலாம்.     அமேசான்
பணித்தள சேவை (Paas) இந்த அமைப்பில் இயக்குதளம், மென்பொருள் போன்ற முழுஅமைப்புகளும் பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கூகுள் செயற்பொறி
மென்பொருள் சேவை (Saas)   பொதுவாக இந்த மென்பொருளானது சேவை வழங்குனர்களால் அளிக்கப்படும். பயனீட்டாளர்கள் சந்தா அடிப்படையில் சேவையை பெற முடியும்.   யாஹு, ஜி மெயில்
சேமிப்பு சேவை (STaas) கோப்புகளை சேமிக்க தனியாக சேமிப்புக் கருவிகள் வாங்காமல், பணம் செலுத்தி சேமிப்புத் தளத்தை பெற முடியும். வின்டோஸ் ஸ்கை டிரைவ்

.

9. தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware)

  • தீங்கிழைக்கும் மென்பொருள் என்பது அங்கீகரிக்கப்பட்ட பயனீட்டாளரின் ஒப்புதலின்றி தரவுகளை அணுகவும் பயன்படுத்தவும் வடிவமைக்கப்பட்டதாகும்.
  • தீங்கிழைக்கும் மென்பொருளுக்கான உதாரணம்.
    • வைரஸ் (Virus) – ஒரு மென்பொருள் / கோப்பு தன்னைத்தானே பலமுறை பெருக்கிக் கொள்ளுதல்
    • வார்ம்ஸ் (Worms) – ஒரு மென்பொருள் / கோப்பு தன்னைத்தானே பலமுறை பெருக்கிக் கொண்டு வலையமைப்பில் பரவுதல்.
    • ட்ரோஜன் (Trojan) – பொதுவாக செயல்படுவது போல் தோன்றினாலும், கணினியின் பாதுகாப்பை முடியடிக்கும்.
    • ஸ்பைவேர் (Spyware) – கணினியின் செயல்பாடுகளையும் இயங்கும் தடங்களையும் அனுமதியின்றி இரகசியமாக கண்காணிக்கும்.
    • ஸ்பாம் (Spam) – தேவையில்லாத செய்திகள் இணையம் அல்லது இமெயில் மூலம் பரவுதல்.
    • ஃபிஷிங் (Phishing) – கடவுச்சொல் / வங்கி விபரங்களை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும். உதாரணம் – நீங்கள் பரிசுத்தொகை வென்றுள்ளீர்கள் என்பது போன்ற குறுஞ்செய்தி அனுப்பி தகவல்களை பெறும்.

.

10.ரான்சம்வேர் (Ransom ware)

  • ரான்சம்வேர் என்பது தீங்குவிளைவிக்கும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது கணினி பயன்படுத்துவதை தடை செய்து விடுகிறது, பின்பு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்திய பின்பே அதிலிருந்து விடுவிக்கிறது.

விளக்கம்

  • ரான்சம்வேர் என்பது தீங்கிழைக்கும் மென்பொருட்களின் துணைக்குழு ஆகும்.
  • அனைத்து ரான்சம்வேர்களுக்கும் தீங்கிழைக்கும் மென்பொருள் ஆகும். ஆனால் அனைத்து தீங்கிழைக்கும் மென்பொருள்களும் ரான்சம்வேர் இல்லை.
  • இந்த ஊடுருவலானது ஒரு ஃபிஷிங் தாக்குதல் ஆகும். அனுமதியற்ற ஊடுருவல் என்பது மின்னஞ்சலை திறக்கும்போது அதில் இணைக்கப்படும் தீங்கிழைக்கும் மென்பொருள் (Wanna Crypt 2.0) மூலமாக நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்வானது உலகம் முழுவதிலும் செயல்படுத்தப்படுகிறது.

.

- - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்