TNPSC Thervupettagam

கண்களைக் காதலிப்போம்

October 14 , 2023 459 days 288 0
  • நாற்பது வயது நபர் ஒருவர் கண் முழுவதும் சிவந்து வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரிடம் வந்துள்ளார். அவரைக் கண் மருத்துவர் பரிசோதித்தபோது கண்ணின் கருவிழியில் இரும்புத்துகள் ஒட்டி இருப்பதைக் கவனித்தார். மேலும் அவருடைய இரண்டு கண்களின் கருவிழி முழுவதும் ஆங்காங்கே பல தழும்புகள் காணப்பட்டன. அதனால் அவருடைய பார்வைத்திறன் குறைவாகவே இருந்தது.
  • எப்படி இவ்வாறு நடந்தது என்று கண் மருத்துவர் கேட்க, “தான் லேத் வேலை செய்வதாகவும், வேலையின்போது அடிக்கடி கண்ணில் தூசி விழும் என்பதால், பல நேரம் தானே மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி கண்ணில் ஊற்றிகொள்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார். வேலை செய்யும்போது பாதுகாப்பு கண்ணாடி போட்டுக்கொள்வீர்களா என மருத்துவர் கேட்டார்.
  • “கண்ணாடியா? நம்ம வேலைக்கு அதெல்லாம் ஒத்துவராது டாக்டர்” என்று நோயாளி கூறியுள்ளார். வாகனம் பழுது நீக்கும் பணிமனைகள், இரும்பு வேலை செய்யும் லேத் போன்றவற்றில் வேலைசெய்யும் பலர் தங்களுக்குத் தெரியாமல் பார்வையை இழந்து வருகிறார்கள் என்பது துயரமான உண்மை.

அலட்சியம் கூடாது

  • ஒரு மனிதனின் கண்ணில் உள்ளே கறுப்பாகத் தெரியும் கருவிழி வெளிப்பகுதி, நமக்குக் கறுப்பாகத் தெரிந்தாலும் அது நிறமற்ற ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி போன்ற அமைப்பாகும்.
  • அதில் அடிக்கடி காயம் ஏற்பட்டால் அதில் தழும்பு உண்டாகிப் பார்வையைப் பாதித்துவிடும். இது கண்ணில் நிரந்தரமாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலருக்குத் தெரியாது. இதனைத் தடுக்கப் பணிமனைகளில் வேலை செய்பவர்கள் கண்டிப்பாகப் பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். அப்போது இரும்புத் துகள்கள் கண்ணில் பட்டு காயம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • அடுத்த நிகழ்வு, இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் கண் சிவந்து, கண்ணில் மிக வலியுடன் கண் மருத்துவரைப் பார்க்கச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவரின் கருவிழி முழுவதும் புள்ளி புள்ளியாகக் காயம் இருப்பதைக் கண்டார்.
  • என்ன கட்டிட வேலை செய்கிறீர்களா எனக் கண் மருத்துவர் கேட்க, ஆமாம் என்றார் அந்த இளைஞர். கட்டிட வேலை செய்யும் எலெக்ட்ரீசியன்கள் கட்டிடத்தின் சிலப் பகுதிகளை உடைக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு வேலை செய்வதில்லை. இதனால் கண்ணில் சிமெண்ட், மண் துகள்கள் விழுந்து கருவிழி பாதிப்பை ஏற்படுத்தும். இவை தொடர் நிகழ்வுகளாக நடந்து கொண்டிருக்கின்றன.

