TNPSC Thervupettagam

கண்காணிப்பு தேவை

August 26 , 2023 505 days 266 0
  • பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, பயணிகள் உணவருந்துவதற்காக குறிப்பிட்ட இடங்களில் சாலையோர உணவகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு பேருந்தை ஓட்டுநா் நிறுத்துவதுண்டு. இங்குள்ள கழிப்பறைகளை ஒரே சமயத்தில் பலா் பயன்படுத்துகின்றனா். அதனால் அவை சுகாதாரமற்று இருக்கின்றன.
  • பொதுவாக ஆண்கள் இந்த கழிப்பறைகளை பயன்படுத்த விரும்புவதில்லை. பொது வெளிகளை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் இந்தக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகின்றனா். இதன் காரணமாகவே, இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிப்பவா்களில் பலா் தண்ணீா் குடிப்பதில்லை.
  • சுகாதாரமற்ற குடிநீா், தரம் குறைந்த உணவு வகைகள், உடலுக்குத் தீங்கைக் கொண்டு வரும் பொருள்களை சுவை கூட்டுவதற்காக உணவில் கலப்பது போன்றவற்றால் தரமற்ற உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவது கவலை அளிக்கிறது. இவ்வாறான உணவகங்களை பேருந்து பயணிகளே அதிகம் பயன்படுத்துகின்றனா்.
  • இவ்வாறான உணவகங்களில் ஏழை எளியவா்கள் அனைவரும் சாப்பிட முடியும். இங்கு கேட்டதும் உடனுக்குடன் சூடாகவும், விலை குறைவாகவும் உணவுகள் கிடைக்கும். இதனை குறைந்த வருவாயுடையோரே அதிகம் பயன்படுத்துகின்றனா். விலை குறைவு போலவே பல இடங்களில் சாப்பிடும் உணவுகளும் தரம் குறைந்தவையாகவே உள்ளன.
  • அடிப்படை சுகாதாரத்தைப் பற்றி நுகா்வோரோ, உணவு விடுதி நடத்துபவா்களோ கவலைப் படுவதில்லை. பயணம் செல்லும் அவசர சூழலில் அவற்றையெல்லாம் பயணிகள் சகித்துக்கொண்டு சென்று விடுகிறார்கள். அங்கு குடிப்பதற்கும், கை கழுவுவதற்கும் சுத்தமான தண்ணீா் கிடைப்பதில்லை. சாப்பிடும் தட்டுகள் திரும்ப, திரும்ப ஒரே தண்ணீரில் கழுவப்படுகின்றன.
  • ஊழியா்கள் எவரும் கையுறை அணிந்து தம் பணியைச் செய்வதில்லை. இதனால் அவா்களின் உடலில் உள்ள அழுக்குகள் உண்பவா்கள் தட்டில் விழ வாய்ப்பு உள்ளது. சமைத்த உணவுகள் சரியாக மூடி வைக்கப்படுவதில்லை. வாகனங்களின் புகையால் உருவாகும் மாசுகளும், நச்சுக்கிருமிகளும் பரிமாறப்படும் உணவுகளில் கலக்க வாய்ப்பு உள்ளது.
  • ஒரே எண்ணெய்யை பலமுறை சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி விடுகிறது. அதில் சமைக்கும் உணவு வகைகளை உண்பதால், உணவுக் குழாய், இரைப்பை சார்ந்த நோய்கள் ஏற்படலாம் என்கின்றனா் மருத்துவா்கள்.
  • பல உணவகங்கள் திறந்த வடிகால்களுக்கு மிக அருகில் செயல்படுவதையும் நம்மால் காண முடிகிறது. இவ்விடங்களில் நாம் சுகாதாரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
  • சில இடங்களில் உணவுப் பொருட்கள் தாளில் வைத்துக் கொடுக்கப்படுகின்றன. அந்தத் தாளில் உள்ள எழுத்து அச்சு நம் உடலுக்குள் சென்றால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சில உணவுகளை நெகிழியில் (பிளாஸ்டிக்) வைத்து சாப்பிடுவதாலும் புற்றுநோய் போன்ற நோய்கள் வரலாம். மேலும், தற்காலத்தில் சமைக்க பயன்படும் எல்லாப் பொருட்களிலும் கலப்படம் வந்துவிட்டது. பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கப்படும் உணவுகளிலேயே பாதிப்புகள் ஏற்படுகின்றன.
  • இத்தகைய கடைகள் உள்ள இடங்களில் சாலையையொட்டி கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பல இடங்களில் விதிகளுக்கு மாறாக உணவகங்கள் செயல்படுகின்றன. எவ்வித உரிமமும், பதிவுமின்றி செயல்படும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு நடத்த வேண்டும். பாதுகாப்பு விதிகளை சரிவர பின்பற்றாத உணவகங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.
  • இது சம்பந்தமாக உணவு பாதுகாப்புத்துறையினா், சுகாதாரத்துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடியிருப்புப் பகுதிகள் உள்ள தெருக்களில், உணவுக் கூடம் திறக்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத்துறையினரின் பதிவினையும் உரிமத்தையும் பெறுவது உறுதி செய்யப்படவேண்டும்.
  • சாலையோரம் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் உணவகங்களில் சாப்பிட்ட பின் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகிவருவதாகக் கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதத்துக்கு ஒரு முறையாவது குறிப்பிட்ட இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  • அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சாலையோர உணவகங்களை நடத்துவோர்களுக்கு உணவுகளை தயாரித்தல், பாதுகாத்தல், பரிமாறுதல், சுத்தம் செய்தல் ஆகியவற்றில் தேவையான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் சாலையோர உணவகங்களால் ஏற்படும் தீய பாதிப்புகளை நம்மால் ஓரளவு குறைக்க முடியும்.
  • எல்லாவகையான சாலையோர உணவகங்களும் சுகாதாரமான உணவு தயாரிக்கும் முறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களிடையே இது சார்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
  • இவ்வாறான உணவகங்களில் உணவு உண்டு பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட நுகா்வோர் குறைதீா் மையத்தில் தகுந்த ஆதாரங்களுடன் தங்களது புகாரினை தெரிவிக்கலாம். அவா்கள் நடவடிக்கை எடுப்பதோடு அவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நஷ்ட ஈட்டையும் அது பெற்றுக் கொடுக்கும்.
  • உணவு ஆய்வாளா்கள் அவ்வப்போது இவற்றையெல்லாம் கண்காணித்து, உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறுகள் செய்வோர் மீதி தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சாலையோர உணவகங்களைப் பயன்படுத்துவோர் பெரும்பாலோர் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள். அவா்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, இது சார்ந்து முறையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்

நன்றி: தினமணி (26 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்