புற ஊதாக் கதிர்கள்

  • நாம் பயன்படுத்தும் வெல்டிங் ஒளி புற ஊதாக் கதிர்களைக் கொண்டது. அதிக வீரியம்மிக்க புற ஊதாக் கதிர்களைத் தொடர்ந்து பார்க்கும்போது அது கண்ணின் கருவிழி, கண் நரம்பின் மையப்பகுதியை பாதிக்கும். அதாவது வெல்டிங் ஒளியை நேரடியாகப் பார்க்கும்போது கண் கருவிழியில் காயம் ஏற்பட்டு கண் வலி, சிவத்தல், உறுத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
  • பாதுகாப்பு கண்ணாடி இல்லாமல் தொடர்ந்து வெல்டிங் செய்பவர்களுக்கு கண் நரம்பின் மையப்பகுதி (Macula) பாதிக்கப்படும். இது சரிசெய்ய முடியாத பாதிப்பாகும்.
  • உலகில் 98% தொழில் சார்ந்த கண் பாதிப்பு, பார்வையிழப்பை விழிப்புணர்வு மூலமும் முறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு சாதனங்களுடன் வேலை செய்வதன் மூலமும் தடுக்கலாம். வேலை செய்யும் இடங்களில் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளுக்கு முறையான முதலுதவி, உடனடிக் கண் சிகிச்சை அவசியம்.
  • முக்கியமாக கட்டிடம் கட்டும் தொழிலாளர், கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களிடம் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

அறியாமை கூடாது

  • நாற்பது வயதுமிக்க பெண் ஒருவர் கழிவறை கழுவ ஆசிட் பாட்டில் மூடியை அவசரமாக திறந்தபோது பாட்டிலில் உள்ள ஆசிட் கண்ணில் பட்டுவிட்டது. பொறுக்க முடியாத கண் வலியுடன் வந்த அந்தப் பெண்ணைப் பரிசோதித்த கண் மருத்துவர், அவருக்குச் சிகிச்சை அளித்து பார்வையைக் காப்பாற்றினார். இப்படி ஆசிட் கண்ணில் அடித்துவிட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?
  • கண்ணில் ஆசிட் அடித்து விட்டால் உடனடியாக சுத்தமான குடிக்கும் தண்ணீரைத்தொடர்ந்து ஊற்றி கண்களைக் கழுவ வேண்டும். உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். ஆசிட் பாதிப்பிற்கு உடனடி சிகிச்சை அவசியம். உடனடி சிகிச்சை செய்யவில்லை என்றால், பார்வையை இழக்க நேரிடும். மேலும் ஒரு முறை கொடுத்த மருந்தை மருத்துவரை கேட்காமல் நீங்களாகவே இட்டுக்கொள்ளக் கூடாது. சுய மருத்துவமும் கூடாது.
  • பூஞ்சைத் தொற்று: பெரும்பாலும் விவசாய வேலை செய்பவர்களின் கண்ணில் மண் விழுந்து விட்டாலோ, கண்ணில் குச்சி குத்தி காயம் ஏற்பட்டுவிட்டாலோ உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • காரணம், விவசாயம் செய்யும் காட்டில் உள்ள மண், குச்சி, குப்பையில் பூஞ்சைக் கிருமி இருக்கும். இதனால் காயம் ஏற்படும்போது நம் கண்ணில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு, நம் கண் கருவிழியில் புண் ஏற்படலாம். பூஞ்சைத் தொற்றைச் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அது கண்ணின் உள் பகுதியில் பரவி பார்வை முழுவதும் பறிபோகும்.
  • பெரும்பாலும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் கண்ணில் அடிப்பட்டு புண் ஏற்பட்டவுடன், மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கி ஊற்றிக்கொள்கின்றனர் புண், கிருமித்தொற்று அதிகமாகும்போது கருவிழி முழுவதும் பாதிக்கப்பட்டு, கருவிழி மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விவசாய வேலை செய்யும்போது கண்ணில் அடிப்பட்டால் கவனிக்க வேண்டியவை

  • 1. அடிபட்டவுடன் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும்.
  • 2. தானாகச் சரியாகிவிடும் என வீட்டில் இருக்கக் கூடாது. மருத்துவரை அணுகாமல் நீங்களாக மருத்துவம் பார்த்துக்கொள்ளக் கூடாது.
  • 3. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி ஊற்றக் கூடாது.
  • 4.கருவிழிப் புண்ணுக்கு மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பார்வை நாள்

  • உலக பார்வையிழப்பு தடுப்பு அமைப்பு (International Agency for the Prevention of Blindness -IAPB), உலக சுகாதார நிறுவனம் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வியாழக்கிழமை உலகப் பார்வை தினத்தைக் கடைபிடித்துவருகின்றன. அந்நாளில் பார்வையிழப்பைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • அதன் அடிப்படையில் பார்வை இழப்பு பற்றியும், அதனைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த ஆண்டின் இலக்காக நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்